NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்!

 
           படிப்பு சுமையாகிவிட்ட இக்காலத்தில், அதைச் சுவையாக்குவது எப்படி? என்று யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. பிறந்த குழந்தைக்கு 3 வயது எப்போது ஆகும் என்று காத்திருக்கும் பெற்றோர், எங்கேயாவது பள்ளியில் தள்ளி விட்டு விட்டு அவசர அவசரமாக வேலைக்கு ஓடும் காலம் இது. எனவே  குழந்தைகளின் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அத்தனைக்கும் பொறுப்பு, பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள்தாம்.

             ""ஆசிரியர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் மாணவர்களிடம் பழகும்போது ஒரு தாயைப் போல நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுக்குள் உள்ள தாய்மை வெளி வர வேண்டும்'' என்கிறார் ஸ்ரீ ப்ரியா. சென்னை யானை கவுனி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் அவரின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக உள்ளது:
             ""இப்போது ஒரு வகுப்பில் 60 - 70 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு வேலைச் சுமை கூடிவிடுகிறது. மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டிய கட்டாயம். ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக செயல்பட நேரிடுகிறது. ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாகக் கவனிக்க நேரமில்லை.
                இருந்தாலும் இந்தச் சூழ்நிலையிலும் கூட மாணவனை உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு இருக்கவே செய்கிறது. பிற வேலைகளைப் போல ஆசிரியர் வேலையை நினைக்க முடியாது. ஏனென்றால் ஆசிரியர்கள் வேலை செய்வது உயிருள்ள குழந்தைகளிடம்.
              முதலில் கூட்டுக் குடும்பம் இருந்தது. தாத்தா, பாட்டிகளிடம் குழந்தைகள் கதைகள் கேட்டார்கள். தங்களுடைய மனதில் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இப்போது வீட்டில் தாத்தா, பாட்டிகள் இல்லை. தனிக்குடித்தனமாகிவிட்டது.  அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில்,  குழந்தைகளுடன் அவர்களால் நன்கு பழக முடியவில்லை. குழந்தைகளின் மனதில் உள்ளதைத் தெரிந்து கொள்ள யாரும் விரும்புவதுமில்லை. அதற்கு நேரமும் இல்லை. குழந்தைகளிடம் உள்ள குழந்தைமை இப்போது தொலைந்து போய்விட்டது. எனவே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள்தாம் குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஆசிரியர்கள் அம்மாவாக மாற வேண்டியிருக்கிறது. 
             என்னைப் பொறுத்தவரையில் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன். குழந்தைகளிடம் எதையும் கண்டிப்பாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  எனவே ஆசிரியர்கள் குழந்தைகளின் மனது தெரிந்து பழக வேண்டும்.
            நான் என் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன். வகுப்பறையில் குப்பைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பேன். மாணவர்கள் குப்பை போட்டால்,  ஏன் குப்பை போட்டீர்கள்? என்று அவர்களைத் திட்டமாட்டேன். நானே வகுப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். அதைப் பார்க்கும் மாணவர்கள் அடுத்தமுறை நான் சொல்லாமலேயே அவர்கள் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். 
               மாணவர்கள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்று எல்லாரும் இப்போது வற்புறுத்துகிறோம். எதிர்பார்க்கிறோம். ஆசிரியர் மாணவர்களைக் கசக்கிப் பிழிந்து நல்ல மார்க் எடுக்க வைக்க முடியாது. ஆசிரியரைப் பிடித்தால்தான் மாணவர்களுக்கு சப்ஜெக்ட் பிடிக்கும். அப்போதுதான் நல்ல மார்க் எடுப்பார்கள்.
பெரியவர்களுக்கு இருக்கும் ஆயிரம் டென்ஷன்களைப் போலவே குழந்தைகளுக்கும் இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் மன உணர்வுகளைப் பெரியவர்களாகிய நாம், புறக்கணித்துவிடுகிறோம். ஓர் ஆசிரியர் தனது மாணவர்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொண்டு, அன்பாகப் பேசினால் மாணவர்களை நன்றாகப் படிக்கும்படி செய்ய முடியும். அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க முடியும். 
             என்னிடம் பயிலும் மாணவர்களில் பலர் ஏழைகள். ஏன் ஹோம் ஒர்க் முடிக்கவில்லை என்று அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வேன். அவர்கள் சொல்லும் பதில்களைக் கேட்டால் சில நேரங்களில் அதிர்ச்சியாக இருக்கும். அப்பா இல்லாத குழந்தைகள். குடித்துவிட்டு வீட்டில்  ரகளை செய்யும் அப்பாக்கள். கூலி வேலை செய்யும் அம்மா.  உணவுக்குக் கூட வழியில்லாத சூழ்நிலை உள்ள குழந்தைகள் என  அவர்களின் சூழ்நிலைகளைத் தெரிந்து கொண்டால், எப்படி ஹோம் வொர்க் செய்யாததற்காக அவர்களைத் தண்டிக்க முடியும்?
           இந்தச் சூழ்நிலையில் வளரும் சில மாணவர்கள் 16 வயதுக்குள்ளாகவே போதை மருந்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். அவர்களுடைய பிரச்னைகளை அன்புடன் பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்பதால் அப்படி ஆகியிருக்கிறார்கள். எனவே நான் என் மாணவர்களிடம் ஓர் அம்மாவைப் போல அன்பாக நடந்து கொள்கிறேன். அவர்களும் என்னிடம் மிக அன்பாக நடந்து கொள்வதுடன், அவர்களுடைய குறைகளையும் திருத்திக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கிறார்கள். நிறைய மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.
            ஏழை மாணவர்களின் பிரச்னைகளை  எல்லாம் தெரிந்து கொண்டதால், ஏழை மாணவர்களுக்கு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும்வகையில் "கோல்டு ஹார்ட் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தேன். என்னிடம் படித்த மாணவர்கள் பலர் என்னுடன் இணைந்து செயல்படுகிறார்கள். 
                 குடிசைப் பகுதியில் வாழும் ஏழை மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் மூலமாகக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம். சென்னையில் கொருக்குப்பேட்டை, யானைக் கவுனி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறோம். 
               சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறோம். அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பண்டிகைகளை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறோம். "தித்திக்கும் தீபாவளி' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம்.  தீபாவளியன்று அந்தக் குழந்தைகள் அனைவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்து, நம் வீட்டில் உள்ள குழந்தைகள் எப்படி தீபாவளியன்று மகிழ்ச்சியாக இருப்பார்களோ, அதைப் போல அவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கோலப் போட்டி என பல போட்டிகளை வைக்கிறோம். என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது இதைத்தான்:  அன்பு என்ற ஒன்றைத் தவிர, குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்க வேறு எந்த வழிகளும் இல்லை'' என்கிறார் ஸ்ரீ ப்ரியா




1 Comments:

  1. Madam,
    your approach is different and innovative one.As a teacher, you are role model to other teachers. you've taken good efforts towards student community.
    'GIVE THE WEAPON OF EDUCATION TO WAR AGAINST THE POVERTY '
    VAZHGA VALAMUDAN
    S.DEVI
    S

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive