NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐஎஸ்ஓ (ISO) தரச் சான்றிதழ் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி!

      பள்ளித் தலைமை ஆசிரியரின் முயற்சியால் கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு வசதிகளைப் பெற்று மாணவர்களை கவர்ந்து வருகிறது.

           அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை, தனியார் பள்ளிக்குக் கொண்டு சேர்க்கும் இன்றைய காலகட்டத்தில், தனியார்பள்ளியில் பயிலும் மாணவர்களை, அரசுப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் அதிசயம் நிகழ்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும், தமிழகத்தின் ஒரு மூலையில் உள்ள, ஒரு குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இது நடந்துள்ளது. முயன்றால் எதுவும் சாத்தியம்...

                ஐந்தாம் வகுப்பு படிக்கும் சத்தியபிரியாவின் தாத்தாவுக்கு செருப்பு தைக்கும் தொழில். பெற்றோருக்கு கூலி வேலை. இருந்தாலும், பள்ளியில் ஓய்வு நேரங்களில், மடிக்கணினியில், ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம். வீட்டில் மின்சாரம் இல்லாத மேகவண்ணன் படிப்பது, மூன்றாம் வகுப்பு. பள்ளியில் திரையிடப்படும், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மட்டற்ற பிரியம். வீட்டில் உப்பு நீரைப் பருகும் திலகவதி, வகுப்பு நேரங்களில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடிப்பதில் விருப்பம். இன்றும் எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியாத பெற்றோருக்குப் பிறந்த, நான்காம் வகுப்பு வினோதினி, வகுப்புக்கு வந்தவுடன் படிப்பது, ஆங்கில நாளிதழ். மேற்கத்திய, இந்தியப் பாணிக் கழிவறைகள் இரண்டு இருப்பதால், அங்கு படிக்கும் நாகேந்திரனுக்கு சிறுநீர் கழிக்க திறந்தவெளி தேவையில்லை.

           மாலையில் ஆம்னி வேனில் வீட்டுக்குச் செல்லும் போது, சக மாணவர்களைப் பார்த்துக் கையசைப்பது, கருணாவுக்கு பெருமிதம். சகலாவதிக்கு சதுரங்க விளையாட்டு; சுரேந்தருக்கு, குழந்தைகள் படிப்பதற்கான புத்தகங்கள். முனுசாமிக்கு, கேரம் போர்டு. இப்படி ஒவ்வொரு மாணவரின் தனித்தனி விருப்பங்களைப் பூர்த்தி செய்வது, இதெல்லாம் பெருநகரங்களில் உள்ள, சி.பி.எஸ்.., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பள்ளி என நீங்கள் நினைத்திருந்தால், உங்கள் எண்ணங்களை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். தமிழகத்தின் வறட்சி மாவட்டமான, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்தில் உள்ள கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் இது.

           மத்தூர் ஒன்றியத்தில் உள்ள, அரசு தொடக்கப் பள்ளிகள், ஒவ்வொன்றாக மூப்பட்டு வரும் நிலையில், இப்பள்ளி மட்டும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வருகிறது. ஒரு நாளைக்கு, நான்கு முறை மட்டுமே அரசுப் பேருந்து வரும் இந்தக் குக்கிராமத்தில், இப்படி ஒரு சாதனை எப்படிச் சாத்தியம் எனப் பொதுமக்களிடம் கேட்டால், அவர்களின் விரல்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணியை நோக்கியே நீள்கின்றன.

            2007 வரை, இந்தப் பள்ளியின் நிலைமை தலைகீழ். இம்மாவட்டத்தில், குழந்தைத் திருமணம் அதிகளவு நடப்பதால், பெரும்பாலோர், பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில்லை. மேலும், அருகில் உள்ள, பெங்களூருக்கு வேலைக்குச் செல்வதால், குழந்தைகளையும் கூட்டிச் செல்வர். அதுமட்டுமின்றி, இங்குள்ள செங்கல் சூளைகளில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதால், பள்ளிக்கு அனுப்புவதில்லை. மது பழக்கம், அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், தங்கள் குழந்தைகள் படிப்பு குறித்து, பொதுவாக தந்தைகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. இதனால், 30 பேராகக் குறைந்தது, மாணவர்களின் எண்ணிக்கை.

மாணவர்களின் படிப்பு, பெற்றோர்களின் கைகளில் இருக்கிறது. அதனால்,            முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். தினமும், மாலை நேரங்களில், கஞ்சனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்வேன். குழந்தைகள் படிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினேன். ஆரம்பத்தில், அப்பகுதி மக்கள் இப்பிரச்சினையைப் புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. தொடர்ச்சியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர். அதுதான் என் முதல் வெற்றிஎன்கிறார், தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி.

           பொதுமக்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினாலும், பிரச்சினை வேறொரு வடிவில் காத்திருந்தது. அது பள்ளியின் உள்கட்டமைப்பு பிரச்சினை. மலையடிவாரத்தில் பள்ளியின் இருப்பிடம் அமைந்திருந்ததால், சறுக்கு விளையாட்டு விளையாடும் வகையில், அதன் அமைப்பு இருந்தது. கழிவறை சுத்தமாக இருக்காது. சமையல்கூடம் பக்கம் போனாலே, வாந்தி வரும். பள்ளி வளாகத்தில் சுகாதாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எங்கு பார்த்தாலும் குப்பைகள். மேலும், மாலைக்கு மேல் சமூக விரோதிகளின் கூடாரமாகி விடும். பள்ளியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவில்லை என்றால், இருக்கும் மாணவர்களும், பள்ளியை விட்டு நின்று விடுவர் என உணர்ந்த வீரமணி, அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம், அனைத்து வசதிகளையும் பெற்றார். முதலில், பள்ளி வளாகத்தில் மண்ணை நிரவி, சமதளப்படுத்தினார். வளாகம் தயார். மற்றவை? தொடக்கப் பள்ளிகளுக்கு, அரசு வழங்கும் அனைத்து வசதிகளையும், போராடிப் பெற்றார். விளைவு, இப்போது, டைல்ஸ் தரை, சுத்தமான ஐந்து கழிவறைகள். பாதுகாப்பான சுற்றுச்சுவர். சூரிய ஒளியின் மூலம் மின்சக்தி பெறும் வசதி. வளாகம் முழுக்க விதவிதமான செடி கொடி, மரங்கள் இத்யாதி இத்யாதி எனப் பெருகியது.

இப்போது, அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. மாணவர்கள், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி பெற தொலைக்காட்சி, ஓவியங்கள் வரைய, மற்ற செய்திகள் தெரிந்துகொள்ள மடிக்கணினி, அனைத்து விதமான விளையாட்டுப் பொருட்கள், குழந்தைகளுக்கு எழுதப்பட்ட புத்தகங்கள். நூலகம் முழுக்க, ‘புதிய தலைமுறை’, ‘புதிய தலைமுறை கல்விவார இதழ்கள், நடுப்பக்க வாசகங்கள். குழந்தைகளுக்கு சொல்வதற்கு, பெரியவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் எனப் பயன்படும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பள்ளி, .எஸ்.., தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.

இரண்டாவது ஆண்டாக, இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி நடந்து வருகிறது. இப்பள்ளியின் பெருமை, அருகில் உள்ள படப்பள்ளி, புதுக்காடு, கயிற்றுக்காரன் கொட்டாய், கூராக்கம்பட்டி, குரும்பர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியதால், மத்தூரிலும், ஊத்தங்கரையிலும் உள்ள தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளைச் சேர்த்த பெற்றோர்கள், இப்போது, கஞ்சனூர் பள்ளியை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தனியார் பள்ளியையே மிஞ்சும் வகையில், உள் கட்டமைப்பு வசதி, செயல்முறைக் கல்வி, போதிய பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவை இருப்பதால், அருகில் உள்ள கிராமத்தினர், கஞ்சனூர் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வருகின்றனர். அதனால், மூடப்படும் நிலையில் இருந்த பள்ளியில், இன்று, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், படித்து வருகின்றனர்.

பக்கத்து ஊர்களில் பயிலும், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக, ‘கஞ்சனூர் இளைஞர் நற்பணி மன்றம்அமைத்துக் கொடுத்துள்ளார் வீரமணி. இம்மாணவர்கள் மூலம், பெற்றோர்களுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது. பள்ளிக்கூடமே இல்லாத ஊரில், தற்போது பட்டதாரி மாணவர்கள் உருவாகி வருகின்றனர். நற்பணி மன்றத்தில் உள்ள அவர்கள், மாலை நேரங்களில், எட்டாம் வகுப்புக்குமேல் பயிலும், அனைத்து மாணவர்களுக்கும் டியூஷன் எடுத்து வருகின்றனர். வீடுகளில் போதுமான வசதி இல்லை என்பதால், இரவு வரை, பள்ளியில் டியூஷன் நடக்கிறது. இக்காரணங்களுக்காக, மாவட்ட அளவில், பள்ளிகளுக்குத் தரப்படும் அனைத்து விருதுகளையும், இப்பள்ளி பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான விருதுகளும், கோப்பைகளும், நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடக்கும் பேச்சு, கட்டுரை, குறள் ஒப்புவித்தல் போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு மரம் நடும் விருப்பம் வர வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாணவரையும் ஒரு மரத்தை நடச் செய்து, அதைப் பராமரிக்கும் பொறுப்பு, அவர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் உள்ள தனிச் சிறப்பு, மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம். பிறந்த நாள் காணும் மாணவருக்கு, ஆசிரியர்களின் சார்பில், கிரீடமும் பரிசுப் பொருளும் வழங்கப்படும். மேலும், அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்படும்.

பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக, மாதம் ஒரு முறை, அவர்களின் குழந்தைகள் என்னென்ன படிக்கின்றனர்; அவர்களுக்கு எதில் விருப்பம், அதை எவ்வாறு முன்னேற்றுவது போன்ற பல்வேறு ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இதனால், பெற்றோர்களுக்கும், பள்ளிக்குமான நெருக்கம் மேலும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஆண்டு விழாவான கல்வித் திருவிழாவில், பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால், பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர்களும் கை கோர்க்கின்றனர்.

எந்த மாணவர் முகத்திலும் சோர்வு இல்லை; களைப்பு இல்லை; மாலை நேர மணி அடித்தவுடன், பள்ளியை வெறுத்து ஓடும் அவசரம் இல்லை; குறிப்பாக, பள்ளியின் எந்த இடத்திலும் பிரம்பு இல்லை. அந்தப் பள்ளி வளாகம் முழுவதும், சிரிப்பலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது மாணவர்களின் முகத்திலும் எதிரொலிக்கிறது. “நாங்கள் நல்ல சம்பளம்தான் வாங்குறோம். அதுக்கு உண்மையா இருக்கணும்னு முயற்சி பண்றோம். எங்களால, ஒரு சின்ன ஊர்ல மாற்றம் வந்துதுன்னா, அதை விட பெரிய விருது, வேற என்ன இருக்க முடியும் சார்என்கிறார் வீரமணி.


கஞ்சனூரில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருப்பதால், உயர்நிலை, மேல் நிலை வகுப்புகள் படிப்பதற்கு, ஊத்தங்கரைக்கும், மத்தூருக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் மாணவர்கள் உள்ளனர். எனவே, இதே ஊரில், நடுநிலைப் பள்ளியாவது அமைக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. அதுமட்டுமின்றி, இப்போது, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தாலும், போதுமான ஆசிரியர்கள் இல்லை. நன்றாகச் செயல்படும் இதுபோன்ற அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்க அரசு ஏதாவது செய்யுமா?




1 Comments:

  1. திரு.வீரமனி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதே அளவு பொறுப்போடு ஒவ்வொரு தலைமை ஆசிரியர்களும் நடந்துகொண்டால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். தனியார் பள்ளிகள் என்ற மோகம் நீங்கி , கல்வி என்ற போர்வையில் கொள்ளை நடக்காது. ஏழை பெற்றோர்களின் பணம் விரயமாகாது. தலைமை ஆசிரியர்களே தயவு செய்து முயற்சி எடுங்கள். ஒவ்வொரு ஆசிரியர்களும் இதற்கு ஒத்துழைத்து சமுதாயத்தை காப்பாற்றுங்கள்.......please.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive