NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்கல்வி தரம் குறையும்!

       பல்கலைக்கழக மானியக் குழுவின் சமீபத்திய தீர்மானம் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சர்ச்சைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, மானியக் குழுவின் முடிவு, இந்தியாவின் கல்வித் தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும் கடுமையாக பாதித்துவிடுமே என்பதுதான் நமது கவலை.

பல்கலைக்கழக மானியக் குழு என்கிற அமைப்பு, காலனிய அரசால் 1945-இல் மத்தியப் பல்கலைக்கழகங்களான அலிகார், பனாரஸ், தில்லி பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அவற்றிற்கு வழிகாட்டவும் அமைக்கப்பட்டது. 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் இந்த மானியக் குழுவின் அதிகாரத்திற்குள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது.
இந்தியப் பல்கலைக்கழகக் கல்வி குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவும், அவற்றை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் பரிந்துரைகள் தரவும் 1948-இல் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆலோ
சனையின் பேரில், 1952-இல் இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தரப்படும் மானியங்களைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் மட்டுமே வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. 1956-இல் பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பல்கலைக்கழகங்கள், இந்தியாவின் உயர்கல்வி, ஆசிரியர்கள் தகுதி ஆகியவை குறித்து முடிவெடுக்க இந்தக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கான நியமனங்களில் மானியக் குழுவின் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவைப் பற்றிய இந்தத் தகவல்களை எல்லாம் பதிவு செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டும், இந்திய உயர்கல்வியின் தரம் சர்வதேச அளவில் மெச்சும்படியாக இல்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம், பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், ஆசிரியர்களுக்குத் தேசிய தகுதித் தேர்வு நடத்துவதிலும் செலுத்தும் கவனத்தை, உயர்கல்வியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்து சிந்திப்பதில் காட்டுவதில்லை என்பதுதான்.
இந்தியாவில் 150 மத்தியப் பல்கலைக்கழகங்களும், 300-க்கும் அதிகமான மாநிலப் பல்கலைக்கழகங்களும், ஏறத்தாழ 100 தனியார் பல்கலைக்கழகங்களும், 130 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், உலகில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியிலில் இந்தியாவிலிருந்து ஒரு பல்கலைக்கழகம்கூட இல்லாத நிலைமைதான் காணப்படுகிறது.
ஆனால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் குறிப்பிட்டதுபோல, 80 ஆண்டுகளுக்கு முன்பு சி.வி. ராமன் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு பெற்றதற்குப் பின்னால், இந்தியாவில் ஆராய்ச்சி செய்து, நோபல் பரிசு பெற்றவர்கள் ஒருவர்கூட இல்லை. அது அமர்த்தியா சென்னோ, ஹர்கோவிந்த குராணாவோ, எஸ். சந்திரசேகரோ, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனோ யாருமே இந்தியப் பல்கலைக்கழகங்களில் தங்கள் ஆராய்ச்சியை நடத்தி வெற்றி கண்டவர்கள் இல்லை. வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்கள்.
உயர்கல்வியின் நோக்கங்களில் ஆராய்ச்சி முக்கியமான இடம் பெற்றாக வேண்டும். அப்போதுதான் சர்வதேச தர வரிசையில் இந்தியா மரியாதையான இடத்தைப் பிடிக்க முடியும்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் சமீபத்திய குறிப்பு, ஆசிரியர்கள் அதிக நேரம் பாடம் எடுப்பதில் ஈடுபட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலிருந்து விலக்களிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது. ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு அவர்களது ஆய்வுகள், மாநாடு, கருத்தரங்கங்கள் போன்றவற்றில் பங்கேற்பு ஆகியவை தகுதியாகக் கருதப்பட்டு வருகிறது. அதனால்தான், அதிக நேரம் பாடம் சொல்லிக் கொடுத்தால், மேலே குறிப்பிட்ட தகுதி மேம்பாட்டுக் காரணிகளிலிருந்து விதிவிலக்கு அளிப்பதாகப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்திருக்கிறது. உயர்கல்வியின் தரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஓர் அமைப்பிடமிருந்து இப்படியொரு ஆலோசனை வந்திருப்பது உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது.
எந்தவொரு கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியும் ஆராய்ச்சியும், ஆசிரியர்களின் திறன் மேம்பாடும், புதிய கண்டுபிடிப்புகள்,
சிந்தனைகள் குறித்த தகவல்களைப் பெற உதவும் மாநாடுகள், கருத்தரங்கங்கள் பேன்றவற்றின் பங்களிப்பும் இல்லாமல் மேம்பாடு அடையாது. ஆராய்ச்சி என்பது புதிய கற்பித்தல் முறைகள் குறித்த புரிதல் மட்டுமல்ல, தங்களது அறிவை விசாலப்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகளை முன்வைப்பதும்கூட. சொல்லிக் கொடுத்ததையே அதிக நேரம் சொல்லிக் கொடுத்துவிட்டு, ஆய்வு நடத்தாமல் இருந்தால், தர மேம்பாடு எப்படி சாத்தியப்படும்?
இந்த அறிவிப்பை எதிர்ப்பவர்கள், மேலே குறிப்பிட்ட அம்சங்களை எல்லாம் விட்டுவிடுகிறார்கள். கற்பித்தல் நேரத்தை அதிகரிப்பதன் மூலம் பல்கலைக்கழக மானியக் குழு, ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கிறது என்பதுதான் அவர்களது அச்சம். ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தாலும் தவறில்லை. ஆனால், தரம் குறைந்துவிடக்கூடாது என்பதுதான் நமது கவலை.
இந்தியாவில் உயர்கல்வி மேம்பட வேண்டுமானால், திறமையும் தகுதியுமுள்ள ஆசிரியர்கள் நிறையத் தேவை. ஆராய்ச்சிகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவது அதைவிடத் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற உளப்பூர்வமான அக்கறை தேவை!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive