NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளியில், தாய் மொழி வழிக் கல்வியில் படியுங்கள்..! - சீன தமிழ் விஞ்ஞானியின் ஆலோசனை.

             அவன் பெயர் சரவணன். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமம். சிறு கிராமத்தில் வசித்தாலும் நில புலன்கள் ஏராளம். வசதிக்கும் குறைவில்லை. இன்னும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில், அவர்கள் சொந்த தேவைக்கென்று இயற்கை விவசாயம் செய்வதால், அந்த இடத்திற்கு பறவைகள் அதிகமாக வரும். 
 
            அதனால் இயல்பாக அவனுக்கு பறவைகள் மீது ஈர்ப்பு அதிகம். பறவைகளுடன் பேசுவான், விளையாடுவான். மனிதர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்கவே விரும்பும் பறவைகளும், அவனுடன் விளையாடும். பறவைகள் மீது கொண்ட அலாதி காதலால், அவனுக்கு பறவையியல் (Ornithology) படிக்க வேண்டுமென்று விருப்பம் வந்தது. இந்த விருப்பம் வந்த போது, அவன் ஓசூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.  இணையத்தில் எப்படியோ தேடி சலீம் அலி மையத்தை பற்றியும் தெரிந்து கொண்டான். ஆனால், அவன் பெற்றோர்களுக்கு எப்போதும் பறவைகளை பிடித்ததில்லை. தங்கள் நிலத்தில் விளையும் சோளப் பயிர்களை சிதைக்கும் வில்லன்கள்தான் பறவைகள். இந்த புரிதலுடன் அணுகியதால், அவர்களால் பறவைகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை, பறவைகளின் காதலனான சரவணனையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மருத்துவர் ஆக வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தார்கள். கல்வி நிலையமும் அவன் பெற்றோருடன் இணைந்து கொண்டது. அவனால் அழுத்தங்களை தாங்க முடியவில்லை. முதலில் வீட்டார்களுடன் பேசுவதை நிறுத்தினான். பின் பள்ளியையும், பெற்றோரையும் பழி வாங்க எண்ணி, பத்தாவது வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தான். சமீபத்தில் அவனை ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்தேன். இறுக்கமான ஒரு மெளனத்திற்கு பின், அவன் பேசினான். பறவைகளை குறித்து துவங்கிய நிறைய பேசினான். அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவன், " உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை நீங்க கொல்லுவீங்களா சார்..? " என்றான். "நிச்சயம் முடியாது... என்னால் மட்டுமல்ல எவராலும் முடியாது..." என்றேன். " இல்லை சார்... அதெல்லாம் ச்சும்மா... இங்க எல்லாரும் அவங்களுக்கு மிகவும் பிடிச்சவங்களை தினமும் கொன்னுட்டுதான் இருக்கிறாங்க.... கொல்றதுன்னா ரத்தம் தெறிக்க கொல்றது இல்ல சார்... அவங்க கனவுகளை கொல்றது... என்னை என் பெற்றோர் கொன்ன மாதிரி..." என்றவன், தன் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றுவிட்டான். ஆம், உண்மைதானே..? ஒருவரின் வாழ்வென்பது அவர்களின் கனவுகளால் கட்டமைக்கப்பட்டது. அந்த கனவுகளைக் கொன்றால், அவர்கள் உயிர் வாழ்வார்கள்தான். ஆனால், அது அவர்கள் வாழ்வாக இருக்காது. சரி கட்டுரைக்கு வருவோம். இது கல்வி குறித்த ஆளுமைகளுடனான உரையாடலின் மூன்றாவது பகுதி. விஜய் அசோகன். ஒரு சிறு கிராமத்தில், மத்திய தர குடும்பத்தில் பிறந்தவர். மத்திய தர குடும்பத்திற்கே இருக்கும் அபிலாஷைகளை எதிர் கொண்டவர். கடும் காதலால் (ஆம். முயற்சி என்ற சொல்லை வெறுக்கிறார்) ஆராய்ச்சியாளராக உயர்ந்தவர். நானோ தொழிற் நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது சீனாவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவை மட்டும் அவர் அடையாளங்கள் அல்ல. இவர் தொடர்ந்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து...  கல்வி குறித்து, அறிவு தளத்தில் உங்களின் தொடர் செயல்பாடுதான், உங்களை பேட்டி எடுக்க என்னை தூண்டியது. உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள், அரசுப் பள்ளி, தாய்மொழி வழிக் கல்வி போன்ற விஷயங்களில் மெளனம் காக்கின்றபோது, உங்களுக்கு இதில் இயங்க வேண்டும் என எப்படி விருப்பம் வந்தது...? என் பெற்றோர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரமும்... பின் நான் படித்த தனியார் பள்ளியும்தான் முதன்மையான காரணங்கள். என்ன தனியார் பள்ளியா...? ஆம். அங்கு நான் பெற்ற சில கசப்பான அனுபவங்கள்தான். என்னை அரசுப் பள்ளிக்காக குரல் கொடுக்க தூண்டுகிறது என நினைக்கிறேன். 'பாருங்க... இவனுங்க நல்லா தனியார் பள்ளியில் படிச்சிட்டு நம்மை அரசு பள்ளியில சேருங்கன்னு புத்தி சொல்ல வந்துடுறாங்க...' என்று எண்ணாதீர்கள். நான் என் பள்ளி வாழ்க்கையை தனியார் பள்ளியில் துவங்கினாலும், நான் அங்கு தொடரவில்லை. அந்தப் பள்ளி என்னிடம் இருக்கும் பிற ஆற்றல்களை பார்க்காமல், கல்வியை திணிப்பதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. நான் சுதந்திரமாக சிந்திப்பதை, அப்பள்ளி விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கும் பள்ளிக்குமான இடைவெளி மனதளவில் தொலைவாகியாது. நல்லவேளையாக எனது அப்பா என்னை புரிந்துகொண்டார். அங்கிருந்து வெளியேறி என் படிப்பை அரசு பள்ளியில் தொடர்ந்தேன். உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்...? எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் கவின் திலீபனுக்கு ஆறு வயது. இரண்டாவது மகன் கதிர் நிலவனுக்கு நான்கு வயது. இன்னும் இருவரையும் பள்ளியில் சேர்க்கவில்லை. ஆறு வயதில்தான் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அடுத்த மாதம் நான் சீனாவிலிருந்து வருகிறென். என் மனைவி தன் ஆராய்ச்சி படிப்பில் அடுத்த மாதம் கோவையில் சேர உள்ளதால், அந்த பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் நிச்சயம் சேர்த்துவிடுவேன். உங்கள் வீட்டில் புரிந்து கொள்கிறார்களா...? முதலில் என் மனைவிக்கு சில தயக்கங்கள் இருந்தன. ஆனால், எங்களுக்கிடையேயான உரையாடல் அந்த தயக்கத்தை சரி செய்தது. ஆனால், சுற்றத்தாரின் பார்வைதான் மிக மோசமானதாக இருக்கிறது. 'அரசுப் பள்ளியில் சேர்க்கப் போகிறோம்' என்று சொன்னால் மிக பரிதாபமாக பார்க்கிறார்கள். நாங்கள் ஏதோ பணத்தை சேமிப்பதற்காக இது போல் செய்கிறோம் என்றும், வறட்டுப் பிடிவாதம் என்றும் பரிகாசம் செய்கிறார்கள். எங்களிடம் அந்த கிண்டல் பேச்சுகள் வந்தால், அதற்கு நாங்கள் உரிய எதிர்வினையை ஆற்றிவிடுவோம். ஆனால், எங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சென்றார்கள் என்றால்...? இந்த பரிகாசங்கள் அவர்களை எவ்வளவு உளவியல் ரீதியாக பாதிக்கும்...? இதுதான் அச்சமாக இருக்கிறது.  உண்மையை சொல்லுங்கள்... தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் நன்றாகவா இருக்கிறது....? 100 சதவீதம் நன்றாக இருக்கிறது என்பது என் வாதம் அல்ல. இங்கு தனியார் பள்ளிகளும் நூறு சதவீதம் தரமாக இருக்கவில்லையே...? அரசு பள்ளிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அதை புறக்கணிப்பதன் மூலம் சரி செய்து விட முடியாது. அரசுப் பள்ளிகளை நாம் மறுப்பதன் மூலம், கல்வி அளிப்பது அரசின் கடமை என்பதையும் மறுக்கிறோம். அரசுப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்த்து, அரசை கேள்வி கேட்பதன் மூலம்தான் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடியும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இங்கு தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்குவதில்லை.பெரும்பாலான தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாமல் தான் இயங்குகின்றன. தீப்பெட்டி போன்ற வகுப்பறைகள்... இவ்வளவு இறுக்கத்தில் குழந்தைகள் படித்தால், அவர்களின் சிந்தனை திறன் எப்படி வளரும்...? தனியார் பள்ளிகளில் 1 சதவீதம்தான் அனைத்து வசதிகளுடன் தரமாக இருக்கின்றன. அது பெரும் பணக்காரர்களுக்கான இடமாக இருக்கிறது. இந்த கணக்குடன் ஒப்பிட்டு பார்த்தால், பெரும்பாலான அரசு பள்ளிகள் தரமானதாக இருப்பதாக தோன்றுகிறது. மீண்டும் சொல்கிறேன். அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியாது. ஹூம்... புரிகிறது. நீங்கள் தமிழ் வழிக்கல்வி குறித்தும் தொடர்ந்து எழுதி, பேசி வருகிறீர்கள்தானே...? தமிழ் வழிக் கல்வியாக சுருக்கி பார்க்காதீர்கள். தாய் மொழி வழிக் கல்வி என்று அதனை பாருங்கள். இயல்பாக தாய்மொழி வழிக் கல்வியில் படித்தால், குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். இதனை நான் மேம்போக்காக சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். நான் ஐரோப்பாவில் ஏழு ஆண்டு காலம் வசித்திருக்கிறேன். சீனாவில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். அங்கு குழந்தைகள் தங்கள் தாய் மொழியில்தான் படிக்கிறார்கள். அதனால்தான் விஞ்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது. ஆனால், இந்த நவீனச் சூழலில் ஆங்கிலம் இல்லாமல் எப்படி சமாளிக்க முடியும்...? இதுதான் நம்மிடம் இருக்கும் பிரச்னையே. தாய் மொழி வழிக் கல்வியில் படிப்பதென்பது பிற மொழிகளை புறக்கணிப்பதல்ல. ஆங்கிலம், ஜெர்மானிய மொழி, சீனம் என உங்களுக்கு விருப்பமான மொழிகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் பள்ளிக் கல்வியை, அறிவியலை, உங்கள் தாய் மொழிக் கல்வி ஊடாக படியுங்கள். அப்போதுதான் நம் மண்ணிற்கு தேவையான படைப்புகள் வரும். இதைத்தாண்டி அரசுப் பள்ளிகளை ஆதரிப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா...? உண்மையாக குழந்தைகள் தம் கனவுகளின் கரம் பிடித்து வளரும் இடமாக அரசுப் பள்ளிகள் மட்டும்தான் இருக்கின்றன. பாடப் புத்தகத்தை தாண்டி அவர்களால் அங்குதான் நிறைய சிந்திக்க முடிகிறது என்பது என் அனுபவத்தின் ஊடாக நான் கண்ட உண்மை. நாம் அனைவரும் கரம் கோர்த்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தால், நிச்சயம் அங்கு படிக்கும் மாணவர்கள் சமுகத்திற்கு அளப்பெரிய பங்களிப்பை அளிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளியில் படிக்கும் போது, குழந்தைகள் மீதான பொருளாதார அழுத்தங்கள் குறைகின்றன. இதனால் அவர்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. சுதந்திரமான மனநிலையில் இருப்பவர்களால்தான், நன்றாக புரிந்து கொள்ள முடியும்.  சரி. எப்படி அரசு பள்ளிகளை மேம்படுத்துவது...? உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தால் என்ன செய்வீர்கள்... மாதம் ஒரு முறையாவது ஆசிரியர்களை சந்திப்பீர்கள்தானே...? ஆசிரியர்களிடம் சந்தித்து உரையாடுங்கள். பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மாவட்டக் கல்வி அலுவலரை சென்று சந்தியுங்கள். அரசியல் இல்லாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை கட்டமையுங்கள். இதையெல்லாம் தாண்டி, ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், துரதிருஷ்டமாக ஆசிரியர்களின் பங்களிப்பு கவலை அளிப்பதாக இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களையும் குறைகூறிவிட முடியாது என்றாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணரவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான போராட்டங்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுத்தால், நிச்சயம் மாற்றங்கள் வியக்கத்தக்கதாக இருக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive