NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவாயிற்று? : கலைஞர் அறிக்கை

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’ தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்து கிறது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஜி.பி.எப். எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப் படுகிறது. இவ்வாறு ஜி.பி.எப். கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது 60 சதவிகிதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதம் உள்ள 40 சதவிகிதத் தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
பழைய பென்ஷன் திட்டத்தின்படி ஒரு அரசு ஊழியருக்கு அவரது பணி அனுபவத்துக்கு ஏற்ப எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லிவிடலாம். ஆனால், புதிய பென்ஷன் திட்டத்தில் இவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. எனவே தான், புதிய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
அண்மையில் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட, “ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்” என்ற தலைப்பில் கூறும்போது, “அ.தி.மு.க. அரசு 1-4-2003 அன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்தத் திட்டத் திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றம் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனவே, தமிழகத்திலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் பத்து நாட்கள் நீடித்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிட்ட 110வது விதியின் கீழான அறிவிப்பில், “அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் பத்து நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாந்தா ஷீலா நாயர் தலைமையில் பிப்ரவரி 26ஆம் தேதி குழு அமைக்கப்பட்டு, 4 மாதங்களுக்குள், அதாவது ஜுன் 26க்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வுத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, சுமார் 5 மாதங்கள் ஆகியும், இன்னும் அந்தக் குழு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்பு கள் அளித்த மனுக்களை மட்டும் கடந்த ஏப்ரல், ஜுன் மாதங்களில் இந்தக் குழு பெற்றுள்ளது. குழு அரசாணையில் தெரிவித்தவாறு நான்கு மாதங்களுக்குள் அறிக்கை எதையும் தாக்கல் செய்யாததால், அரசு ஊழியர்கள் மத்தியில், அவ்வாறு வல்லுநர் குழு அமைக்கப்பட்டதே, அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத் தானோ என்று ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக் கெடு நீடிக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தாஷீலா நாயர் முதல் அமைச்சரின் தனிப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது.
அரசு வல்லுநர் குழு அமைத்ததே, இந்தப் பிரச்சினையை தள்ளிப் போட வேண்டும் என்பதற்காகத்தான் என்று அரசு அலுவலர்கள் கருதுகிறார்கள். புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக ஓய்வூதிய ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கூடப் போடவில்லை. 
இந்தச் செய்திகளைக் கேள்விப்படும் அரசு அலுவலர்கள் மிகுந்த கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள். எனவே தமிழக ஆட்சியினர், குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு அலுவலர்களின் இந்த முக்கிய பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை அறவே ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடருவதற்கான அறிவிப்பினைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.’’




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive