NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

25 ஆயிரம் கோடி இழப்பு'- போராட்டம் எதிரொலி!

         எங்கெங்கு ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கெதிரான போராட்டங்களும் இருக்கும். 
 
          அந்தவகையில் தனியார்மயம், தாராளமயம், பாதுகாப்புத் துறையில் நூறு விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதி, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15,000 தருவதற்குக்கூட ஒப்புதல் அளிக்காத மத்திய அரசு என, மத்திய மோடி அரசின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிமிகு எதிர்வினையே நாடு தழுவிய இந்தப் பொது வேலைநிறுத்தம்’ என்கிறார் சென்னை கிண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட செஞ்சட்டை தொழிலாளர் ஒருவர்.
நாடு முழுக்க காத்திரமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்தியத் தலைநகரம் தில்லியின் வீதிகளும் வெறிச்சோடிக் கிடந்தன. சம்பள உயர்வை வலியுறுத்தி தில்லியில் செவிலியர்களும் (நர்ஸ்) பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஏஎன்ஐ செய்தி. மும்பையில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்வண்டிகள் (ரெயில்) வழக்கம்போல் இயங்கின. கர்நாடகாவில் ஒருசில பேருந்துகளும், ஆட்டோ ரிக்ஷாக்களும் வழக்கம்போல் இயங்கின. ஆனால் கேரளாவில் முழுமையாக இயங்கவில்லை. அங்கே மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி புரிவதால் முழு அடைப்புப் போராட்டம் அங்கே முழுமையான வெற்றியை வெளிக்காட்டியது. மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறைகள் வெளிப்பட்டன. மேற்குவங்க வடக்கு பார்கனாஸ் பகுதியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட சிலிகிரி கார்ப்பரேசன் மேயர் அசோக் பட்டாச்சாரியா 15 பேருடன் கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வாரணாசியில் சாலைப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் பல்வேறு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழ்நாடு அராசங்கம் அறிவித்திருந்ததால் மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. இருந்தாலும் 50 விழுக்காட்டுக்கு மேலானோர் பணிக்கு வரவில்லை. மத்திய அரசு அலுவலகங்கள் பெரும்பாலான அளவில் வெறிச்சோடிக் கிடந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள 600 வங்கிக் கிளைகள் முழுவதுமாக முடங்கின. ‘ஏழாவது நிதிக் குழுவிடம் வலியுறுத்திய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 வழங்கக்கூட ஒப்புக்கொள்ளவில்லை’ என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் தொழிலாளர்கள். அது என்ன மாத ஊதியக் கணக்கு ரூபாய் 26,000?
‘1957இல் நடந்த 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமானது குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிட ஐந்து முக்கிய அம்சங்களைக் கருத்தில் எடுத்துக்கொண்டது. முதலாவதாக, ஊதியமானது மூன்று நபர்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2,700 கலோரி அளவுக்கு உணவு வாங்கக்கூடிய திறன் வேண்டும். ஒரு தொழிலாளியின் குடும்பம் 72 கஜம் துணி வாங்குவதற்கு முடிய வேண்டும். அரசு வழங்கும் மானிய வீடுகளின் பரப்பளவுள்ள இடத்தில் வாடகைக்குக் குடியேறும்வகையில் பணம் கிடைக்க வேண்டும். சமையல் செய்வதற்கான எரிபொருள், விளக்கெரிப்பதற்கான செலவு போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் 20% கூடுதலாகக் கிடைக்க வேண்டும். இந்த ஐந்து அம்சங்களை பூர்த்திசெய்வதாக குறைந்தபட்ச ஊதியம் இருக்க வேண்டும் என்று முதலில் வரையறுக்கப்பட்டது. 1991இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு ஆகியவற்றையும் இதில் சேர்த்துக்கொண்டு மேலும் 25% ஊதியத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியது. இந்த வரையறைகளையெல்லாம் ஒருசேரப் பார்த்தால், குறைந்தபட்ச மாத ஊதியம் என்பது ரூ.26,000 ஆக இருக்க வேண்டும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன’ என எளிமைப்படுத்தி ஹிந்து நாளிதழில் விளக்குகிறார் ஜி.சம்பத். அதேநேரம், பொது வேலைநிறுத்தத்தை தடுக்க குறைந்தபட்ச ஊதிய உயர்வு குறித்து மத்திய அரசு மீண்டும் ஒரு அறிவிப்பைச் செய்தது. இந்த அறிவிப்பு, வேளாண்மை அல்லாத பிற துறைகளில் வேலைசெய்யும் முறையான தொழில்திறன் பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டது. அன்றாட குறைந்தபட்ச ஊதியம் ரூ.246-லிருந்து ரூ.350 அல்லது மாத ஊதியம் ரூ.9,100 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதை ஆர்.எஸ்.எஸ். சார்புள்ள பாரதிய மஸ்தூர் சங் (பி.எம்.எஸ்.) தவிர்த்த ஏனைய மத்திய தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்று நிராகரித்துவிட்டன.
‘அடிப்படையான எந்தவித தொழிலாளர் நலன்களையும் குறிப்பாக, அமைப்பாக்கப்படாத ஊழியர்கள்மீது எந்தவிதப் பார்வையும் இல்லாமல் மத்திய அரசு நடந்துகொள்கிறது. யானைப் பசிக்கு சோளப்பொரியா? அவர்களுக்கு உண்மையை, ஒற்றுமையை வலியுறுத்தும் எங்கள் போராட்டம்’ என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர். தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை மூர்க்கமாக ஒடுக்கினர். தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டன.
வட மாநிலங்களில், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இன்று முற்றிலும் இயங்கவில்லை. இமாசலப்பிரதேசத்தில் மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய சேவை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன . நாடுமுழுக்க காத்திரமாக நடந்த பொதுவேலை நிறுத்தப் போராட்டங்களால் பொருளாதார இழப்புகள் கடுமையாக ஏற்பட்டதாக பொருளாதார பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கோல் இந்தியா நிலக்கரி நிறுவனம், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஆயில், ஏச்ஏஎல் மற்றும் பெல் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உற்பத்தி பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தொழிற்சாலைகளிலும் இன்று உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன.
வங்கிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் அனைத்தும் முடங்கின. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் யாரும் இன்று வேலைக்கு வராததால் நாடு முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலை பரிவர்த்தனைகள் முடங்கின. சில நகரங்களில் ஏ.டி.எம். சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 2 இன்றைய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 25,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன அதே வணிக பத்திரிகை செய்திகள்.
வெறிச்சோடிய இந்தியத் தெருக்களும் பூட்டிய அலுவலகக் கதவுகளும் தொழிலாள வர்க்கத்தின் போராட்ட வீரியத்தின் தொடக்க வெற்றியாக வெளிப்படுத்துகின்றன.
தொகுப்பு:சே.த.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive