Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும்’ கருணாநிதி – ஆசிரியர் தின வாழ்த்து.

            ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் என கருணாநிதி தனது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

            ஆசிரியர்களுக்கு விருது ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ் படைத்தவர்! அவர் பிறந்த நாளான செப்டம்பர் 5–ம் நாள், ‘‘ஆசிரியர் தினம்’’ என ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுவதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது. எண்ணற்ற சலுகைகள் ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில், ‘‘நல்லாசிரியர் விருது’’ என வழங்கப்பட்ட அந்த விருதின் பெயரை, 1997–ல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது“ எனப் பெயர் மாற்றம் செய்து வழங்கிட வகை செய்தது தி.மு.க. அரசு. அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்க ஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின் ‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாக மாற்றம்; தமிழ் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; ஆசிரியர்–அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப் படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறையை அடியோடு ரத்து செய்தது என எண்ணற்ற சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு.  ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகள் இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக் குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்த ஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்–அரசு ஊழியர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகை செய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திட விரும்புகிறேன். ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர் குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமை விரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் அதிக அளவில் ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது. இவ்வாறு ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் தி.மு.க.வின் சார்பில் தமிழக ஆசிரியர் அனைவருக்கும் எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive