Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

குழந்தைகளுக்கு நேரும் சில பிரச்னைகள்!

    1) பொருட்களை முழுங்கித் தவிப்பது
             இரண்டு வயது தருண் வீட்டில் அனைவருக்கும் செல்லமான  சுட்டிக் குழந்தை. எத்தனை பேர் இருந்தாலும் அவனை சமாளிக்கவே முடியாது என்று அலுத்துக் கொள்வார்
             அவன் அம்மா. அவன் அண்ணன் அருண் வைத்திருந்த சைக்கிள் பாலை ஏதோ உண்ணும் பொருள் என நினைத்து வாயில் போட்டு முழுங்கிவிட அதைப் பார்த்த அருணுக்கு அதிர்ச்சி. ஓடி வந்து அம்மாவிடம் சொல்ல, அவர்கள் பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு ஓடினார்கள். பரிசோதித்த டாக்டர் எக்ஸ் ரே எடுக்கச் சொல்லி, அதில் அதன் பின் சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். சில மணி நேரம் கழித்து தருண் மலம் கழித்தபின் அந்த சைக்கிள் பால் வெளியே வந்ததும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது. குழந்தைகள் இந்த மாதிரி தெரிந்தோ தெரியாமலோ காய்ன் அல்லது வேறு பொருட்களை விழிங்கி விட்டால் அதற்கான தீர்வு என்னவென்பதைப் பற்றியும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் குடலிறக்கம் போன்ற பிரச்னைக்கு தீர்வையும் கோவை மருத்துவர் பி.எஸ்.ராஜன் விளக்குகிறார்.
மண்ணையும், மற்ற பொருட்களையும், சகஜமாக வாயில் போட்டுக் கொண்டு போக்குக் காட்டுவது, குட்டிக் கண்ணன் தொடங்கி இன்றுவரை குட்டீஸ்களின் வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக விளையாட்டுப் பொருட்களின் சிறு பாகங்கள், சில்லறைக் காசுகள், சில கடின உணவுப் பொருட்களை குழந்தைகள் தவறுதலாக வாயில் போட்டு, விழுங்க முயலும் போது விபரீதத்தில் முடிகிறது. இத்தகைய பொருட்களை வாயில் உள்ளபோதே பெற்றோர்கள் பார்த்துவிட்டால் பிரச்னை இல்லை. உடனே விரலை வாயில் விட்டு அந்தப் பொருளை வெளியே எடுத்து விடலாம். ஒருவேளை விழுங்கப்பட்ட பொருட்கள் தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்தால், பெற்றோர் முயற்சி செய்வது ஆபத்தானது. தாமதிக்காமல் உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். விழுங்கப்பட்ட மழுங்கிய முனை உடைய சிறிய பொருட்கள், சிறிய காசுகள், கோலிகுண்டு போன்றவை எக்ஸ்ரேவில் இரைப்பையைத் தாண்டி விட்டால் தானாகவே மலத்துடன் வெளியேறி விடும். அப்படி இல்லாமல், சில பெரிய அல்லது கடின பொருட்கள் உணவுக் குழாயில் சிக்கியிருந்தாலோ, இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குச் செல்ல இயலாது இருந்தாலோ என்டோஸ்கோபி மூலம் அகற்றிவிட இயலும் என்று என்டோஸ்கோபி சிகிச்சைப் பற்றி விரிவாக விளக்கினார் ராஜன்.
மிக ஆபத்தான கூரிய முனையுடைய ஊசி போன்ற பொருட்கள் குடலில் சென்று குத்திக் கொள்ளும் தன்மையுடையவை. அதன் விளைவுகள் மிகமிக விபரீதமானவை. அத்தகைய பொருட்களை விழிங்கிவிட்ட குழந்தைகளுக்கு, மயக்கம் கொடுத்து லேபராஸ்கோபி உதவியுடன் மிகச்சிறிய அறுவை சிகிச்சையால் பாதுகாப்பாக அகற்றிவிட இயலும்.
குழந்தைகள் கையாளும் பொருட்களில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒருவேளை குழந்தைகள் விழுங்கிய பொருட்களால் அப்போதைக்கு எந்த உபாதைகள் இல்லாவிட்டாலும் சில நாட்கள் கழித்து அதன் வேலையைக் காண்பிக்கும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 
2) குடலிறக்கம்
இவை மட்டுமின்றி சிறு குழந்தைகளின் இன்றைய முக்கியமான வயிற்றுப் பிரச்னைகளில் ஒன்று குடலிறக்கம் தொப்புள் வீக்கமாகவும், தொடைப்பகுதி வீக்கமாகவும் தோற்றமளிக்கும்.
தொப்புள் குடலிறக்கம் குழந்தைகள் நடக்க ஆரம்பித்த போதும் சரியாக வில்லை என்றால், அறுவை சிகிச்சைதான் தீர்வு. இவை மருந்துகளால் குணப்படுத்த இயலாதவை. இவற்றையும் லேபராஸ்கோபி மூலம் பெரிய தடுப்பு ஏதுமின்றி எளிதாக சரி செய்துவிடலாம்.
தொடைப்பகுதியில் வரும் குடலிறக்கத்தையும் மேற்கண்ட சிகிச்சை முறையில் எளிதாக குணமாக்க இயலும். இவற்றில் பெற்றோர்கள் மிகக் கவனமாகவும், உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டியது பின்வரும் நிலைகளில்
1. குடலிறக்கம் வயிற்றினுள் அமுங்காத நிலை
2. திடீர் வலி
3. குடல் அடைப்பு
3) குடல்வால் அழற்சி, பித்தப்பைக் கற்கள்
மேலும் குடல்வால் அழற்சி மற்றும் பித்தக் கற்கள் போன்ற உபாதைகளுக்குக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. இவை கடும் வயிற்றுவலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் காமாலை போன்ற அறிகுறிகளுடன் தென்படும். ஆனால் ஆறுதலான செய்தி என்னவென்றால் இவை அனைத்தும் பயம், வலி, தழும்பு இன்றி குழந்தைகளுக்கும் லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சையால் குணமாக்கிவிட முடியும்  என்பதே.
4) பித்த நாளக் கற்கள்
பித்தப்பைக் கற்களை அடுத்து ஆபத்தான பித்த நாளக் கற்களும் சில நேரங்களில் காய்ச்சல், மஞ்சள்காமாலை, கடும் வயிற்று வலியாக வெளிப்படும். இத்தகைய சமயங்களில் பெற்றோர்கள் தாமதம் சிறிதுமின்றி மருத்துவரை அணுக வேண்டும். இவற்றை கத்தியோ ரத்தமோ இன்றி ணிஸிசிறி என்ற சிறப்பு எண்டோஸ்கோபி மூலம் வாய்வழியாகவே அகற்றிவிடலாம்.

லேபராஸ்கோபி, மற்றும் என்டோஸ்கோபி கருவிகள் 10மிமீ அளவு உடையவைகள், அவை பெரியவர்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்று குழந்தைகளின் சிகிச்சைகளுக்காக 2மிமீ மற்றும் 3மிமீ அளவிலான கருவிகளின் அறிமுகமும், உபயோகமும், தழும்பு மற்றும் வலி இல்லா அறுவை சிகிச்சைக்கு வரப்பிரசாதங்களாக உள்ளன.

2 comments

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading