Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

யூ .பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- மருத்துவரும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்!

மருத்துவ மாணவர்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம் என்கிறார் பி.ராஜா. 2015 ஆண்டு பேட்ச்சின் கர்நாடக மாநிலப் பிரிவைப் பெற்றவர், அதன் பயிற்சியில் தும்கூர் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றிவருகிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள முத்தாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. மூன்றாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தவர் 8 கி.மீ தொலைவிலுள்ள நெய்வேலியின் செயிண்ட்பால் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வரை பயின்றார். கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். விரும்பிப் படித்தார். பெற்றோரின் ஊக்கத்தால் யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தார். விரும்பிய ஐ.ஏ.எஸ். கிடைக்கும்வரை தொடர்ந்து ஐந்து முறை யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை எதிர்கொண்டார்.
இரண்டு கனவு
“ஆறாம் வகுப்பு படிக்கும்போது வெ.இறையன்பு எழுதிய ‘நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்’ புத்தகத்தைப் படித்ததும் ஐ.ஏ.எஸ். ஆர்வம் துளிர்த்தது. அதிலும், துப்பாக்கிச் சூடு, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பற்றிய வர்ணனைகள் மிகவும் ஈர்த்தன. ஆனால், மருத்துவராகும் கனவு என்னுள் ஆழமாக வளர்ந்துகொண்டிருந்தது. இதனால் எம்.பி.பி.எஸ். முடித்த பின்னர்த் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டே யூ.பி.எஸ்.சி. எழுத ஆயத்தமானேன்.
பிறகு சென்னை சென்று சங்கர் ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமியில் பொதுக்கல்வி பாடப்பிரிவுக்காக மட்டும் பயிற்சி பெற்றேன். விருப்பப்பாடங்களான உயிரியல், மருத்துவ அறிவியலை நானே படித்தேன். மருத்துவ அறிவியலில் அதிகமாகப் படிக்க வேண்டி இருந்ததால் இரண்டாவது முயற்சியில் அதற்குப் பதிலாகப் புவியியல் எடுத்தேன். இரண்டாம்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் நழுவவிட்டேன். மூன்றாவது முயற்சியில் ஐ.பி.எஸ். கிடைத்தது. எனது நோக்கம் ஆட்சியர் ஆவது என்பதால் மீண்டும் இருமுறை எடுத்த கடுமையான முயற்சியில் எனது எண்ணம் நிறைவேறியது. அதே நேரத்தில் ஐந்து முயற்சிகளிலும் நான் முதல்நிலை தேர்வில் ஒருமுறை கூடத் தவறவில்லை. இதற்கு எனது பள்ளியில் பாடம் நடத்தப்பட்ட முறை முக்கியக் காரணம்” என்கிறார் ராஜா.
எதிர்காலத்தில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத விரும்பும் பிள்ளைகளுக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்பது ராஜாவின் யோசனை. இதன் மூலம், புரிந்து படிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கலாம். இணையதளத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களையும் புத்தகங்களையும் பயன்படுத்தலாம் அதேபோல ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி போன்ற சேனல்களில் வரும் நேர்காணல், விவாதங்களைப் பின்தொடர்வது மிகவும் உதவும் என வழிகாட்டுகிறார் ராஜா.
யூ.பி.எஸ்.சி.க்கான முயற்சிகளுக்கு இடையே ராஜாவுக்கு, 2009-ல் கடலூர் மாவட்டம் புலியூரில் தமிழக அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவப் பணி கிடைத்தது. இதில் சேர்ந்து யூ.பி.எஸ்.சி.க்கான மூன்றாவது முயற்சியைத் தொடர்ந்தபோது 239-வது ரேங்கில் 2011-ம் வருட பேட்ச்சில் கர்நாடகா மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். கிடைத்தது. இதன் பயிற்சியின் போது தாவன்கெரே, மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கோடு ஏ.எஸ்.பி.யாகவும், கொப்பல் மாவட்டத்தின் எஸ்.பி.யாகவும் பணியாற்றினார். அப்போது, யூ.பி.எஸ்.சி. தேர்வின் இரு விருப்பப் பாடங்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டது. இத்துடன் பொதுக் கல்வியிலும் பாடத் திட்டம் நான்காகக் குறைக்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்துத் தேர்வுக்குத் தயாரானவர் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். பெற்றார்.
நான் எப்படிப் படித்தேன்
யூ.பி.எஸ்.சி. எழுத விரும்புபவர்கள் அதற்கு முன்பாக அதன் பழைய முதல்நிலை வினாத்தாள்களுக்கான பதிலை எழுதிச் சுயபரிசோதனை செய்வது முக்கியம். இந்தக் கேள்விகளைப் பாடங்களுக்கு ஏற்றபடி தனியாகப் பிரித்து எழுதினால் எதில் பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதைச் சோதித்துப் பார்க்கப் பயிற்சி நிலையங்கள் அவசியம் இல்லை. இதன் மூலமாக நமக்கு எதில் அதிகப்படியான பயிற்சி தேவை என்பதைக் கண்டுபிடித்து அதன் பிறகு பயிற்சி நிலையங்களை அணுகும்போது பலன் இருக்கும்.
குறிப்பாகக் கணிதம், அறிவியல் பாடங்களைச் சுயமாகப் படிப்பது கடினம். ஆகவே, கலை இலக்கியத் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் கணிதம், அறிவியலை விருப்பப்பாடங்களாக எடுக்காமல் இருப்பது நல்லது. ஆனால், அறிவியலில் பட்டம் பெற்றவர்கள் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தாராளமாக எடுக்கலாம்.
அடுத்து, ஒரே பாடத்தைத் தொடர்ந்து படிக்கும்போது சலிப்பு உண்டாகும், கவனச் சிதறல் ஏற்படும். இதனாலேயே ஒரு மணி நேரத்துக்கு மேல் அடுத்த பாடத்தை நான் படிக்க ஆரம்பித்துவிடுவேன். இந்த மாதிரிப் புதிய பாடங்களைப் படிக்கும்போது நம்முடைய புரிதல் திறன் புத்துணர்வு பெறும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading