NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து.

          ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து... (ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)


““எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ, அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்...”
- ஜார்ஜ் பெர்னாட்ஷா

நாம் இந்தப் பகுதியில் 4 வகுப்பறை காட்சிகளைக் கண்டு, அதுபற்றி தீவிரமாக ஆராய இருக்கிறோம். இம்மாதிரி நிகழ்வுகள் நம் வகுப்பறைகளில் தினமும் நடப்பதுதான். ஒரே சூழல். ஒரே நிகழ்வு. ஆனால், வேறு வேறு அணுகுமுறைப்படி ஒரு மாணவன் நடத்தப்படுகிறான். நான்கு காட்சிகளையும் வாசித்தபிறகு அவற்றை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்போம். எது சரியான அணுகுமுறை
என்பதை விவாதிப்போம்.

காட்சி-1
ஆசிரியை லட்சுமி, தான் வகுப்புஎடுக்கும் நான்காம் வகுப்பு (கணிதப் பாடவேளை)க்குள் நுழைகிறார். அது காலை இரண்டாவது பீரியட். வகுப்பில் அனைவரும் எழுந்து ‘குட்மார்னிங் மேடம்’ என்கிறார்கள். தொடர்ந்து ஒரே இரைச்சல். லட்சுமி கத்துகிறார். “கீப்... கொயட்... பேசாத... கவனி...”

வகுப்பு ஓரளவு அமைதியாகிறது. ஆனால், மூன்றாம் பெஞ்சில் உள்ள ரவி பேசுவதை நிறுத்தவே இல்லை. நேற்று நடந்த கிரிக்கெட் ஆட்டம் பற்றி சுவாரசியமாகத் தன் நண்பனோடு விவாதிக்கிறான். “ரவி... ஏண்டா இப்படி இருக்க... உன்னை திருத்தவே முடியாதா...” என்கிறார் லட்சுமி. கோபம் அடங்காமல், “எழுந்து வெளியே போ... கெட் அவுட்...” என்கிறார்.

ரவி முதலில் முரண்டு பிடித்தாலும் மெல்ல எழுந்து வகுப்பறை வாசலில் நிற்கிறான். வகுப்பு தொடர்ந்தது. அந்த வழியே வந்த தலைமை ஆசிரியர், “என்ன லட்சுமி மிஸ்... என்ன பிராப்ளம்... இங்கே யார் BOSS-ன்னு இவனுக்கு காட்டவா?” என்று ரவியைக் காட்டி மிரட்டுகிறார். ரவிக்கு ஒன் பாத்ரூம் வந்து முட்டியது. அச்சத்தில் அழுகை தொண்டையை அடைத்தது. கண்டிப்பாக நாளை பள்ளிக்கு வரமாட்டான்.

காட்சி-2
ஆசிரியை லட்சுமி, நான்காம் வகுப்பிற்குள் நுழைந்து பாடத்தை தொடங்கினார். ஆனாலும் எல்லாரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். “பிளீஸ்... கீப்... கொயட்... நாம இன்னைக்கு முக்கியமான கணக்கு போடப்போறோம். எல்லாரும் இங்கே கவனிக்கணும். தெரியுதா...” என்று அறிவித்தார். ரவி மட்டும் தொடர்ந்து தொண தொணவென்று பேசிக்கொண்டிருந்தான்.

“யார் இன்னமும் பேசிக்கிட்டிருக்கிறது?” லட்சுமி கேட்டார். “இன்னமும் விதிகளை மதிக்காதவர்கள் இருக்காங்க போலருக்கு...” என இரைந்தார். வகுப்பறை வழியே சென்ற தலைமை ஆசிரியர் காதில் விழுந்தது. “என்ன லட்சுமி மிஸ்... ஏதாவது பிராப்ளமா... உடனே தீர்த்து வெச்சுடலாம்... சொல்லுங்க” என்றார்.

வகுப்பே கப்சிப். “நோ பிராப்ளம் சார்... நான் பார்த்துக்கிறேன்...” - லட்சுமி பணிவோடு பதிலளிக்க அவர் போய்விடுகிறார். “எச்.எம். ஏன் அப்படி சொன்னாரு... ரவி? உனக்கு புரியுதா?” என்று ரவியைப் பார்த்துக் கேட்கிறார். குற்ற உணர்வோடு எழுந்து நிற்கிறான் ரவி. “நீங்க... ‘கொயட்’ன்னு சொன்ன பிறகும் நான் பேசிக்கிட்டிருந்தேன்...” லட்சுமி சொன்னார் “அந்த பயம் இருக்கட்டும்... உட்காரு..!”

ரவிக்கு வியர்த்தது. அவரைக் கற்றலில் நுழைக்க விரும்பிய லட்சுமி, “சரி... 100 எனும் எண்ணை இரண்டால் வகுத்தால் விடை என்ன? ரவி... சொல்ல முடியுமா...?” என்றார். “தெரியும் மிஸ்... 50...”“குட்...” லட்சுமி புன்னகைத்தார். அந்த வகுப்பு முடியும் வரை ரவி பேசவே இல்லை.

காட்சி-3
ஆசிரியை லட்சுமி நான்காம் வகுப்பில் கணித பாடம் நடத்தத் தொடங்கினார். மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். “பேசுவதை நிறுத்துங்க... கொயட்... இன்று நாம் புது கணித பாடம் தொடங்குகிறோம். எல்லாரும் கொஞ்சம் குளோசா... லிசன் பண்ணணும்...?” அதன்பின் வகுப்பே அமைதியானது. ரவி மட்டும் பேசுவதை நிறுத்தவே இல்லை.

லட்சுமி ஒரு துண்டுச் சீட்டை எடுத்தார். “வகுப்பில் பாடத்தைக் கவனிக்கத் தவறினான்” என்று எழுதி கையொப்பமிட்டார். “ரவி இதில் உன் பெயரை எழுது” என்றார். “இந்த ஸ்லிப் உன் மேசை மேலிருக்கும். வகுப்பு முடிந்தும் உன் பிரச்னை தொடர்ந்தால் தலைமை ஆசிரியரிடம் தரப்படும்” என வகுப்பே கேட்குமாறு அறிவித்தார். வகுப்பின் முடிவில் ரவி அந்த காகிதத்தைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டான். ஏனெனில் அவன் முழு வகுப்பும் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

காட்சி-4
ஆசிரியை லட்சுமி நான்காம் வகுப்பில், கணிதப் பாடம் நடத்துகிறார். இன்று, மூன்றிலக்க வகுத்தல் பாடம். வகுப்பே கூச்சலோடு பேசிக் கொண்டிருந்தது. “அங்க என்ன பேச்சு... லிசன்..” என்கிறார். ஓரளவு அமைதி... மாணவர்களில் ரவி பேச்சை நிறுத்துவதாக இல்லை. அவர்கள் எதன் மீது ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதைச் சற்று உற்றுக் கவனித்தார்.

“நேற்று யாரெல்லாம் கிரிக்கெட் மேட்சு டி.வில பார்த்தீங்க.. கை தூக்குங்க” என்றார். ரவி உற்சாகத்தோடு கையை உயர்த்தினான். “கிரேட்...” என்றார் லட்சுமி. “அதில் ரன்-ரேட் பற்றி யாருக்கெல்லாம் தெரியும்?” என்றார் லட்சுமி. “மிஸ் மிஸ்” என்று நாலைந்து பேர் போட்டி போட்டனர். “கவனிங்க... நம்ம இந்திய அணி ஸ்கோர்-110... இப்போ 11 ஓவர் முடிஞ்சிருக்கு. அப்போ ரன் ரேட் எவ்வளவு?” என்று கேட்டார் லட்சுமி. ரவிக்கு உற்சாகம் தாங்கவில்லை. “எப்படி மிஸ் கண்டுபிடிக்கறாங்க?” என்று கேட்டான். “இதுக்கு ரன்ரேட் கண்டுபிடிக்க 110-ஐ 11-ஆல் வகுக்கணும் ரொம்ப ஈ.சி? போர்டை பாருங்க...”

அவ்வளவுதான் ரவி கரும்பலகையை விட்டு தன் கவனத்தைத் திருப்பவே இல்லை. அவனே சொந்தமாக ரன்-ரேட் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளத் துடித்தான். வகுப்பறையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.சரி. மேற்கண்ட 4 காட்சிகளும் நமக்கு விளக்குவது என்ன? அணுகுமுறைகள் ஆசிரியரின் திறன்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இவை நிரூபிக்கின்றன.

காட்சி-1
(1) ரவிக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.
(2) தலைமை ஆசிரியர் அவருக்குப் பேரச்சத்தை ஏற்படுத்துகிறார்.
(3) குழந்தைகள் உரிமை மீறல், தகாத மிரட்டல், உடல் மற்றும் மனரீதியில் உளைச்சல் பலவற்றையும் ஆசிரியை ரவிக்கு ஏற்படுத்தி விடுகிறார்.
(4) தன்மீதும், வகுப்பின் மீதும் வெறுப்பு ஏற்பட்டதால் ரவி கற்றலில் ஈடுபட முடியவில்லை.
(5) அவர் பள்ளியை வெறுக்கத் தொடங்குகிறார்.
(6) மாணவர் நடத்தை மீது கவனம் செலுத்தாமல் மாணவர் மீதே கவனம் குவிகிறது.

காட்சி-2
(1) ரவிக்குத் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லைதான்.
(2)ஆனால், தலைமை ஆசிரியர் அச்சத்தை ஏற்படுத்துகிறார்.
(3)உடல் அளவு தண்டனை இல்லாமல் மனதளவு உளைச்சலை ஆசிரியை ஏற்படுத்துகிறார்.
(4)அதே அச்சம் வெறுப்பு ரவிக்கு ஏற்படுகிறது.
(5)ஒரு கேள்வி கேட்டு விடை பெற்று பாராட்டி ஆசிரியை புன்னகைப்பதன் மூலம் கற்றல் ஓரளவு மட்டுமே சாத்தியமாகிறது.
(6)இந்த காட்சியிலும் நடத்தையின் மீது கவனம் செலுத்தாமல் ரவி எனும் நபரின் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

காட்சி-3
இது சற்று வேறுபட்ட அணுகுமுறை. சராசரியாகப் பலராலும் ஏற்கப்படும் நெறிப்படுத்துதல் இது. ஆபத்தற்ற விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை. தனது நடத்தையைத் தானே மாற்றிக்கொள்ளவும் சரி செய்துகொள்ளவும் இந்த ‘துண்டுச்சீட்டு’ முறை மாணவருக்கு உதவுகிறது. ஆனால் இறுதித் தீர்வு எது என்று பார்த்தீர்களா..? மாணவனின் தலைமை ஆசிரியர் அறையை நோக்கிய அச்சம்.

அதைத் தவிர்க்க அவன் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும். இது ஏனைய முந்தைய மூன்று அணுகுமுறை போலவே, ஆனால், வலி இல்லாமல் வேலை செய்கிறது. தனது பாடமான கணிதத்தைவிட மாணவன், தான் பேசிவிடக்கூடாது என்பதன் மீதே அதிக கவனம் செலுத்துவதால்...
கற்றலை இந்த முறை கடினமாக்கி விடுகிறது என்பதை கவனிக்கவும்.

காட்சி-4
என்ன ஒரு அற்புதம்! வகுப்பே உற்சாகமாகக் கற்றலில் ஈடுபடுகிறதே... இதற்கு என்ன காரணம்? இந்த காட்சியில், தன்னைவிட மாணவர்களின் விருப்பமான இலக்கு ஒன்று அதிக ஆர்வம் ஏற்படுத்துவதாக இருப்பதை ஆசிரியை கண்டறிந்துவிடுகிறார். அதைக் கற்றலுக்குப் பயன்படுத்துகிறார். அவருக்கு தனது கணிதத்தின் மீதும், மாணவர்களின் ஆர்வத்தின் மீதும், பங்கேற்பின் மீதும் அதிக கவனமும் சிறப்பான அணுகுமுறை மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பாங்கும் கைவரப்பெற்றவராக ஆசிரியர் இருப்பதைப் பார்க்கிறோம்.

பாடம், பள்ளி, வகுப்பு என யாவற்றின் மீதும் குழந்தைகளுக்குக் காதல் வரச்செய்யும் இந்த அணுகுமுறை எவ்வளவு முக்கியம்? மாணவன் பேசுகிறான் என்பதைத் தனது தடையரணாக நினைக்காமல் அதையே சாதகமாக ஆக்கும் இந்தக் காட்சி நான்குதான் இன்றைய ‘ஆட்ட நாயகன்’ அல்லவா.
உற்சாகமான வகுப்பறைகளே வன்முறை இல்லா வகுப்பறைகள் என்பதை நிரூபிக்க வேறு என்ன சாட்சி வேண்டும்?




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive