NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Dangal Hindi Movie - குழந்தைகளுடன் பாருங்கள் பெற்றோர்களே!

      இந்திய சினிமாவின் பெருமிதப் பதிவுகளில் ஒன்றாக  “டங்கல்” படம் இடம் பிடித்திருக்கிறது. 


         விளையாட்டுத் துறையில் இந்திய தேசத்தை பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு வெற்றிக்காக இரண்டு தலைமுறைகளின் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம்... இவையே படத்தின் பிரதான களம். படம் பார்த்து வெளிவருவோரின் சில துளி கண்ணீரும், சில நிமிட  அமைதியும் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான சாட்சி... அப்படி ஓர் அழுத்தமான படைப்பை நம் முன் வைத்திருக்கிறார்கள் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்/நடிகர் அமீர்கான்.
இந்தியாவுக்காக சர்வதேச மல்யுத்தக் களத்தில் ஒரு தங்க மெடலையேனும் வெல்ல வேண்டும் என்ற தனது லட்சிய விதையை மகள்களின் மனதில் விதைத்து, அதை விருட்சமாக வளரச் செய்து, அது நனவாகும் சமயம் உண்டாகும் சிக்கல்களை அமீர் கானால்  சமாளிக்க முடிகிறதா என்பதே  படம். 2010- ல் காமல்வெல்த் விளையாட்டில் பதக்கங்கள் வென்ற கீதா - பபிதா சகோதரிகள் வாழ்வில்,  உண்மையாகவே நடந்த நிகழ்வை, திரைக்கதையாக்கி, படமாக நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
1988 காலகட்டம்... அமீர்கான் பணிபுரியும் அலுவலகத்தின் டிவியில் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் டேபிள், சேர்கள் ஓரம் வைக்கப்படுகின்றன. ஒலிம்பிக்கின் பின்னணி வர்ணனையில் அமீர்கானும், சக ஊழியரும் மல்யுத்தம் போடும் அந்த முதல் காட்சியிலேயே நம்மைப் படத்திற்குள் இழுத்துவிடுகிறார்கள். அங்கு தொடங்கும் லயிப்பு படத்தின் இறுதி நொடி வரை பற்றிப் பரவுகிறது. 
படம் ஒரு நாவல் வாசிப்பு போன்ற அனுபவத்தைக் கொடுக்கிறது. ஹரியானா நமக்கு அந்நியம் தான் என்றாலும், அந்த வீடும், அவர்கள் சாப்பிடும் அந்த ரொட்டியும் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. தனக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறப்பதில் விரக்தியாக அமீர்கான் இருக்கும் காட்சிகள் நம்மையும் கனக்க வைக்கின்றன. ஏன் ஆண்தான் வேண்டும்?  பெண்களையே மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றுகிறேன் என அமீரின் அந்த முடிவு... அந்த நேரத்தில் இறுக்கமான முகத்தில் இருந்து அவர் வெளிப்படுத்தும் ஒரு சின்ன சிரிப்பு படத்தின் உணர்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறது.
அமீர்கானின் நடிப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. உறுதியான உடல், பார்வையிலேயே மிரட்டுவது, வயோதிகத்தின் காரணமாக களத்தில் தடுமாறும்போது வெளியிடும் அந்தப் பெருமூச்சு என கிளாசிக்கல் நடிப்பு. தன்னை முன்னிலைப்படுத்தாமல், மகள்களின் கதாபாத்திரத்தையும் கதையையும் முன்னிறுத்தியதிலேயே நம் மனதில் விஸ்வரூபமாய் நின்று பிரமிக்க வைக்கிறார் அமீர்கான். ஒரு சூப்பர் ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொள்ள எந்த ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியையும் வைக்கவில்லை. மிகக் குறைந்த நிமிடங்களே வருகிற ஒரு காட்சிதான் இருக்கிறது. அதே சமயம் அமீர் கான் மட்டுமே படத்தின் கவன ஈர்ப்பு மையம் அல்ல. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்ரூப வார்ப்பு.  
கீதா, பபிதாவாக சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்ரா வாஸிம், சுஹானி பட்நாயகருக்கும் சரி, சிறிது வளர்ந்த கீதா, பபிதாவாக நடித்திருக்கும் ஃபாத்திமா சானா, சான்யா மல்ஹோத்ராவுக்கும் சரி, வேறுபாடுகளே தெரியாத உடல்மொழி. ஃபாத்திமா சனா, பயிற்சி பெறும் காட்சிகள், இளவயதுக்கே உரிய ஆர்வங்கள், அப்பாவுடனான உரசல் என்று ஒவ்வொன்றும் ஒருவித நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். நேஷனல் அகாடமி கோச்சாக வரும் கிரீஷ் குல்கர்னி கண்ணசைவிலேயே தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். 
மணலில் போடும் யுத்தத்திலும், போட்டியில் சிந்தெடிக் மேட்டில் நடக்கும் போட்டியின் போது அந்த மேட்டில் உரசி வரும் ”கிறீச்...” சத்தங்கள் உட்பட பின்னணி இசையில் அத்தனை நுணுக்கம். “டங்கல் டங்கல்...” பாட்டில் நம் நரம்புகள் சூடேறுகின்றன. இசை ப்ரீத்தம்!!! படம் முழுக்க உணர்வுபூர்வமாக காட்சிகள் பல. ஆனால், அவற்றில் முழ நீள வசனங்கள் எதுவும் இல்லை. ட்விட்டர் ஸ்டேட்டஸ் போன்ற பியூஷ் குப்தா, ஷ்ரேயாஸ் ஜெய்ன், நிகில் மல்ஹோத்ரா மற்றும் நிதேஷ் திவாரி குழுவின் வசனங்கள், அழுத்தமாக விதைக்கப்படுகின்றன! 
பெண் குழந்தைகளுக்கான எதிர்கால திட்டங்கள், வறுமைச் சூழ்நிலையில் உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான அடித்தளம், பயிற்சியும் முயற்சியும் தாண்டி மனதிடம் எவ்வளவு அவசியம் என பலப்பல அத்தியாயங்களை அதனதன் அழகு, ஆக்ரோஷத்துடன் மனதில் பதித்துச் செல்கிறது படம். அதிலும் மல்யுத்தக் காட்சிகளின் காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் உலகத் தரம். இரண்டே நிமிடங்களில் நடக்கும் அந்தப் போட்டிகளின் உக்கிரத்தை ஒரு கீற்று கூட குறையாமல் கடத்துகிறார்கள். சர்வதேச போட்டிகளின் அரை இறுதி, இறுதி போட்டிகளுக்கு வித்தியாசமான சவால்கள் வைத்து அதை கீதா எதிர்கொள்ளும்போது... ஒவ்வொரு ரசிகரும் பதறுவது... ஆவ்ஸம் ‘டங்கல்’ மேஜிக்! இதற்காக  உழைப்பைக் கொட்டிய ஒளிப்பதிவாளர் சேது ஸ்ரீராம் மற்றும் மல்யுத்தப் பயிற்சியாளர் கிருபா ஷங்கர் படேல், சண்டைப் பயிற்சியாளர் ஷ்யாம் கௌஷல் ஆகியோருக்கு சிறப்பு சபாஷ்!   
தான் அடைய விரும்பிய ஒரு லட்சியத்தை தன் பெண்கள் அடைய வேண்டும் என்ற வெறியில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரியாகவே காட்சியளிக்கிறார் அமீர்கான். அந்தப் பெண்களின் சின்ன, சின்ன சிறிய ஆசைகள் கூட இரும்புக் கூண்டில் பூட்டி வைக்கப்படுகின்றன. முதலில் எந்தவொரு மோட்டிவேஷனுமே இல்லாமல் இருக்கும் கீதாவும், பபிதாவும் தங்கள் தோழியின் திருமணத்தின் போது, “ உங்கப்பா மாதிரி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்... அவர் உங்களுக்காக சிந்திக்கிறாரே...” என்று சொல்வதன் மூலம் தான் விளையாட்டில் தன்னார்வம் காட்டத் தொடங்குகிறார்கள்..
ஒரு பெற்றோரின் விருப்பங்களைத் திணிக்காமல்,பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்க வேண்டும் என்ற கருத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கி வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அதற்கு முரண்பட்டவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. எடுத்துக் காட்டிற்கு தன்னுடைய விருப்பமான ”போட்டோகிராபியை” படிக்க விரும்பும் ஒரு பிள்ளை இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்... அவரின் அப்பா அவரை “எஞ்சினியரிங்” படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள். படம் முடிந்து அப்பா, அவர் மகனைப் பார்க்கும் பார்வையில் “ பார்... நான் சொல்வது, நீ செய்வது எல்லாம் உனக்கு கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் உனக்கு அது தான் நல்லது. நான் சொல்வதைக் கேள்...” என்பது போல் இருக்கும். ஏனென்றால், எல்லாப் பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும், புழுக்கங்களுக்கும் இறுதி விடையாக “வெற்றி” நிற்கிறது. இன்னொன்றையும் சொல்லலாம், டாக்டர் வீரர், எஞ்சினியரிங் வீரர் என்றெல்லாம் சொல்வதில்லையே.. விளையாட்டு வீரர் என்ற பதத்தைப் பெற வேண்டுமனால், சிறு வயதுமுதலே இப்படியான மனக்கட்டுப்பாடுகளோடுகூடிய பயிற்சிகளைப் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதும் உண்மை. ஒருவர், தன் 18 வயதில் கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்று நினைத்தால் ஆகமுடியுமா? அதற்கெல்லாம் சிறுவயதுமுதலே அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது. அதையே படம் உணர்த்துகிறது.
ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் இழைத்துச் செதுக்கியிருக்கும் படக்குழுவுக்கு எத்தனை பூங்கொத்துகள் பரிசாய் அளித்தாலும் தகும். படத்தில் அமீர் கேட்கும், 'நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு ஒவ்வொரு வீரனும் நெனைக்கறான். ஆனா அந்த வீரனுக்கு எதாவது செய்யணும்னு நாடு நெனைக்கறதில்ல' என்ற ஆதங்கத்திற்கு இனியாவது பதில் கிடைத்தால் நலம்.  
படத்தில், சிறுவயது கீதாவை முதன்முதலில் மல்யுத்தக் களத்தில் இறக்குவார் அமீர். நான்கு ஆண்கள் நின்று கொண்டிருக்க, 'இருப்பதிலேயே ஒல்லியாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்தால் இந்தப் பெண் கொஞ்சம் வலியோடு தப்பிக்கலாம்' என்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் பேசிக்கொள்வார்கள். கீதாவோ, இருப்பதிலேயே வலிமையான ஒரு வீரனை தேர்வு செய்வார். 
கிட்டதட்ட அமீர்கானும் அப்படித்தான். பலரும் நோஞ்சான் கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, ஆழமான கதையைத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார். சினிமா ரசிகர்களுக்குப் பரவசமளிக்கும் இந்தப் பயணம் பன்னெடுங்காலம் தொடரட்டும்! 
திரு.அமிர்கான் அவர்களே!!!!
இந்தியப் பெற்றோர்கள் - ‘உன் வாழ்க்கை... உன் கையில்’னு சொல்லிட்டு பசங்க அவங்களா முன்னேறிக்கணும்னு இருந்துட்டு இருக்கோம். ஆனால், பசங்க எதிர்காலத்துல பெத்தவங்களோட பங்கு எவ்வளவு முக்கியம், அதுக்காக காலம் முழுக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்கும்னு பொளேர்னு புரிய வைச்சுட்டீங்க.
பாலிவுட்டின் சின்சியர் நடிகர்கள் - ‘ஒரு ஏழைக் குடும்பஸ்தனாக தொந்தியும் தொப்பையுமாக நடித்தது சரி. ஆனால், அதன்பின் படத்துக்காக இறுக்கி முறுக்கி செமத்தியான ‘சிக்ஸ் பேக்’ ஃபிட் உடம்பைக் கொண்டு வந்தீர்கள். ஆனால், அந்த ஃபிட் உடலுனான மல்யுத்தக் காட்சிகள் திரையில் வருவதென்னவோ... மிகச் சில நொடிகள்... அதிகபட்சம் சில நிமிடங்கள். இப்படி சில நிமிடங்களுக்காக அவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளீர். சூப்பர்
இந்தியப் பொதுமக்கள் - ’அமீர் கான் நாட்டுப் பற்று இல்லாதவர்’ என்று கோஷம் போட்ட மக்கள், டங்கல் படத்திற்கு முன் திரையரங்குகளில் கட்டாயமாக ஒலிபரப்படும்  தேசிய கீதத்திற்கு உண்மையான உணர்வோடு எழுந்து நின்றார்களோ இல்லையோ, படத்தின் இறுதிக் காட்சியில் பாடப்படும் தேசிய கீதத்திற்கு தானாக எழுந்து நின்றார்கள். அவர்கள், ‘நாங்க என்ன பண்ணாலும், ஏதோ பண்ணி ஸ்கோர் பண்ணிடுறீங்களே அமீர்.
Well Done Aamir khan..! 
---D.ராமராஜ்
   




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive