NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உணவு, விவசாயத்துறை பாதுகாப்புக்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை

          2017 ஆம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அதில் வறுமை ஒழிப்பு, உணவுப்பாதுகாப்பு, விவசாயத்துறை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை வருமாறு:
1) அன்பார்ந்த குடிமக்களே, இந்த 68-வது குடியரசு தின நிகழ்ச்சியில் உங்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், துணை இராணுவப் படை வீரர்களுக்கும் உள்நாட்டு பாதுகாப்புப் படைவீரர்களுக்கும் எனது பிரத்யேக வாழ்த்துகள். இந்தியாவின் எல்லை மற்றும் ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதிலும், சட்டம்-ஒழுங்கை பேணுவதிலும் மகத்தான உயிர்த்தியாகம் செய்த நமது துணிவு மிக்க வீரர்களுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.
2) 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றபோது நம்மிடம் நமக்கென ஆளுகைக்கான சாதனம் எதுவும் இருக்கவில்லை. நமது மக்கள் அனைவரும் நீதி, விடுதலை, சமத்துவம், பாலினப்பாகுபாடின்மை, பொருளாதார சமத்துவம் பெறும் வகையில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள், இந்திய மக்கள் அரசியல் சாசனத்தை உருவாக்கி ஏற்றுக் கொள்ளும் வரை நாம் காத்திருந்தோம். சகோதரத்துவம், தனிநபர் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை-ஒருமைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம் என்று உறுதியளித்தோம்.அன்றுதான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாம் உருவெடுத்தோம்.
3) நமது மக்களின் நம்பிக்கையும், உறுதியும் நமது அரசியல் சாசனத்துக்கு உயிரூட்டியது. ஏராளமான பிராந்திய ஏற்றத்தாழ்வுகளையும், அடிப்படை வசதிகளைக் கூட பெற்றிராத மக்களையும் உள்ளடக்கி, நலிவுற்ற பொருளாதாரமாக இருந்த நமது நாட்டை, தங்களின் அறிவாற்றலாலும், பக்குவமான அணுகுமுறையாலும் துன்பங்களில் இருந்து விடுவித்த பெருமை நமது நாட்டை நிர்மாணித்த தலைவர்களைச் சாரும்.
4) கடந்த 65 ஆண்டுகளாக அல்லாடிக் கொண்டிருந்த நமது பிராந்தியத்தில் பாலைவனத்தில் ஒரு சோலையாக இந்தியா நிலைத்து நின்றதற்கு நமது தலைவர்களால் உருவாக்கப்பட்ட வலுவான ஜனநாயகம் நிறுவனங்கள் தான் காரணம். 1951 ஆம் ஆண்டு 36 கோடி மக்களைக் கொண்டிருந்த நாம், இன்று 130 கோடி மக்கள் தொகையுடன் வலுவான நாடாக பரிணமித்துள்ளோம். எனினும், நமது தனிநபர் வருவாய் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. வறுமை விகிதம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது. சராசரி ஆயுள் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்து எழுத்தறிவில் நான்கு மடங்கு முன்னேற்றத்தை நாம் கண்டுள்ளோம். உலகின் பலமான பொருளாதார சக்திகளுக்கு இடையே, நாம் பொருளாதாரத்தில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறோம். அறிவியல் தொழில்நுட்ப ஆற்றலில் உலகின் இரண்டாவது களஞ்சியமாக நம்நாடு திகழ்கிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய ராணுவத்தையும், அணுசக்தி நாடுகள் அமைப்பில் ஆறாவது உறுப்பு நாடு என்ற பெருமையையும், விண்வெளி ஆராய்ச்சியில் ஆறாவது இடத்தில் உள்ள பெருமிதத்தையும் நாம் கொண்டுள்ளோம். தொழில் சக்தியில் பத்தாவது இடத்தையும் பெற்றுத் திகழ்கிறோம். உணவுக்காக இறக்குமதியை நம்பியிருந்த நாட்கள் போய், இன்று உணவுப் பொருள் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. நாம் கடந்து வந்த இந்தப் பயணம், சம்பவங்கள் நிறைந்தது. சில சமயம் வேதனைகளும் சூழ்ந்தது. என்றாலும், பெரும்பாலான சமயங்களில் நமக்கு உற்சாகம் ஊட்டியுள்ளது.
5) நாம் இதுவரை பின்பற்றிய பாதை நம்மை மேலும் முன்னோக்கி அழைத்து செல்லும். ஆனால், காற்றின் திசைக்கு ஏற்ப நமது பாய்மரத்தை துரிதமாகவும், திறமையாகவும் நாம் சரிசெய்து கொள்ள வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு வரும் முன்னேற்றத்திற்கு ஏற்ப நமது வளர்ச்சியின் பரிணாமமும், முன்னேற்றமும் அமைய வேண்டும், புதுமையும், அனைவரையும் உள்ளடக்கிய புத்தாக்கமும் நமது வாழ்க்கை முறையாக வேண்டும். தொழில்நுட்பத்தின் வேகத்துக்கு ஏற்ப கல்வி ஈடுகொடுக்க வேண்டும். மனிதனுக்கும் எந்திரங்களுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் வெற்றிபெறுவது வேலைவாய்ப்பு உருவாக்கமாகத்தான் இருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை புரிந்து கொண்டு, அதனை கற்றுக்கொண்டு, அதனுடன் இணைந்து செல்வோராக பணியாளர்கள் இருக்க வேண்டும். வாழ்நாள் முழுக்க கற்றுக்கொள்ளும் வகையில் நமது இளைஞர்களை தயாரிக்கும் விதத்தில் நமது கல்வி முறை புதிய கண்டுபிடிப்புகளுடன் கைகோர்த்து செல்லவேண்டும்.
6) உலகம் முழுவதுமே பொருளாதார சவால்களை சந்தித்த நேரத்திலும் நமது பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. 2016-17 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நமது பொருளாதாரம் அதற்கு முந்தைய ஆண்டிலிருந்த அதே 7.2 சதவீதம் வளர்ச்சியை பெற்றிருந்தது. இது நீடித்த வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. நிதி ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் பாதையில் நாம் தற்போது சென்று கொண்டிருக்கிறோம். பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது, நமது ஏற்றுமதியில் இன்னும் கவனம் தேவை என்றாலும், நம் கையிருப்பில் உள்ள அந்நியச்செலாவணியுடன் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தை உறுதியாக வைத்துள்ளோம்.
7) உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கையால், கருப்புப் பணத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட்டு, ஊழலுக்கு எதிரான போராட்டம் நடந்த போதிலும், தற்காலிகமாக பொருளாதார நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது. ரொக்கமற்ற பரிவர்த்தனை அதிகரிக்க அதிகரிக்க நமது பொருளாதாரத்தின் ஒளிவு மறைவற்ற தன்மை மேம்படும்.
8) சுதந்திர இந்தியாவில் பிறந்த மூன்று தலைமுறையினருக்கு காலனி ஆதிக்கத்தின் சுமை தெரியாது. சுதந்திர நாட்டில் கல்வியையும், வாய்ப்புகளையும், கனவுகளை நோக்கிய பயணத்தையும் பெறும் வாய்ப்பை இந்த தலைமுறையினர் பெற்றுள்ளார்கள். இப்படி எளிதாக எல்லாம் கிடைப்பதால், சுதந்திரத்துக்காக நமது ஆண்களும், பெண்களும் கொடுத்த விலை அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த சுதந்திரம் போற்றிப் பாதுகாக்கப்பட தீவிர கண்காணிப்பும், செழுமைப்படுத்தலும் அவசியம் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். நம் ஒவ்வொருவருக்கும்ஜனநாயகம் சில உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த உரிமைகளோடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளும் நம்மை பிணைத்திருக்கிறது.
மகாத்மா காந்தி வார்த்தையில் சொல்வதானால், “உன்னதமான சுதந்திரம் என்பது ஒழுக்கமும், எளிமையும் நிறைந்தது. இந்த ஒழுக்கம் எளிமை மூலம் கிடைக்கும் சுதந்திரத்தை ஒருபோதும் மறுக்க முடியாது, எந்தக்கட்டுப்பாடும் இல்லாத உரிமை கொடுமையானது, தனக்கும், தனது சகாக்களுக்கும் தீங்கிழைப்பது” என்று அண்ணல் காந்திஜி கூறினார்.
9) தங்களுக்கு புகழும், வெற்றியும், மகிழ்ச்சியும் கிட்டும் என்ற நம்பிக்கையுடனும், இலட்சியத்துடனும் பொங்கிக் கொண்டு இருக்கும் இன்றைய இளைஞர்கள், அர்ப்பணிப்புடன் தங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார்கள். தங்கள் வாழ்வுக்கு தேவை மகிழ்ச்சி என்று அவர்கள் நம்புவதை புரிந்துகொள்ள முடிகிறது. அன்றாட உணர்ச்சிகளின் ஏற்ற-இறக்கத்திலும், தங்களின் லட்சியப் பயணத்திலும் மகிழ்ச்சிதான் அவர்களின் குறியாக உள்ளது.
தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு வேலை தேடுகிறார்கள். இந்த வாய்ப்பு கிட்டாத போது அவர்களுக்கு விரக்தியும், மகிழ்ச்சியின்மையும், அதன் காரணமாக கோபமும், பதற்றமும், அழுத்தமும், நடத்தையில் தடுமாற்றமும் ஏற்படுகிறது. நல்ல வேலைவாய்ப்பு மூலம் சமுதாயம் சார்ந்த நடத்தை, சமுதாயத்துடன் இணைந்த செயல்பாடு, பெற்றோரின் வழிகாட்டல், சமுதாயத்தின் அக்கறை ஆகியவை மூலம் அவர்களின் விரக்திக்கு தீர்வு காண முடியும்.
10) நான் அமர்ந்துள்ள இந்தப் பதவியை ஏற்கனவே வகித்தவர்கள் எனது மேசையில் ஓர் அருமையான மேற்கோளை கண்ணாடி சட்டத்தில் பொறித்து வைத்துள்ளார்கள். அதில் “அமைதியான காலத்திலும், யுத்த காலத்திலும் அரசாங்கத்தின் குறிக்கோள் ஆட்சியாளர்களின் புகழ் அல்ல, சாமானிய மக்களின் மகிழ்ச்சிதான் ” என்று பொறிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையே மகிழ்ச்சிதான். அது பொருளாதார ரீதியிலும் இருக்கலாம், பொருளாதாரம் அல்லாத நிலையிலும் கிடைக்கலாம். மகிழ்ச்சியை தேடுவது என்பது மனித குலத்தின் நலன்,உள்ளடக்கிய சமுதாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சியுடன் நெருக்கமான பிணைப்பும் கொண்டது. மக்களின் மகிழ்ச்சியும் நல்வாழ்வுமே பொது வாழ்க்கையின் தரத்தை கண்டறியும் உரைகல்லாக இருக்கும்படி நாம் மாற்ற வேண்டும்.
11) அரசு அறிவித்துள்ள பெரும்பாலான முன்னுரிமை திட்டங்கள் சமுதாயத்தின் நலனுக்காக வகுக்கப்பட்டதுதான். 2019 அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளுக்குள், தூய்மை இந்தியாவை உருவாக்குவதுதான் தூய்மை இந்தியா இயக்கத்தின் குறிக்கோள். கிராமிய பொருளாதாரத்தை மேலும் ஊக்குவித்து வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன்தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது. தற்போது 110 கோடி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள ஆதார் திட்டம் அரசின் நலத்திட்ட உதவிகள், வழியில் ஒழுகாமல் நேரடியாக மக்களைச் சென்றடைய உதவுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம், உலக அளவில் உள்ள டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம் டிஜிட்டல் அறிவாற்றலை உருவாக்கி, ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மேடையாக அமைகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா, அடல் புத்தாக்க இயக்கம் ஆகியவை புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய தொழில் முனைவுக்கும் வழிவகுக்கின்றன. 2022 ஆம் ஆண்டுக்குள் 30 கோடி இளைஞர்களை திறன்மேம்பாடு அடைய செய்வதற்காக தேசிய திறன்மேம்பாடு இயக்கத்தை ஸ்கில் இந்தியா திட்டம் ஏற்படுத்தியுள்ளது.
12) சமுதாய ரீதியிலும், கலாச்சார - மொழி ரீதியிலும், பல்வேறு மதங்களும் கொண்ட பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சகிப்புத்தன்மையற்ற இந்தியனை நமது பாரம்பரியம் ஏற்பதில்லை. விவாதிக்கும் இந்தியனையே அது ஏற்றுக் கொண்டாடுகிறது.
நமது நாட்டில் பல்வேறு சிந்தனைகளும், பலதரப்பட்ட கண்ணோட்டமும், தத்துவங்களும் ஒன்றுக்கொன்று பல நூறு ஆண்டுகளாக அமைதியாக போட்டியிடுகின்றன. செழுமையான ஜனநாயகத்துக்கு அறிவார்ந்த சிந்தனை அவசியம். சிந்தனைகளின் சங்கமத்தைக் காட்டிலும், சகிப்புத் தன்மையும், பொறுமையும்,
ஒருவரையொருவர் மதிக்கும் பண்பும் தான், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படை. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும், சிந்தனையிலும் இந்த பண்புகள் தழைத்தோங்க வேண்டும். பொறுப்புணர்வையும், புரிந்து கொள்ளுதலையும் கொண்ட மனப்பான்மையை அது உருவாக்க வேண்டும்.
13) நமது ஜனநாயகம் அவ்வப்போது சலசலப்புகளை சந்திக்கிறது. என்றாலும், அந்த ஜனநாயகம் மேம்படுத்தப்பட வேண்டும், சரியவிடக் கூடாது . 2014 பொது தேர்தலில் 83.4 கோடி வாக்காளர்களில், 66 சதவீதம் பேர் வாக்களித்து அந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தி உள்ளார்கள். நமது பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் தொடர்ந்து நடைபெறும் தேர்தல்கள் அந்த ஜனநாயகத்தின் ஆழத்தையும், அகலத்தையும் ஒளிரச் செய்கிறது. என்றாலும், பல முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய நேரத்தில் குறுக்கீடுகள் காரணமாக நமது நாடாளுமன்றமும், சட்டமன்றமும் பாதிக்கப்படுகின்றன. தெளிந்த சிந்தனையுடன் விவாதித்து முடிவெடுக்கும் கூட்டு முயற்சி கொண்டுவரப்பட வேண்டும்.
14) நமது குடியரசு 68-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த போதிலும், நாம் கொண்டுள்ள தற்போதைய முறைமை நேர்த்தியானது என்று கூறமுடியாது. இந்த குறைபாட்டை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். நாம் மெத்தனம் காரணமாக விடுபட்டவற்றையும் பரிசீலிக்க வேண்டும். நமது நம்பிக்கை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சுதந்திரம் பெற்றதும் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது போன்று மீண்டும் நடத்தலாமா என்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆக்க பூர்வமான விவாதம் நடத்த இது தக்க தருணம். இது குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்து முடிவெடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.
15) உலகம் கடும் போட்டியை சந்திக்கும் காலம் இது. நமது மக்களுக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கடினமாக உழைத்தாக வேண்டும்.
வறுமைக்கு எதிரான நமது போராட்டம் இன்னமும் ஓயவில்லை என்பதால், கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. வறுமையை ஒழிப்பதற்கு மேலும் சில காலம் நமது பொருளாதாரம் பத்து சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியை தொடர வேண்டும். நமது நாட்டு மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் இன்னமும் வறுமைக் கோட்டின் கீழே உள்ளார்கள். ஒவ்வொருவர் கண்ணிலிருந்தும் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் போதனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
நமது மக்களுக்கு உணவு பாதுகாப்பு கிடைப்பதற்கும், இயற்கை பொய்த்த காலத்திலும் விவசாயத் துறை பாதிக்கப்படாதபடி பாதுகாக்கவும் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. கிராமங்களில் வாழும் மக்கள் கூடுதல் வசதிகளையும், வாய்ப்பையும் பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கையை நடத்திச் செல்லவும்கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி முறையிலும், சேவையிலும் நமது இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்குவதற்கும், கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. உள்நாட்டு தொழில்கள் போட்டி காரணமாக நசிந்து விடாமல் பாதுகாக்க அதன் தரம், உற்பத்தி திறன் முதலியவை மேம்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகிறது.
நமது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும், ஆதாரமும் கிடைக்கச் செய்யவும், பெண்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்திச் செல்லவும், குழந்தைகள் தங்களின் குழந்தைப் பருவத்தை முழுமையாக அனுபவிக்கவும் பணியாற்றகூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, பருவநிலைக்கு கேடுவிளைவிக்காத நுகர்வுக்கு மாறவும், வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி போன்ற சீற்றங்களால் ஏற்படும் துயரங்களை போக்க இயற்கையை பாதுகாக்கவும்கூடுதல் உழைப்பு தேவை.
நமது பன்முகத்தன்மை கலாச்சாரத்துக்கும், சகிப்புத்தன்மைக்கும், சுயநல சக்திகளால் தற்போது ஏற்பட்டுள்ள அபாயத்தைப் போக்க, ஒரு சார்பற்ற, சமன்பட்ட நிதானமான சிந்தனை வழிகாட்டியாக அமைவதற்கும்கூடுதல் உழைப்பு தேவை.
பயங்கரவாத சக்திகள் நமது நலனுக்கு கேடு பயப்பவை என்பதால், அதனை வளரவோ, அனுமதிக்கவோ கூடாது என்பதுடன், உறுதியாக நின்று முறியடிக்கவும் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.
உள்நாட்டிலும், வெளிநாட்டு அபாயத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் நலன் காக்கப்படவும் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.
நமது தாயின் முன்பு நாம் அனைவரும் சமமான குழந்தைகள் என்பதாலும்,நம் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் நமது தாய்நாடு எதிர்பார்ப்பதாலும்,ஒருமைப்பாட்டுடனும், உறுதி குலையாத உணர்வுடனும், நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மாண்புகளை பாதுகாக்க கடமையாற்றவும்,கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.
இவ்வாறு தனது உரையில் பேசினார் பிரணாப் முகர்ஜி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive