NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மரபுவழிக் கல்வி ஏன் மாறாமல் தொடர்ந்து செயல்படுகிறது?

சிறப்புக் கட்டுரை : கல்வி : போதாமைகளும் தீர்வும்
         மரபுவழிக் கல்வியில் பாடம் கற்பிக்கும் முறைகள் நெடுநாட்களாகவே மாறாமலிருக்கின்றன. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வந்தபோது பட்டறைகளில் தொழிலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
      அப்போது அறிமுகமாகிய புதிய தொழில் நுட்பங்களைக் கையாளும் அளவுக்கு தொழிலாளர்களை கல்வியறிவு பெற்றவர்களாகத் தயாரிக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கிய பள்ளிகள் அப்போது தொடங்கப்பட்டன. சங்கு
ஊதினால் பட்டறைக்கு தொழிலாளர்கள் சென்றதுபோல், மணியடித்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றனர். ஆங்கிலம், வரலாறு, கணிதம் என்று ஏதோ ஒரு பாடப்பொருள்பற்றி ஒருமணி நேரம் அல்லது ஒரு 'பீரியட்' வகுப்பெடுக்கும் ஆசிரியர், அதில் பெரும்பகுதியை நேருக்கு நேராக மாணவர்களுக்கு முன்னால் நின்றுகொண்டு விளக்கவுரை நல்கியும், மீத நேரத்தில் கரும்பலகையில் எழுதிக் காண்பித்தும்தான் கற்பித்தார். இன்றுவரை அதே முறை தொடர்கிறது. அந்த ஆரம்ப நாட்களோடு ஒப்பிடும்போது, தற்போதைய அன்றாட வாழ்க்கைமுறையில் பிரமாண்டமான மாற்றங்கள் வந்திருக்கின்றன. அப்போது நடந்தும், மாட்டு, குதிரை வண்டிகளில் பயணித்தவர்கள் இப்போது, பேருந்திலும் மோட்டர் சைக்கிள்களிலும் செல்கிறோம். அப்போது விறகு அடுப்பை பயன்படுத்தியவர்கள், இப்போது 'கேஸ்' (வாயு) அடுப்பை பயன்படுத்துகிறோம். அப்போது கிணற்றில் தண்ணீர் சேந்திப் பயன்படுத்தியவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே குழாய்மூலம் தண்ணீர் பெறுகிறோம். அப்போது பொழுதுபோக்குக்காக வெளியூர்களில் நடந்த தெருக்கூத்துக்குச் சென்று இரவு முழுதும் விழித்திருந்து பார்த்தவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சி பார்க்கிறோம். அப்போது தூரத்தில் இருப்பவர்களோடு பேச அலைபேசிகள் இல்லை. மின்சார விளக்குகள், குளிர்பதன அறைகள், விமானப் பயணம், இணையம் என்று எவ்வளவோ வியக்கவைக்கும் மாறுதல்கள் தற்காலத்தில் வந்திருக்கின்றன.
ஆனால் பள்ளி, கல்லூரிகளில் பாடம் கற்றுக் கொடுக்கும் முறை மாத்திரம் மாறாமலிருக்கிறது. ஆனால் பாடப் பகுதிகள் காலத்துக்கு காலம் மாறியிருக்கின்றன. புதிய தேவைகளுக்கேற்ற வகையில் பாடத் தலைப்புகளும் பாடத் திட்டங்களும் மாறியிருக்கின்றன. செய்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற நவீனத் துறைகளும் பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கற்றுக்கொடுக்கும் முறைகளில்கூட அவ்வப்போது சில மாற்றங்களை முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவற்றால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் நிகழவில்லை. எடுத்துக்காட்டுகளாக ரேடியோவழிக் கல்வி, ஓவர்ஹெட் புரொஜக்டர்கள், பவர்பாயிண்ட் ஸ்லைடுகள், டேப்ரிக்கார்டர்களைப் பயன்படுத்துதல், தொலைதூரக் கல்விமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவையனைத்தும் நேருக்கே நேர் வழங்கப்படும் மரபுவழிக் கல்வியை பதிலீடு செய்ய இயலவில்லை. எனவே, மரபுவழிக் கல்வி இன்னும் பழைய வழிகளிலேயே தொடர்கிறது.
மரபுவழிக் கல்வி முறை மாறாமலிருப்பதற்கு முக்கியக் காரணம்:
மரபுவழிக் கல்வி முறை மாறாமலிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணமிருக்கிறது. கல்வி வழங்குவது என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மாத்திரமல்ல. ஆசிரியரும் மாணவரும் முகத்துக்கு முகம் பார்த்துப் பரிமாறிக்கொள்ளும் பல பரிமாணங்களை அது உள்ளடக்கியிருக்கிறது. அனைத்துக் குழந்தைகளுக்குமே அன்னைதான் முதல் ஆசிரியை. குழந்தையை தவழவைக்க, நடக்கவைக்க, பேசவைக்க, விளையாடவைக்க - அனைத்துச் செயல்களையும் கற்றுக்கொள்ள குழந்தை அம்மாவைத்தான் சார்ந்திருக்கிறது. இல்லத்தைத் தாண்டி வெளியுலகத்தில் ஆரம்ப நிலை ஆசிரியரிடம்தான் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. 'நீ வாடீ' என்று அழைக்கும் அக்காவிடம் 'நீ போடீ' என்று பதில் சொல்லும் குழந்தையின் மழலையை ரசிக்கும் பெற்றோரிடமே, அதே குழந்தை பள்ளியில் சேர்ந்து வீடு திரும்பியபிறகு 'எங்க மிஸ் வாடீ, போடீ என்றெல்லாம் இனிமேல் பேசக்கூடாது' என்று சொல்லிவிட்டார்கள் என்று விழிகள் விரியச் சொல்லும்போது, குழந்தையின்மீது ஆசிரியை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நன்கு உணர்கிறோம். 'மிஸ்' சொல்வது குழந்தைக்கு வேதவாக்குக்கு நிகரானதாகத் தோன்றுகிறது. நேருக்கு நேர் கல்விப் பரிமாற்றம்தான், கற்பித்தல் வழிகளிலேயே சிறந்த வழி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் பணி, மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பதோடு மாத்திரம் நிறைவடைந்து விடுவதில்லை. அவர்கள்தான் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கிறார்கள். மாணவர்களை நாட்டின் நல்ல குடிமகன்களாக மாற்ற அவர்களால்தான் முடிகிறது. மாணவர்களின் கட்டுக்கடங்காத தன்மையை உணர்ந்து, அனுசரித்து, அவர்களின் சுதந்திரங்களின் வரம்புகளைப் புரியவைப்பவர்களும் ஆசிரியர்கள்தான். சமுதாயத்தில் கூட்டு வாழ்வு வாழ, மாணவர்களின் பள்ளி வாழ்க்கைதான் பரிசோதனைக்கூடமாக இருக்கிறது. கல்வியாளர் பெர்னார்ட் கான்ஃபூ - செய்திக்கும் (Information) அறிவுக்கும் (Knowledge) இருக்கும் வேறுபாட்டை விளக்கியிருக்கிறார். சொற்கள், ஒலி, ஒளி மூலம் அனுப்பும் தகவல்கள், தரவுகள், வடிவங்கள், படங்கள், குறிப்புகள், அபிப்பிராயங்கள், மதிப்பீடுகள் ஆகியவை செய்திகளாகின்றன. செய்திகளைச் சுழலவிடலாம். சேமிக்கலாம். ஒவ்வொரு நபரும் அந்தச் செய்திகளை தங்கள் வரலாறு, சூழ்நிலை, சந்தர்ப்பத்துக்கேற்ப மீட்டுருவாக்கி வெளிப்படுத்துவதுதான் அறிவு. செய்திகள் ஒரே அளவிருந்தாலும், அதிலிருந்து பெறப்படுகிற அறிவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. செய்தி பரிமாறப்படுவது. ஆனால் அறிவு ஈட்டப்படுவது; தேடிப் பெறுவது; பொருத்திக் கட்டமைக்கப்படுவது. நேருக்கு நேர் கற்பித்தல் முறையில் செய்திகளை, அறிவாக இயல்பு மாற்ற மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. செய்திகளை, அறிவாக இயல்பு மாற்றம் செய்யும் பயிற்சி பெற மாணவர்கள் அசையா உறுதியோடு உள்ளத் தூண்டுதல்களும் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் அந்தத் திறமையைப் பெற ஆசிரியர்கள் ஊக்கியாக (Catalyst), தூண்டுவிசையாகச் செயல்படுகிறார்கள். களிமண்ணாக இருந்த தன்னை சிற்பமாக வடிவமைத்த ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் மறப்பதில்லை. நேருக்கு நேர் கற்பித்தலில் இத்தகைய பெருநன்மைகள் இருப்பதால்தான், இத்துணை காலம் கற்பித்தல் முறைகளில் பெரிய மாற்றங்கள் புகுத்தப்படாமல் மரபுவழியே தொடர்கிறது என்று தோன்றுகிறது.
கற்பிக்கும் முறை மாற்றப்படாவிட்டாலும், கல்விப்புலம் பெற்றிருக்கும் மாறுதல்கள்:
சுதந்திரத்துக்குப் பின்பு நம் கல்விப்புலம் பெரும் மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. 1950இல் 36 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, 2015இல் 125 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது உலகிலேயே மிக அதிகமான படிப்பறிவில்லாதவர்களைக் (Illiterates) கொண்டிருக்கிற நாடு என்ற சிறுமையை நாம் தாங்கவேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்றபோது நம் நாட்டில் படிப்பறிவு பெற்றவர்கள் 12.2 விழுக்காடுதான். 2011 சென்சஸ் கணக்குப்படி, அது 74.4 விழுக்காடளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேசமயம், சீனாவில் அது 95.1 விழுக்காடளவுக்கு உயர்ந்திருக்கிறது. சுதந்திரத்தின்போது ஆரம்பநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 135000லிருந்து 2011iல் அது 780000ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் தொகை வளர்ந்திருக்கிற அளவுக்கேற்றவகையில் நம் அரசுகளால் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றத்தக்க ஆசிரியர்களைப் பயிற்றுவித்து உள்ளிடவும் இயலவில்லை. அதனால் தனியார்துறையின் உதவி தேவைப்பட்டு, அதுவும் பெறப்பட்டது. அப்படியும் சமுதாயத்தின் கல்விக்கான முழுத் தேவையளவுக்கு, அளிப்பைக் கூட்ட இயலவில்லை. இந்த மாறுதல்களோடு ஏராளமான ஊழல்களும் உள்நுழைந்துவிட்டன. கல்விப்புலத்தில் பால் சார்ந்தும், பொருளியல் சார்ந்தும், சாதிகள் சார்ந்தும் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. அதனால் கல்விப் பங்கீடு நியாயமானதாக இல்லை. கல்வியின் தரம் தாழ்ந்துவிட்டது. சலிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களும், அக்கறையில்லாமல் பாடம் கேட்கும் மாணவர்களும் சந்திக்கும் இடமாக பள்ளிகளும் கல்லூரிகளும் மாறி வருகின்றன. நேருக்கு நேர் கற்பித்தல் முறை மட்டும் தற்போதைய இந்தியாவின் கல்வித் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை. ஆனால் அதற்கு மாற்றுவழிகளும் வரவில்லை. அதனால் இருக்கிற கல்விமுறையில் பலவிதமான தவறுகளும், ஒழுங்கீனங்களும் உள்நுழைந்துவிட்டன. பெரும்பாலான மாணவர்களுக்கு இப்போது அரைகுறைக் கல்விதான் கிடைக்கிறது. அவர்களை சுயமாக சிந்திக்கத் தெரியாத, படிக்கத் தெரிந்த தற்குறிகளாக உலவவிட்டிருக்கிறோம். இப்போது நாடு எதிர்நோக்கும் மிகப்பெரிய சிக்கல் ஆண்டுக்கு ஆண்டு அரசுகளுக்கும், குடும்பங்களுக்கும் கல்விச் செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும்நிலையில், மேலும் மேலும் அதிகமான மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவேண்டியிருப்பதுதான்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive