Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பாரதியார், இலக்கணம், திருக்குறள்.. அர்த்தமுள்ள மீம்ஸால் அசத்தும் இளைஞர்!


"பையன் மீம் க்ரியேட்டரா? அப்ப கைநெறைய சம்பளம் வருமே?" என்று ஜோக் வந்தாலும் வரும். அது உண்மையானாலும் ஆகும். நாடு என்ன பரபரப்பில் இருந்தாலும், மனம் என்ன அழுத்தத்தில் இருந்தாலும் சட்டென்று ஒற்றைப் பகிர்தலில் நம் மனதை இலகுவாக்குவது முகம் தெரியாத பல மீம் க்ரியேட்டர்கள்தான். 'துள்ளி விளையாடலாம்... எல்லைகள் இல்லை' என்பதால் இறங்கி அடிக்கிறார்கள். ஒன்றிரண்டு சிங்கிள்கள் இருந்தாலும், பெரும்பாலும் ஃபோர், சிக்ஸ் என்று பவுண்டரிகள் பறக்கின்றன.
'க்ரியேட்டிவிட்டியில் நாங்க வேற லெவல்' என்று மிரட்டுகிறார்கள். யார் என்ன ஸ்டேட்மென்ட் விட்டாலும், சில நொடிகளில் அதை ஒரு படத்தின் காட்சியுடன் தொடர்புபடுத்தி, அழகான லே-அவுட்டில் சட்டென்று ஒரு மீம் க்ரியேட் செய்துவிடுகிறார்கள்.
ஒரு சில மீம்கள், ஆழமாக 1000 வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஒற்றை நொடியில் கடத்துகின்றன.
மீம்களின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, மெத்தப் படித்தவர், படிக்காதவர் என்ற எந்தப் பாகுபாடுகளும் இன்றி அனைவருக்கும் விஷயத்தைக் கடத்தும் தன்மை. புரியாவிட்டாலும், "ப்ச்.. அந்தப் படத்துல அவன் சொல்லுவான்ல" என்று கொஞ்சம் சொன்னால், "அட.. ஆமால்ல.. செமல்ல?" என்று வியக்க வைக்கும்.
அப்படித்தான் அந்த ஒரு மீம் நம் கண்ணில் பட்டது. 'ஏறு போல் நட' என்ற பாரதியாரின் புதிய ஆத்திசூடிக்கு நெருப்புப் பொறி பறக்க நடக்கும் 'தீப்பொறி திருமுகம்' வடிவேலு படத்தைப் போட்டு ஒரு மீம். சட்டென்று புன்னகைக்கவும் வைத்து, புரியவும் வைத்தது.

தேடினால், அடுத்தது 'ஓய்தல் ஒழி' என்று வடிவேலு 'தூங்குடா கைப்புள்ள....' என்று காலை அகட்டித் தூங்கும் ஸ்டில். இன்னும் தேடினால் பொன்னியின் செல்வன், திருக்குறள், வரலாறு, அறிவியல், தமிழ் இலக்கணம் என்று எல்லாமே யாரையும் தாக்காத, சிந்திக்க வைக்கிற மீம்ஸ். 'யார் சாமி இது' என்று கேட்டோம்.


"என் பெயர் சதீஷ்" என்று அறிமுகமானார்.
"சொல்லுங்க... யார் நீங்க.. பாம்பேல என்ன பண்ணிட்டிருந்தீங்க?" என்று மீம்ஸ் ஸ்டைலில் 'பாட்ஷா' வசனத்தைச் சொன்னோம்.
"சென்னையில தங்கி முதுகலை படிச்சிட்டு இருக்கேன். எழுத்தாளர் ஆகணும்னு ஆசை. சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம். அப்பா அரசு வேலை ஓய்வுக்குப் பிறகு விவசாயம் பார்க்கிறார்."
"எழுத்தாளர் ஆகணும்னு ஆசையா? எழுத வேண்டியதுதானே?"
"அதற்கு அடிப்படை வாசிப்புங்கறதால... படிக்கறேன். படிக்கறதை சட்னு நினைவில் ஏத்திக்க அதை மீமாவும் பண்றேன். என்னுடைய கவிதைகள் விகடன் 'சொல்வனம்' பகுதில வந்திருக்கு."
"இப்படி உபயோகமான, அர்த்தமுள்ள மீம்ஸ் போடற ஐடியா எப்படி வந்தது?"

"கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஃபேஸ்புக்-ல மீம்ஸ் போட்டுட்டு இருக்கேன். ஆரம்பத்துல எல்லார் மாதிரியும் ட்ரோல், கலாய் மீம்தான் போட்டுட்டு இருந்தேன். இப்பெல்லாம் மீம் கிரியேட்டர்ஸ் நிறைய பேர் வந்துடாங்க. நம்ம மீம் தனியா தெரியணும்னா வித்தியாசமா ஏதாவது பண்ணணும்னு யோசிச்சேன். பாரதியார் பாடல்களும் கவிதைகளும் ரொம்பப் பிடிக்கும். பாரதியார் எழுதின புதிய ஆத்திசூடியை வடிவேலு காமெடியோட கற்பனை பண்ணி 'பாரதியார் ஆத்திசூடி- வடிவேலு வெர்ஷன்'னு மீம் போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் கெடைச்சது. தொடர்ந்து நாலு பாரதியார் பாட்டுக்கு மீம் போட்டேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் கதைகள்ல வர்ற சில காட்சிகளை மீம் போட்டேன். நிறைய பேர் பாராட்டுனாங்க. இது மட்டும் இல்லாம தமிழ் இலக்கணம், பொது வரலாறு டாப்பிக்ல மீம் போட்டுட்டு இருக்கேன். எல்லா பாரதியார் பாடல்களையும் மீமா கொண்டு வரணும்னு ஆசை. என்னோட மீம்ஸ்க்கு மிகப்பெரிய பலமா இருக்கறது முகம் தெரியாத இணைய நண்பர்கள்தான். நமக்கு யாருன்னே தெரியாத ஒருத்தரை பத்து நொடி சிரிக்க வச்சிருக்கோம்ங்கிற சந்தோஷம் வேற லெவல் ஃபீலிங்!"
சதீஷ் வெளியிட்டுவிட்ட மீம்ஸ்களோடு, இதுவரை அவர் வெளிவிடாத சிலவற்றையும் விகடனுக்காக அளித்தார். அந்த மீம்ஸ்களைப் பார்க்க.. இங்கே க்ளிக்குங்கள்.
உண்மைதான். இணையத்தை சண்டைக்களமாகவோ, விவாதக்களமாகவோ மட்டுமாகவே பலர் பார்க்கிறார்கள். அப்படி அல்ல; பல திறமைகளை ஊக்குவிக்கிற இடமும் அதுதான். சதீஷ் விதைத்திருக்கிற இந்த விதை, காய்த்துக் கனிந்து பயன் தரட்டும்.
ஆல் த பெஸ்ட் சதீஷ்!
- பரிசல் கிருஷ்ணா

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading