NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிகரிக்கும் “லைவ்” கொலைகள்... தடுக்க என்ன செய்யப் போகிறது ஃபேஸ்புக்?

      ஃபேஸ்புக் லைவ் வீடியோ சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடையப் போகிறது.
இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது ஃபேஸ்புக் பக்கமோ லைவ்வாக வீடியோவை தனது பக்கத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும் என்பது இதன் ப்ளஸ். ஆனால் ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலம் குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்த நிறுவனத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
ஃபேஸ்புக் லைவ்
தற்போது 165 கோடிக்கும் மேலானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட லைவ் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் ஆகின்றன. இணையத்தில் வீடியோக்களின் எதிர்காலமாக ஃபேஸ்புக் லைவ் வீடியோ தான் இருக்கும் என நம்பப்படுகிறது. இது நாள் வரை முக்கிய நிகழ்ச்சிகள், பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் உரையாடுவது, பிரஸ் மீட் போன்றவை இந்த சேவை மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. லைவ் வீடியோ மூலம் பயனாளர்கள் பங்களிப்புடன் 'சிட்டிசன் ஜர்னலிசம்' வரலாறு காணாத வளர்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது.
எந்தவொரு தொழில்நுட்பத்திலும் சாதகமான விசயங்களைப் போன்றே பாதகமான விசயங்களும் நிறைந்திருக்கும். அதனைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் அதிகரிப்பதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் வளர்ச்சி ஏற்பட்டு வந்தாலும், ஃபேஸ்புக் லைவ் மூலம் திரையரங்குகளில் இருந்து பைரஸியாக வீடியோ ஒளிபரப்பாவதும், தற்கொலைச் சம்பவங்களும், குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வரதான் செய்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நகரத்தில் ராபர்ட் காட்வின் என்ற 74 வயது முதியவர் ஒருவரை, ஸ்டீவ் ஸ்டீஃபன்ஸ் என்ற நபர் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை ஃபேஸ்புக் லைவ் மூலம் வெளியிட்டார். இன்னொரு வீடியோவில் தான் இதுவரை 13 பேரை கொலை செய்துள்ளதாகவும் ஸ்டீவ் ஸ்டீஃபன்ஸ் தெரிவித்திருந்தார். அமெரிக்கா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபரை கைது செய்ய காவல்துறை களமிறங்கியது. சம்பந்தப்பட்ட இந்த வீடியோக்கள் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஃபேஸ்புக்கில் இருந்துள்ளது. தற்போது வீடியோக்கள் நீக்கப்பட்டு, கொலையை லைவ் செய்த நபரின் ப்ரொஃபைல் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் ஸ்டீவ் ஸ்டீஃபன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஃபேஸ்புக்கில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கடினமாக முயற்சித்து வருகிறோம். பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட அமலாக்கத் துறையினரிடம் பேசி வருகிறோம்' என இந்த சம்பவம் குறித்து ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததும், சிக்காக்கோ நகரில் நான்கு டீன்-ஏஜ் சிறுவர்கள் மற்றொரு டீன்-ஏஜ் சிறுவனை லைவ் வீடியோவில் தாக்கிய செய்தியும், பெண் ஒருவர் லைவ் வீடியோவில் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கை கவலையடையச் செய்துள்ளது. 'வெளிப்படையான சமூகத்தை உருவாக்க நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது' என இதுபற்றி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் குறிப்பிட்டிக்கிறார். 
பொதுவாக ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யப்படும் வீடியோ ஒன்று சர்ச்சையான கருத்துடையதாக இருக்கும்பட்சத்தில், அதை பயனாளர்கள் ரிபோர்ட் செய்தால் 24 மணி நேரத்துக்குள் நிபுணர் குழு ஆராய்ந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கும். ஆனால் ஃபேஸ்புக் லைவ் வீடியோவை ரிப்போர்ட் செய்யும்போது, அதை ஆராய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தொடக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் விழி பிதுங்கியது. லைவ் வீடியோவை பயனாளர் 'Flag' செய்தால், அதை உடனடியாக ஆராய்வதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நிபுணர் குழுவை ஃபேஸ்புக் நியமித்தது. வன்முறை குற்றச்செயல்கள் போன்ற சமூகத்திற்குப் புறம்பான விஷயங்கள் ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டால் அதை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஃபேஸ்புக் உறுதியளித்துள்ளது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive