NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக் கொள்கை குளறுபடி!

        மத்திய அமைச்சரவை எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைக் கல்வி வரை தேர்வில்லாமல் அனைத்து மாணவர்களையும் வெற்றிபெறச் செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 


       2009-இல் நிறைவேற்றப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்ஒரு பிரிவாக எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லா தேர்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
 
இப்போது ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேர்வு வைத்து மாணவர்களின் தகுதியைநிர்ணயிப்பது என்றும், அதில் சிலர் தேர்வாகாமல் போனால் அவர்களுக்கு மறு தேர்வுக்கான வாய்ப்பை வழங்குவது என்றும் முடிவு எடுத்திருக்கிறது மத்திய அமைச்சரவை.கல்விக் கொள்கை குறித்து மத்திய - மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கும் மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்கிற கொள்கையை மறுபரிசீலனை செய்தது.
இந்தக் கொள்கையின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது என்றும் எட்டாம் வகுப்பில் படிக்கும் பல மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்புக் கணக்குகளைக்கூடப் போடும் திறமையோ, சரியாக வாக்கியங்களை எழுதும் திறனோகூட இல்லாமல் இருந்ததை வாரியம் சுட்டிக்காட்டியது. இதனால்கல்வியின் தரம் குறைந்துவருகிறது என்பதால் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது அந்த வாரியம்.மத்திய கல்வி ஆலோசனை வாரியம் மட்டுமல்லாமல் 25 மாநிலங்களும் தேர்வில்லாமல் தேர்ச்சிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் மிக அதிக மாணவர்கள் படிப்பைப் பாதியில் கைவிடுகிறார்கள் என்பதும் அவர்களால் பொதுத்தேர்வுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதும்தான் அதற்கு அந்த மாநிலங்கள் கூறிய காரணங்கள். எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லாமல்தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ஆம் வகுப்பில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அவர்களால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதும் ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வே எழுதாததால் அவர்களுடைய கல்வித்தரம் நிர்ணயிக்கப்படவில்லைஎன்பதும் 9-ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சியடையாமல் போவதற்கு முக்கியமான காரணிகள்.
இந்தியாவின் கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றாலும்கூட, ஆரம்பக் கல்வி நிலையிலும், நடுநிலைக் கல்வி நிலையிலும், உயர்நிலைக் கல்வி நிலையிலும் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்துவருகிறது. 2015 புள்ளிவிவரப்படி தொடக்கக் கல்வி அளவில் 5 விழுக்காடு மாணவர்களும், நடுநிலைக் கல்வி அளவில் 17 விழுக்காடு மாணவர்களும் கல்வியைக் கைவிடுவதாகத் தெரிகிறது. இதில் மிக அதிகமான பாதிப்பு அரசுப் பள்ளிகளில்தானே தவிர, தனியார் பள்ளிகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி மாணவர்கள் பாதியில் கல்வியைக் கைவிடுவதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் மதிய உணவு திட்டமும், எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லாமல் தேர்ச்சியும் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி அளிக்கப்பட்டன. மாணவர்கள் பாதியில்படிப்பை நிறுத்துவதைக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தால் ஓரளவுக்குத் தடுக்க முடிந்தது என்றாலும்கூட அவர்களது கல்வித் தரத்தை அது உறுதிப்படுத்தவில்லை.
இலவசக் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம், எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லாமல் தேர்ச்சி என்பதுடன் நின்றுவிடவில்லை. பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவது, மாணவர் - ஆசிரியர் இடையேயான விகிதத்தை அதிகரிப்பது, ஆசிரியர்களுக்குத் தகுதி மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது, மாணவர்களுக்குத் தொடர்ந்து திறமை மேம்பாடு குறித்த தரமதிப்பீட்டை நடத்துவது உள்ளிட்டவையும் இச்சட்டத்தின்கீழ்கூறப்பட்டிருக்கிறது. அதேபோல தனியார் பள்ளிக்கூடங்களில் 25 விழுக்காடு இலவச இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தர அந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது.
இதுகுறித்து எல்லாம் மத்திய - மாநிலஅரசுகள் எந்தவித கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை.ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான விகிதம் கணிசமாகக் குறைக்கப்படாமல், மாணவர்கள்மீது ஆசிரியர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்பது இயலாது. அதேபோல ஆசிரியர்களின் தரத்தையும் உறுதிப்படுத்தியாக வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைப்போல அர்ப்பணிப்பு இல்லாமல் செயல்படுவதும் கல்விக் கொள்கைகள் வெற்றியடையாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம். ஆசிரியர் நியமனங்களில் அரசியல் தலையீடும், கையூட்டும் இருக்கும் நிலையில் தரமான கல்வியை உறுதிப்படுத்துவது என்பது எப்படி சாத்தியம்?தேர்வு முறைத் தேர்ச்சியா, பயிற்சி முறைப் புரிதலா என்பது அல்ல முக்கியம். பணக்காரர் - ஏழை வேறுபாடில்லாமல் மாணவர்களுக்குத் தரமான கல்வியும், முறையான கற்பித்தலும் உறுதிப்படுத்தப்படாமல், கல்விக் கொள்கையை வகுப்பதால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடாது.
பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் சிலர் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதையும், வேறு சிலர் கூலித் தொழிலாளர்களாகவும் சமூக விரோதிகளாகவும் மாறும் அவலம் அரங்கேறுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.கல்வி கற்கும்திறன் குறைந்த மாணவர்களை எட்டாம் வகுப்பு நிலையிலேயே இனங்கண்டு அவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிப்பதன் மூலம் திறன் தொழிலாளர்களாக அவர்களைஉருவாக்க முடியும். ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட கல்வி முறை காணப்படுகிறது. அதுபோன்ற முயற்சிகளையும் நமது கல்விக் கொள்கை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive