NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"தி இந்து" தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?


தி இந்து:தலையங்கம்::
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா??

Cps திட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது (CPS வரலாறு)
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை
எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.
புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.




2 Comments:

  1. Nice article our cm must read this

    ReplyDelete
  2. Yesterday one teacher was died in an accident after he contributed with jacto that family so much affected that strike

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive