NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - தினமணியின் தலையங்கம்...

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?
இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.
தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?
ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.
அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.
திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.
ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.
*நன்றி : தினமணி*




7 Comments:

  1. ஆசிரியர்களின் உணர்வுகளை புரிந்து எழுதிய ஆசிரியருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  2. Fact......Fact......Fact

    ReplyDelete
  3. இந்த கட்டுரையை எழுதியவன் என்கிற முறையில் சொல்லிக்கொள்வதாவது: போன ஆண்டு ஆசிரியை உமாமகேஸ்வரி அவர்கள் வகுப்பறையில் மாணவன் ஒருவனால் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலையுண்டது ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக இக்கட்டுரை எழுத நேர்ந்தது. அன்றே இக்கட்டுரை ஆசிரியர் சார்ந்த அனைத்து இணையதளங்களிலும் வெளியிடப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. காலம் கடந்தும் தற்போது அது மறுவெளியீடாக வெளிவந்துள்ளது அதில் காணப்படும் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எழுத்துக்கள் வலிமையானது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடசாலை நிர்வாகிக்கு நன்றி!

    முனைவர் மணி.கணேசன்
    பட்டதாரி ஆசிரியர்
    மன்னார்குடி - 614001
    9442965431.

    ReplyDelete
  4. That's the specialty of padasalai website..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive