NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்

'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

நானும்.....
சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தேன்.பேசுவதற்கு முன்னால் ஒரு அறையில் உட்கார வைத்திருந்தார்கள். என்
பக்கத்தில் அமர்ந்திருந்த அவர்தான் தமிழ் டீச்சராக இருக்க வேண்டும். சார் எங்க students சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க படிக்கிறீங்களா?' என்றார். எனக்கும் பொழுது போகனுமே ,கொடுங்க' என்றேன். அவர் பெருமையோடு மூன்று கவிதைகளை எடுத்து வந்தார். 'நிலா' ன்னு தலைப்பு கொடுத்திருந்தோம் சார். இவங்க மூணு பேரும் சூப்பரா எழுதியிருந்தாங்க '
'எந்த வகுப்பு படிக்கிறார்கள்? ' என்றேன்.
'6 லிருந்து 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சார் '.
' ஏன் 9th to 12 th என்னாச்சு?
'அவங்களை ஸ்டடிஸ்ல மட்டும் concentrate பண்ணச் சொல்லி பிரின்ஸிபால் மேடம் சொல்லிட்டாங்க சார்
'சாப்பிடவாவது விடுவீங்களா?'
என் கிண்டல் அவருக்குப் புரியவில்லை.
'நல்ல ஹெல்த்தி அண்டு ஹைஜீனிக் ஃபுட் தரச் சொல்லி பேரன்ட்ஸ ஃபோர்ஸ் பண்றோம் சார். but அவங்க சரியா கோ ஆபரேட் பண்ண மாட்டேங்குறாங்க சார் '
சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்
.கவிதைகளைப் புரட்டினேன். மூன்றில் ஒன்று பாரதிதாசன் கவிதை 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து '.இன்னொன்று 'வண்ணதாசனின்'நிலா பார்த்தல்.மூன்றாவது கவிதையும் சொந்தக் கவிதையில்லை.யாரோ ஒரு உள்ளூர் கவிஞர் எழுதித் தந்ததாயிருக்கும் என்று மட்டும் ஊகித்தேன்.
டீச்சரிடம் 'வண்ணதாசன் கவிதை படித்ததில்லையா?'கொஞ்சம் கோபமாகக் கேட்டேன்.
அவர் ரொம்ப அப்பாவியாய் 'யார் சார் அது? ' என்று வினவவும் சிரிப்பு வந்து விட்டது.
பாரதிதாசனின் 'நீலவான் ஆடைக்குள் கூட படித்ததில்லையா?
'பாரதிதாசன் தெரியும் சார். அவர் பாவேந்தர். புதுச்சேரியில் பிறந்தவர். குயில் என்ற இலக்கிய இதழை நடத்தியவர். 1964 ல் இறந்தார். இது அவர் கவிதையா? படிச்சதில்ல சார் ' என்றார்.
நீங்க எங்க படிச்சீங்க 'என்று கேட்டேன். ' 'கரஸ்ல சார். ட்வெல்த் முடிச்சதும் கல்யாணம் ஆயிருச்சு. வீட்டுக்காரர் வாத்தியார் சார். அவர்தான் சொன்னாரு,தமிழ் எடுத்தா கஷ்டப்படாம டிகிரி வாங்கிடலாம்னு.அதான் சார் எடுத்தேன். ஆனால், ஸ்கூல் படிக்கறப்பல்லாம் எனக்கு தமிழ்னா அலர்ஜி சார் ' என்றார்
நான் ஒரு நிமிடம் அரசுப்பள்ளிகளின் தரமின்மை குறித்து பொளந்து கட்டும் சில அறிவுஜீவிகளை நினைத்துக் கொண்டேன்.
'ஒரு உதவி செய்றீங்களா?நீங்க ரிஜக்ட் பண்ணிய கவிதைகளை எடுத்துட்டு வர்றீங்களா? ' '
' எதுக்கு சார் '
'பொழுது போகனும்ல'
'ஓகே சார் '
ஒரு கட்டைக் கொண்டு வந்தார். 20 கவிதைகள் இருக்கும். பெரும்பாலான மாணவர்கள் நிலா நிலா ஓடி வா' பாடலையே எழுதி வைத்திருந்தனர். அதையே ஒருவன் வித்தியாசமாக எழுதியிருந்தான்.
'நிலா நிலா ஓடி வா!
ஜீன்ஸ் பேன்ட் கொண்டு வா!
ஜிப்பு போட்டு கொண்டு வா!
நடு வீட்டில் வை
மிஸ் வந்தா பொய் '
அதை எடுத்து ஓரமாக வைத்தேன். அந்தத் 'தமிழரசி ' இதைக் கவனித்தார்.
'பெரிய அராத்து சார் இவன் .கவிதையை வகுப்பில் வச்சு வாசிச்சு காட்டி நல்லா திட்டி விட்டுட்டேன் '
'ஆமா, தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடனும் இல்லையா,?
அவர் அதற்கும் ' எஸ் சார் ' என்றார்.
மற்றொருவன்
'நிலா
உலா
பலா
கலா
டீலா நோ டீலா? '
என்று முடித்திருந்தான்.டிஆரின் தாக்கம் இந்தத் தலைமுறை வரை நீடிப்பதைக் கண்டு வியந்தேன்.
' வானத்தில்
யாரோ
ஆப்பம்
சுட்டு வைத்திருக்கிறார்கள்;
மனிதர்கள்
தூங்கி விட்டார்கள்;
விண்மீன் பூச்சிகள்
தின்ன வருகின்றன '
என்று ஒரு கவிதை. இதையும் ஓரமாக வைத்தேன்.
'இதுவும் அராத்துதான் சார்! ஆனா என்ன கொஞ்சம் நல்லா படிப்பான். அதனால திட்டு வாங்கறதில்ல'
கடைசியாக ஒரே ஒரு கவிதை எஞ்சியிருந்தது.
'நிலா
வானத்தில்;
அம்மா
என் மனதில்;
அம்மா
சோறு தருவாள்;
ஆனால்,
நிலா
இருந்தால்தான் பசிக்கும்.
நிலா
போனால்
வந்து விடுகிறது
.
அம்மா? '
சட்டென்று மனம் கலங்கியது. இது ஒரு நல்ல கவிதை இல்லைதான். ஆனால், கவிதைக்கான ஏதோ ஒரு விதை இதை எழுதிய கரங்களுக்குள் ஒளிந்திருப்பதாகவே உணர்ந்தேன்.
'எனக்கு இன்னொரு உதவி செய்யுங்க! பரிசு வாங்குன மூணு பேரை முதலில் வரச் சொல்லுங்க! அவங்க போனப்புறம் இதை எழுதுன பொண்ண வரச்சொல்லுங்க.பேப்பரை தமிழரசியிடம்' கொடுத்தேன்.
'பிரின்ஸிபால் கிட்ட கேட்டுட்டு கூட்டி வர்றேன் சார்'
அவர் பிரின்ஸிபால் அனுமதித்த பிறகுதான் முதலிரவு அறைக்குள் கூட போயிருக்கக் கூடும்.
அந்த மூன்று பிள்ளைகளும் வந்தார்கள். மூவர் முகத்திலும் கொஞ்சம் பணக்கார களை. இயல்பாகவும் இருக்கலாம். வரவழைக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால், இருந்தது. மூவரில் இரு சிறுமிகள்; ஒரு சிறுவன். இரண்டு பேரும் சீக்கிரமாகவே ஒத்துக் கொண்டார்கள். ஒரு சிறுமியின் சித்தப்பா தமிழ்ப்பேராசிரியராம்.இன்னொரு சிறுமியின் அத்தை தமிழ் ஆர்வம் கொண்ட மேத்ஸ் டீச்சர்(அவர்தான் வண்ணதாசனை கடத்தி வந்து தன் மருமகளிடம் ஒப்படைத்திருக்கிறார்).
பையன் லேசில் ஒத்துக் கொள்ளவில்லை.'என் கவிதைதான் இது ' என்று அடம் பிடித்தான்.' சரி, அந்தக் கவிதை என்ன சொல்லுதுன்னு சொல் பார்ப்போம் 'என்றவுடன் அந்தக் கவிதையை பார்க்காமல் அப்படியே ஒப்பித்தான்.
'தலைவா நான் கேட்டது மீனிங் '
இப்போது லேசாய் தலை கவிழ்ந்து நின்றான்.
அவன் அப்பா தாசில்தார். அவர் ஒரு தமிழாசிரியரைப் பிடித்து, அந்தத் தமிழாசிரியர் ஒரு உள்ளூர் கவிஞரைப் பிடித்து இந்தக் கவிதையை வாங்கி வந்து அவனிடம் தந்திருக்கிறார் (தந்தை மகற்காற்றும் உதவி)
'உங்களுக்கு கவிதை வரலைல. நீங்க ஏன் கவிதை போட்டில சேர்ந்தீங்க? கொஞ்சம் கோபமாகக் கேட்டேன்.
'மிஸ் தான் கண்டிப்பா சேரச் சொன்னாங்க '
மூவரும் கோரஸாகச் சொன்னார்கள்.
'இல்ல சார், நல்லா படிக்கிற புள்ளைகண்ணா கவிதை எழுதிட்டு வந்துரும். அதான் இவங்களை ஃபோர்ஸ் பண்ணினேன் '
'நல்லா படிக்கிற புள்ளைகளுக்குத்தான் கவிதை வரும்ம்னு உங்க கிட்ட சொன்னது யாரு?
' பிரின்ஸிபல் சார் '
இப்போது அந்தச் சிறுமி உள்ளே வந்தாள். கீழ்நடுத்தரக் குடும்பம் என்பது பார்த்த உடனே தெரிந்தது. பெற்றோர்களின் டவுசரையும் உருவிக் கொண்டு திருப்பியனுப்பும் இந்தப் பள்ளியில் இவளைச் சேர்த்ததற்காக இவள் அப்பா யாரோ ஒருவனுக்கு கண்டிப்பாய் கடன்காரனாகியிருப்பார்.
'அம்மா என்ன செய்றாங்க?'
அவள் கைகளைப் பற்றியபடி கேட்டேன்.
'செத்துப் போயிட்டாங்க சார் '
அவள் அழுகையை மென்று முழுங்குகிறாள் என்பது தெரிந்தது.
' எப்ப?
என் குரலும் லேசாக உடைந்திருந்தது.
'போன மாசம். தீ வச்சுக்கிட்டாங்க'
நான் ஏன் என்று கேட்கவில்லை. 'தமிழரசிக்கும்' அது அதிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும். அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது. இதையெல்லாம் பிரின்ஸிபல் கேட்கச் சொல்லியிருக்க மாட்டார்.
'கவிதை உன்னுதா?
பேப்பரைக் காட்டிக் கேட்டேன்.
'சத்தியமா என்னுது சார் '
ஒரு கையை இன்னொரு கையின் மேல் வைத்துச் சொன்னாள்.
'நல்லா இருக்கு. கவிதையெல்லாம் படிப்பியா?'
'தமிழ் புக்கில் உள்ள கவிதையெல்லாம் மனப்பாடமா தெரியும். அப்பப்ப தோணுறத நோட்டில் எழுதி வைப்பேன் '
பரிசு பெற்ற மூன்று கவிதைகளையும் அவளிடம் நீட்டினேன்.
'இதைப் படி '
'சார், இந்தக் கவிதை எனக்குத் தெரியும் '
'எங்க படிச்ச? '
'படிக்கல சார். டிவில போட்ட பட்டிமன்றத்தில் கேட்டேன். பாரதிதாசன் எழுதுனது '
நான் ஒரே ஒரு நிமிடம் திருப்பி டீச்சரைப் பார்த்தேன்.
மற்ற இரு கவிதைகளையும் படித்தாள். இடையிடையே நிறைய சந்தேகம் கேட்டாள்.
'கவிதை என்ன சொல்லுது 'என்று கேட்ட போது கிட்டத்தட்ட சரியாகவே சொன்னாள்.
நான் டீச்சரிடம் சொன்னேன்.
'இந்தப் பொண்ணுக்குத்தான் ஃபர்ஸ்ட் கொடுக்கனும் '
'சார், பிரைஸ் லிஸ்ட் ஏற்கனவே பிரிப்பேர் பண்ணியாச்சு '
தமிழரசி ' பதட்டத்தோடு பதில் சொன்னார்.
'மந்திரிகள் பேரையே தமிழ்நாட்ல அடிச்சு அடிச்சு எழுதுறாங்க. இதுவா கஷ்டம்? நான் சொன்னேன்னு பிரின்ஸிபல் கிட்ட சொல்லுங்க '
'ஓகே சார் '
'தமிழரசி ' முதல்வர் அறையை நோக்கி நடந்தார்.
அந்தச் சிறுமி என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.
'சார்,நான்தான் ஃபர்ஸ்டா?'
அந்தக் குரலில் அப்படி ஒரு சந்தோஷம். அந்த முகத்தில் ஒட்டிக் கிடந்த நெடுநாள் சோகம் இப்போதுதான் இந்த அறையில் உடைந்து சிதறியிருக்க வேண்டும்.
'ஆமா '
நானும் பூரிப்போடுதான் பதில் சொன்னேன்.
'சார் நான் அப்ப அகமது, ஜெயந்தி கிட்ட நான்தான் ஃபர்ஸ்ட்ன்னு சொல்லிடவா? '
'யார் அவங்க'
'என் ஃப்ரெண்ட்ஸ் '
அவள் அந்த அறையிலிருந்து வெளியேறவில்லை. கிட்டத்தட்ட பறந்து போய்க் கொண்டிருந்தாள்.
நான் பேசி முடித்து விட்டேன். டிஎஸ்பி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருந்தார். இலக்கியப் போட்டிகளுக்கு நான்தான் வழங்க வேண்டும். அந்தச் சிறுமிக்கு கை தட்டு கிடைக்கப் போகும் தருணத்தைக் காண ஆவலாயிருந்தேன். 'கவிதைப் போட்டி 'என்று மைக்கில் அறிவித்தார்கள். எனக்குள் ஏன் இப்படி ஒரு குறுகுறுப்பு?'அந்தப் பெண்ணின் பெயரைக் கூட கேட்கவில்லையே.பரிசு தரும் போது கேட்டு விடலாம். என் முன்னால் ஒரு பலூன் உடைந்து சிதறியதைப் போல் இருந்தது. பழைய லிஸ்டில் இருந்த, நான் அறையில் வைத்துப் பார்த்த அந்த மூவரும்தான் என்னிடம் பரிசு வாங்கிப் போனார்கள்.அவர்களின் முகங்களில் எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லை. என்னை விட அழகாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.
நான் 'தமிழரசியை'சைகையால் அழைத்தேன். நான் சொல்வதற்கு முன்னால் அவரே அவசரமாக 'சார் நீங்க சொன்னத பிரின்ஸிபல்கிட்ட சொல்லிட்டேன் சார் 'அம்பை நொந்து என்ன பயன்?பிரின்ஸிபல் என் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார். 'மேடம்! தமிழ் மேடம் கவிதை போட்டி ரிசல்ட் பற்றி உங்க கிட்ட சொன்னாங்களா?
'சொன்னாங்க சார் '
அகலமாய் புன்னகைத்தார்.
'பிறகு ஏன்? '
கோபத்தில் உடல் படபடத்தது.
'கரெஸ்பான்டன்ட் ஆர்டர் சார்'
மீண்டும் அதே அகலமான புன்னகை.
இது மற்றொரு அம்பு.
எனக்கு ரொம்ப தவிப்பாய் இருந்தது. என் முன்னாலிருந்த அந்தக் கூட்டமே அவள் கண்களாய் மாறி என்னைத் துளைப்பதாய் உணர்ந்தேன். அகமதுவும்,ஜெயந்தியும் அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?'போடி பொய் புளுகணி'என்று அந்தக் குழந்தையிடம் பேசாமல் விலகிப் போய் விடுவார்களோ?நான் பார்த்தே இராத அவள் அம்மா எரிந்து விழுந்த காட்சி ஒருகணம் கண்களில் வந்து போனது.
எனக்கு முன்னால் பரிசு வாங்கிய அந்த மூவரும்' இந்தியாவின் எதிர்காலமே அவர்கள்தான் 'என்ற பாவத்துடன் அடக்க ஒடுக்கமாக  அமர்ந்திருந்தனர்.
'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
நானும்.....




2 Comments:

  1. உண்மை , இது நமது கல்வி தொழிற்சாலை

    ReplyDelete
  2. Really, we have to appreciate all the teachers of Govt schools. Why because this type of nonsense never happens in our Govt schools

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive