NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்... எப்போது கிடைக்கும்? அரை கல்வியாண்டு முடியும் நிலையில் தாமதம்

அரை கல்வியாண்டு முடியும் நிலையிலும், அரசு பள்ளிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதில் தாமதமடைவதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

மாநில அரசின் சார்பில் வழங்கப்படும், நலத்திட்ட உதவிப் பொருட்களில் இலவச மிதிவண்டியும் ஒன்று. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பு துவங்கியதும், மாணவர்களுக்கு, சைக்கிள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டும் தாமதம்:
கடந்த கல்வியாண்டில், அரையாண்டு தேர்வுகளும் முடிந்த பின் இறுதியில் தான் வழங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் பலரும், தோட்டத்து வீடுகளிலிருந்து, பஸ் நிறுத்தம் வருவதற்கே தொலைதுாரம் உள்ளது. மேலும், பஸ் வசதியில்லாத பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வருவோரும் உண்டு.இம்மாணவர்கள், அரசின் சார்பில் எப்போது சைக்கிள் வழங்கப்படும் என்றே எதிர்பார்த்திருப்பர். இப்போது, பிளஸ் 1 வகுப்புகளும் பொதுத்தேர்வாகி விட்டதால், அம்மாணவர்களுக்கும் காலையிலும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.
சிறப்பு வகுப்பு:
காலையில், சிறப்பு வகுப்புகளுக்குச்செல்ல, பஸ் வசதியில்லாத பகுதி மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் பஸ்சை பிடிக்க, காலை, 7:00 மணிக்கு முன்னரே செல்கின்றனர்.மாலை நேரத்தில், சிறப்பு வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், பஸ் இல்லாத காரணத்தால் தொலைதுாரம் நடந்தே செல்கின்றனர். இத்திட்டம் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் இரண்டாண்டுகளுக்கும் 'மிதிவண்டிகளை' பயன்படுத்திக்கொள்ளவே செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது, பிளஸ் 2 வகுப்பில் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.
மிதிவண்டிகளை பொருத்துவதற்கான உபகரணங்கள், ஒவ்வொரு வட்டாரத்திலும் மையமாக உள்ள பள்ளிகளில் வழங்கப்படும். பின்னர், அதை முழுமையாக பொருத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அவற்றை மாணவர்களுக்கு வழங்க, முக்கிய பிரமுகர்களின் மூலம் விழா நடத்த காத்திருக்க வேண்டியுள்ளது.
உபகரணங்கள் வரவில்லை:
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், மிதிவண்டி பொருத்துவதற்கான உபகரணங்களே, பள்ளிக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு மாத இடைவெளியில் அரை கல்வியாண்டு முடிகிறது. அதன் பின்பு, மாணவர்களுக்கு தேர்வுகள் மட்டுமே அதிகமாய் நடக்கும். கடந்த கல்வியாண்டில் தாமதமாக வழங்கப்பட்டதால், மாணவர்கள் இக்கல்வியாண்டில் வழங்கப்படுமா என்ற சந்தேகத்துக்கே வந்துவிட்டனர்.
மேல்நிலை வகுப்பை முடித்த மாணவர்களுக்கு, லேப்-டாப் சமீபத்தில் வழங்கப்பட்டது. ஆனாலும், அவ்விழாக்களிலும், மிதிவண்டிகள் வழங்குவது குறித்து எந்த அறிவிப்புகளையும் வழங்கவில்லை. மாணவர்கள் பயன்பெற துவக்கப்பட்ட திட்டம், இப்போது பெயரளவில், அரைகுறையாகவே பயன்படும் நிலையில் உள்ளது.
மாணவர்கள் சிரமம்:
பஸ் வசதியில்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களை சார்ந்த குழந்தைகள், மேல்நிலை வகுப்புகளை தொடர, இத்திட்டமும் முக்கிய காரணமாகும். தற்போது, அரசின் அலட்சியத்தால் சிரமத்துக்குள்ளாகிவரும் மாணவர்களை கண்டு பெற்றோர் வேதனையடைகின்றனர்.
விரைவில் அறிவிக்கப்படும்:
முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், ''அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்புகளும் இல்லை. விரைவில், அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார். 
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களை பொருத்துவதற்கான உபகரணங்களும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்புகளும் இல்லை,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive