NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"போராட்டத்தைக் கைவிடத் தயார்.. ஆனால்....!' பள்ளிக்கல்வி அமைச்சருக்கு உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்!!!

'சம வேலைக்கு சம ஊதியம்' என்று தமிழக அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இன்று, 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 
சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், கடந்த திங்கள்கிழமை முதல் சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். முதல் நாளன்று நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரக அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை கைதுசெய்த போலீஸார், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் அடைத்து வைத்தனர்.
விடிய விடிய அந்த மைதானத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாநிலை மற்றும் உடல்சோர்வு காரணமாக 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 
இந்நிலையில், 'ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் போலீஸாரின் பயிற்சிக்குத் தேவைப்படுகிறது' என்று தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை அங்கிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்தபடியே ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை  தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்து, அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.
``ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அதை நிறைவேற்ற தி.மு.க. தரப்பில் தேவையான அழுத்தம் கொடுக்கப்படும்" என்று அப்போது ஸ்டாலின் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ``இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
இதற்கிடையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஆசிரியர்கள் 4-வது நாளாக தங்களின் போராட்டத்தை இன்றும் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ``ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர்  குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளைக் களையமுடியும். 
மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் திருத்தம்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ) பிறருடைய தூண்டுதலின்பேரில் 23.4.2018 முதல் எவ்வித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 
நானும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசிய பின்னரும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்தப் பிரச்னைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு காண வேண்டப்படுகிறது. என்னுடைய கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிடும்படிக்  கேட்டுக் கொள்கிறேன்'' என்று சொல்லி இருந்தார்.
ஆனாலும், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில், இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகளை, கோட்டைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அந்த அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். 
பேச்சுவார்த்தைக்கும் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். நேற்று, ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாகவே தீர்வு காண முடியும் என்று சொல்லி இருந்தார் அமைச்சர் செங்கோட்டையன். ஆனாலும், ஆசிரியர்கள் போராட்டம் பற்றி பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளை உன்னிப்பாக கவனிக்கச் சொல்லி இருந்தாராம் அவர். அதோடு உளவுப் பிரிவு போலீஸாரும் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ரகசிய அறிக்கை ஒன்றை அரசுக்கு கொடுத்துள்ளார்கள்.அதில், ``ஆசிரியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. உண்ணாநிலை போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து மேலும் பல ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த 25-ம் தேதி மட்டும் 113 ஆசிரியர்கள் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, சென்ட்ரல் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.விடுமுறை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விட்டால் அது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும்" என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள். 
எனவே, ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள். 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், ``எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் போராட்டத்தைக் கைவிடத் தயார். இதற்கான உத்தரவாதத்தை அமைச்சர் செங்கோட்டையன் தரவேண்டும்", என்றார்கள்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படட்டும்..!




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive