NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்

கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம்
சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு
இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம்  புரிந்துகொள்ள முடிகிறது.
கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி "திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் "திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வரக்கூடிய காலங்களில் "தீவிர காலநிலை நிகழ்வுகள்" (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக "குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.
கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார். 
தமிழகத்திற்கு என்ன பாடம்?
ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென "காலநிலை குறித்த" கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். "நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்" (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் "பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு" அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் "காலநிலை மாற்றத்தை "எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் "பொது சுழற்சி மாதிரிகளை" வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு "இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு" இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.
சமீபத்தில் அமெரிக்காவின் "நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்" "காலநிலை மாற்றம்" குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.
"காலநிலை மாற்றம்" மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.





1 Comments:


  1. நாம் கேரளமக்களை நேசிக்கிறோம் என்பதை எப்படி தெரியப்படுத்தலாம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive