Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

தமிழகம் முழுவதும், இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது - வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தால், தமிழகம் முழுவதும், இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆறு மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தென் மேற்கு பருவமழை, 2005க்கு பின், இந்த ஆண்டில் மீண்டும் தீவிரம் காட்டியுள்ளது. வட மாநிலங்களை வெள்ளத்தில் மூழ்க வைத்த பருவ மழை, 10 நாட்களாக, கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில், அதிகமாக கொட்டுகிறது.

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நேற்று முன்தினம், மேக மூட்டத்துடன், தொடர் மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில், ஒரே நாளில், 27 செ.மீ., மழை கொட்டியுள்ளது. சென்னையிலும் இடைவிடாமல், நேற்று மாலை வரை, தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில், 'தமிழகம் முழுவதும் இன்றும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், இன்று மிக கன மழையும், கன்னியாகுமரியில், கன மழையும் பெய்யும். கோவை, நீலகிரி மாவட்டங்களில், மிக அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது, வங்கக் கடலின் மேற்கு திசையில், ஆந்திரா, ஒடிசா இடையே நகர்ந்துள்ளது. தென் மேற்கு திசையில் இருந்து வரும் ஈரப்பதம் மிகுந்த காற்று,

தமிழகம் வழியாக கடந்து செல்வதால், தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில், மிதமான மற்றும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில், வானம் மேக மூட்டமாக காணப்படும்; அவ்வப்போது, லேசான மழை பெய்யும். வங்கக் கடலின், வடக்கு, மத்திய பகுதி கொந்தளிப்பாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால், நேற்று பகல் நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு, 1.20 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது; அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானி சாகர் அணைக்கு, வினாடிக்கு, 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது; 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அமராவதி அணைக்கு, 11 ஆயிரத்து, 968 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது; வினாடிக்கு, 11 ஆயிரத்து, 629 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆழியாறு அணைக்கு, வினாடிக்கு, 6,081 கன அடி நீர் வந்து கொண்டிருந்ததால், 6,480 கன அடி வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சானி அணைக்கு, வினாடிக்கு, 12 ஆயிரத்து, 265 கன அடி நீர் வந்ததால், 30 ஆயிரத்து, 360 கன அடி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார் ஆகிய, 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் அறிவித்துள்ளார்.

வருவாய் துறை செயலர், அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக கமிஷனர், சத்யகோபால் மற்றும் தமிழக பேரிடர் மேலாண்மை கமிஷனர், ராஜேந்திர ரத்னு ஆகியோர், வெள்ள சேதம் தடுப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையை ஒட்டி, இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், செங்கோட்டையில், 27 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது.

சின்ன கல்லார், 21; பேச்சிப்பாறை, 20; திருநெல்வேலி பாபநாசம், 19; வால்பாறை, 16; நீலகிரி தேவாலா, தேனி, 13; குழித்துறை, சென்னை அண்ணா பல்கலை பகுதி, 9; சென்னை டி.ஜி.பி., அலுவலகம், விமான நிலையம், தாம்பரம், 7; அம்பாசமுத்திரம், வட சென்னை, திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், 6 செ.மீ., மழை பெய்தது.


சோழிங்கநல்லுார், கொளப்பாக்கம், இரணியல், குளச்சல், சேரன்மகாதேவி, தென்காசி, தக்கலை, அரக்கோணம், பொள்ளாச்சி, பூந்தமல்லி, திருவாலங்காடு, திருவள்ளூர் பூண்டி, 5; திருத்தணி, பள்ளிப்பட்டு, மணமேல்குடி, காஞ்சிபுரம் மற்றும் காவேரி பாக்கத்தில், 4 செ.மீ., மழை பதிவானது. இதேபோல், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், 3 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.


வெள்ள சேதம் தடுப்பு பணிகளை கவனிக்க, கன்னியாகுமரி - டி.கே.ராமச்சந்திரன், ஈரோடு - உதய சந்திரன், திருச்சி - ராஜிவ் ரஞ்சன், தஞ்சாவூர் - பிரதீப் யாதவ், நாமக்கல் - விக்ரம் கபூர், துாத்துக்குடி - குமார் ஜெயந்த், நாகப்பட்டினம் - சுனில் பாலிவால், திருவாரூர் - மணிவாசன் மற்றும் திருநெல்வேலி - ராஜேந்திர குமார் ஆகிய, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நீர் நிலைகளில் நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. கால்நடைகளை ஆற்றங்கரைகளில் குளிப்பாட்டக் கூடாது. உயர்மட்ட பாலங்கள் தவிர, ஆற்றின் குறுக்கே செல்லும் மற்ற பாதைகளில், எச்சரிக்கை பதாகைகளை, உள்ளாட்சி அமைப்புகள் அமைக்க வேண்டும். நீர் நிலைகளின் சுற்றுப்பகுதியில் நின்று, மொபைல் போனில் போட்டோ, 'செல்பி' எடுக்கக் கூடாது என, வருவாய் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading