NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கற்றல் குறைபாட்டுக்கு சிறப்புப் பயிற்சி!

கற்றல் குறைபாடு என்பது நரம்பியல்
சார்ந்த ஒரு நிலை. இது மூளை விவரங்களை அனுப்புகிற, பெறுகிற மற்றும் புரிந்துகொள்கிற திறனைப் பாதிக்கிறது. கற்றல் குறைபாடு வெவ்வேறு விதமாக குழந்தைகளைப் பாதிக்கிறது. சில குழந்தைகள் நன்றாக புத்தகம் படிப்பார்கள். ஆனால், கணக்குப் பற்றிய  புரிதல் இருக்காது. வேறு சில குழந்தைகளுக்கு வாசிப்புத் திறன் இல்லாமல் இருக்கும். இன்னும் சிலருக்கு எழுதுவதில் பிரச்னை இருக்கும். பிரச்னை  வெவ்வேறாக இருப்பினும் இவை எல்லாமே ‘கற்றல் குறைபாடுகள்‘தான்.

கற்றல் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று எவ்வளவோ கருத்தரங்குகள், ஆலோசனை மையங்கள், பயிற்சி மையங்கள் வந்துவிட்டன. ஆனால், 1992ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக கற்றல் குறைபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தபோதும், இந்தியாவிலோ அப்படி ஒரு குறைபாடு இருக்கிறது என்பதையே அப்போதுதான் நம் மக்கள் மெதுவாக உள்வாங்க ஆரம்பித்திருந்தனர். 
கற்றல் குறைபாடு குறித்த விவரம் அறியாத காலகட்டத்தில் அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியான படிப்பு முறைகளில் ஈடுபடுத்தப்பட்டு, தேர்வுகளை நடத்தி, அதில் எடுக்கப்பட்ட  மதிப்பெண்கள் அடிப்படையில் குழந்தைகளின் திறன்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறந்த மதிப்பெண்கள் எடுக்காத குழந்தைகள் எதற்கும் லாயக்கில்லை என்று ஒதுக்கப்பட்டனர். 
அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தை பி.சந்திரசேகரும் மற்றும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் இணைந்து உருவாக்கிய தன்னார்வ அமைப்புதான் மெட்ராஸ் டிஸ்லெக்‌ஸியா அசோசியேஷன். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கற்றல் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அமைப்பின் தலைவர் ஹரிணி மோகன் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை இனி பார்ப்போம்... 
“ஒரு வகுப்பறையில் மாறுபட்ட திறன்கள் கொண்ட பல்வேறு குழந்தைகள் பயில்கின்றனர். ஒரே மாதிரியான கற்றல் முறைகளால் அவர்களுக்கு பாடம் நடத்துவதால் பாடத்தை துல்லியமாக படிக்கமுடியாமல் பின்தங்கி விடுகின்றனர். இம்முறைகளால் அவர்களின் தனித்திறன் மறைக்கப்படுவதோடு மற்ற மாணவர்களிடமிருந்து பிரித்து ஒடுக்கப்படுவதற்கும் ஆளாகின்றனர். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் கற்பிக்காமல் ஆசிரியர்களுக்கு புரிந்த வழியில் பாடம் நடத்தப்படுவதால் ஏற்படும் அவலம் இது. 
இந்த அவலத்தை போக்கி மக்கள் மத்தியில் கற்றல் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை கடமையாக கொண்டு தொடர்ந்து 26 வருடங்களாக இயங்கிவருகிறது மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா தன்னார்வ நிறுவனம்.’’ என்ற ஹரிணி அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கலானார்.  
‘‘கற்றல் குறைபாடு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்துவதையே முதன்மை செயல்பாடாக கொண்டு பள்ளி/கல்லூரிகளில் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்தி பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 
குழந்தைகளுக்கு திறனாய்வுத் தேர்வு வைத்து அதில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களிடம் கற்றல் குறைபாடு உள்ளதா என்பதை உறுதி செய்கிறோம். அப்படி கற்றல் குறைபாடு இருக்கும்பட்சத்தில் சிறப்பு கல்வியாளர்கள் மூலம் அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கிறோம். பார்ட் டைம் ரெமிடியல், ஃபுல் டைம் ரெமிடியல் என கற்றல் முறைகளை இரண்டாக பிரித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வருட காலம் பயிற்சி அளிக்கிறோம்.
ஃபுல் டைம் ரெமிடியல் முறைக்கென தனியாக அனன்யா கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தி.நகரில் இயங்கி வருகிறது. அவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கிறோம். மேலும் பார்ட் டைம் ரெமிடியல் முறைக்காக பள்ளிகளில் ரிசோர்ஸ் ரூம் ஒன்றை உருவாக்கி பள்ளியிலிருந்தபடியே கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை சிறப்பு கற்றல் முறையில் கல்வி கற்க செய்கிறோம். 
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உடனடி தீர்வு காண 2014ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ரிசோர்ஸ் ரூம் கற்றல் மையங்களின் அமைப்பால் கோவை, மதுரை, சென்னை என இதுவரை 4 தமிழ் வழி அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 36 பள்ளிகளில் கற்றல் மையங்களை உருவாக்கியுள்ளோம்’’ என்கிறார் ஹரிணி.
‘‘கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க அந்தந்த குழந்தைகள் பயிலும் பள்ளியிலேயே கிடைத்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் தான் ரிசோர்ஸ் ரூம் கற்றல் மையத்தின் தொடக்கப்புள்ளி. பள்ளிகளுக்குச் சென்று நிர்வாக பொறுப்பாளர்களை அணுகி, ஆசிரியர்களுக்கு சிறப்பு கல்வியாளர்கள் மூலம் பயிற்சியளித்து முற்றிலும் புதிய கற்றல் முறைகளை சொல்லிக் கொடுப்பதற்கு அவர்களை தயார் செய்வோம். 
பின் ஒரு ரிசோர்ஸ் ரூமிற்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற முறையில் கற்றல் குறையுள்ள மாணவர்களுக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கற்றல் முறைகளில் பாடம் நடத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு பதினாறு முறை எனப் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கண்காணிப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட வழிவகை அமைகிறது. ஒரு நாளைக்கு ஒரு பீரியட் (40 நிமிடம்) வீதம் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கற்றல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது’’ என்ற ஹரிணி தமிழ்வழி பயிற்சிக்கான உபகரணங்களைத் தயாரிப்பதுதான் பெரும் சவாலாக இருந்தது என்கிறார். 
‘‘கற்றல் குறைபாடு மாணவர்களுக்கான சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும்  பயிற்சி முறைகள் அத்தனையும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. அதை தமிழ் மாணவர்களுக்கு உகந்தபடி வடிவமைப்பது பெரும் சவாலாக இருந்தது. 
பயிற்சித்தாள்கள், மின்னட்டைகள், புத்தகம் உள்ளிட்ட பல உபகரணங்களுடன் பயிற்சித் தீர்வு முறைகளை தமிழில் வடிவமைத்தோம்.  ஆரம்ப நிலைப் பள்ளி அளவில், திறனாய்வின் மூலம் குழந்தையின் நிலையைக் கண்டறிந்து சென்னை பெருங்குடியில் இயங்கும் லேடி நை அரசுப் பள்ளியில் ரிசோர்ஸ் ரூமை உருவாக்கினோம்.
மத்திய அரசின் ராஷ்டிரிய மத்யமிக் சிக்க்ஷா அபியான் திட்டத்தின் கீழ் உள்ள 32 ஆசிரியர்களுக்கு தமிழ்வழிப் பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு தமிழில் வாசித்தல், எழுதுதல்,புரிந்துணர்வுப் பயிற்சி ஆகியவற்றை அளித்தோம். நிறைய குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. 
பள்ளிகளின் பொது ஆசிரியர்களும், பெற்றோர்களும் இம்முயற்சியை பெருமளவு வரவேற்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களையும் அவர்களுக்கு புரியும் வகையில் கல்வி கற்கச்செய்து அவர்களையும் வெற்றியாளர்களாக வலம்வரச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் லட்சியமாக உள்ளது” என தன்னம்பிக்கை உருவாக்கும் விதமாக முடித்தார் ஹரிணி மோகன்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive