NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவியல்-அறிவோம்: காய்ச்சல் என்பது நோயா?

காய்ச்சல் என்பது நோயா? உண்மை அறிவோம்.


 ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம்.இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோயா?

காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல . மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் ஒரு நிலைதான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.

காய்ச்சல் மூளையை பாதிக்குமா?

காய்ச்சல் காரணமாக குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.

மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?

அப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.

காய்ச்சலுக்கு என்ன சிகிச்சை செய்யலாம்?

காய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிச்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிச்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரசுகளை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான்.நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும்.
குழந்தை மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம்.
சுயமாக எடுத்துகொள்ளும் சிகிச்சை மற்றும் போலி மருத்துவர்களிடம் எடுத்துகொள்ளும் சிகிச்சை போன்றவற்றில் உடல் வெப்பத்தை குறைக்க முயற்சிக்கிறோமே தவிர  கிருமியை அழிக்க அல்ல.
 
(சீ.ஹரிநாராயணன்)

 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive