NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!



           பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி வருவதாக குறிபிடுகின்றனர். மக்கள் தங்களுக்குத் தோன்றும் கருத்துகளை எளிதாகவும், சுருக்கமாகவும் கூறியவை தான் பழமொழிகள். அவ்வாறு புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும் .. 


              பசி வந்திட பத்தும் பறந்து போகும்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.


சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்



இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.



பெண் புத்தி பின் புத்தி



நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு  பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக - சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள்.  பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.



ஆறிலும் சாவு; நூறிலும் சாவு



மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.



பந்திக்கு முந்து படைக்கு பிந்து



வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.



குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்



நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.



சோழியன் குடுமி சும்மா ஆடாது!



சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.



கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்



பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.



தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!



தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.



கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்



இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.



மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்



ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.



அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்



இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது.



ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?



பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.



ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.

Source : http://temple.dinamalar.com/news_detail.php?id=29367




8 Comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, பந்திக்கு முந்து படைக்கு முந்து

    பந்தி என்றால் விருந்து சாப்பிடும் போது படைவீரர்களின் கைகள் உணவு எடுக்க முன்பக்கம் வரும் போர் செய்யும்போது வில்லின் அம்பை இழுக்க பின்பக்கம் போகும் அதனால்தான் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என வந்தது என ஒரு விளக்கம் உண்டு

    ReplyDelete
  2. very nice explanation

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. excellent keep it up.

    ReplyDelete
  6. புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  7. புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive