Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Cellphone Doubts: GPS


9.ஜி.பி.எஸ்
     குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் என்று பொருள்படும் இந்த ஜிபிஎஸ் ஆனது உலகில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம். எவ்வளவு வேகத்தில் எந்த திசைநோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிய உதவும் தொழில்நுட்பமாகும். அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி சற்று விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

    நாம் இருக்கும் இடத்தை அறிய உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்க பல நாடுகளின் விஞ்ஞானிகள் முயன்று வந்தனா். அவ்வகையில் 1960 அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் சரியாக செயல்படத் துவங்கியது. இதனால் இது அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் போக்குவரத்து சார்ந்த சேவைகளுக்கு இவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

9.1.ஜி.பி.எஸ் செயல்படும்விதம்
     ஜி.பி.எஸ் தொழில்நுட்பமானது வெற்றிலையில் மையை தடவி கண்டுபிடிப்பதைப் போன்று மிக எளிதான காரியம் அல்ல. இம்முறையில் சிறப்பு செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தப்படும். அவை தகவல் உருவாக்கப்படும் நேரத்துடன் கூடிய பைனரி (0 மற்றும் 1) கோடுகளை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கும்.
     இந்த தகவலை பெரும் ஜி.பி.எஸ் டிராக்கர்களானது தகவல் உருவாக்கப்பட்ட நேரத்திற்கும், பெறப்பட்ட நேரத்திற்கு இடையேயான நேர இடைவெளியை கண்டறியும். இந்த சமிக்கைகள் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு தொலைவு செல்லும் என்பது அறியப்பட்டிருக்கும். எனவே பயன நேரம் மற்றும் சமிக்கைகளின் சராசரி வேகத்தினைக் கொண்டு டிராக்கர் மற்றும் செயற்கைக் கோள்களுக்கிடையேயான தொலைவு சற்று ஏறக்குறைய கணக்கிடப்படும். இதனடிப்படையில் செயற்கைக் கோள் மற்றும் டிராக்கரின் இடைத் தொலைவின் அடிப்படையில் ஒரு அனுமான வட்டமானது உருவாக்கப்படும். இந்த வட்டத்தில் எதோ ஒரு புள்ளியிலேயே டிராக்கரின் இருப்பிடம் அமைவிடம் இருக்கும். ஆனால் இந்த தகவலை மட்டும் கொண்டு உங்கள் டிராக்கரின் இருப்பிடத்தை அறிய முடியாது.
     இதற்கடுத்த நிகழ்வாக மேற்கண்ட செயல்முறையானது மற்றொரு அருகாமை ஜி.பி.எஸ் செயற்கைகோளுடன் தொடா்பினை உருவாக்கும். இதனால் முதல் செயற்கைக்கோள் உருவாக்கிய அனுமான வட்டத்தினைப் போன்று இரண்டாவது அனுமான வட்டமானது உருவாக்கப்படும். முதல் வட்டத்தினைப் போன்றே இந்த வட்டத்தின் ஏதொவது ஒரு புள்ளியில் நம் ஜி.பி.எஸ் டிராக்கர் இருக்கும். இவ்விரு வட்டங்கள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் பகுதியில் நம் ஜி.பி.எஸ் கருவி (போன்) இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் இருவட்டங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வெட்ட வாய்ப்புள்ளது. இதனால் எது உங்கள் இருப்பிடம் என துல்லியமாக அறிய இயலாது.

     இந்த சூழலுக்கு விடையளிக்க மூன்றாவது ஜி.பி.எஸ் செயற்கைக்கோள் அவசியமாகும். டிராக்கரானது முந்தையதைப் போன்றே இந்த அருகாமை செயற்கைக்கோளைத் தொடர்பு கொண்டு, மூன்றாவது அனுமான வட்டத்தினை உருவாக்கும்.

     இந்நிலையில் இந்த மூன்று வட்டங்களும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இடத்தில் நம் ஜி.பி.எஸ் கருவி இருக்கும் என கூறமுடியும். இந்த பகுதியை ஒரு வரைபடத்தின் மீது அமைத்து, நம் இருப்பிடத்தை ஜி.பி.எஸ் அறியச் செய்யும். இவ்வாறு மூன்று செயற்கைக்கோள்களைக் கொண்டு இருப்பிடம் கணக்கிடப்படும் முறையை டிரையாங்குலேஷன் என்று அழைப்பர்.

     இவ்வாறு மூன்று அனுமான வட்டங்கள் வெட்டும் புள்ளியை மட்டும் கொண்டு இருப்பிடத்தை மிகத்துல்லியமாக கணக்கிடமுடியாது. எனவே அடுத்தடுத்த தலைமுறைகளாக செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. இதனால் இடத்தின் துல்லியம் அதிகரிப்பது மட்டுமின்றி தவறான இடத்தை கணக்கிடும் வாய்ப்புகளும் மிகவும் குறைந்துள்ளது. தற்போது சுமார் 30 ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஒட்டுமொத்த  பூமியை சுற்றி வருகின்றன. ஒரு நாளின் 24மணிநேரமும் இந்தியாவின் மீது சுமார் 6 முதல் 10 ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.

     ஆரம்பகால ஜி.பி.எஸ் கருவிகள் (டிராக்கர்கள்) உருவத்தில் பெரியவை. இவை செயல்பட சக்திவாய்ந்த மின்னாற்றாலும், இடத்தினை அறிய தனித்த திரைகளும் தேவைப்பட்டன. துவக்க காலங்களில் ராணுவ வாகனங்கள், அணு ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விமானங்களின் இடத்தை அறியவே ஜி.பி.எஸ் தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டது. சமானியர்களுக்கு தடைசெய்யப்பட்டதாக இருந்த இந்த தொழில்நுட்பமானது, பல ஆண்டுகளுக்கு பிறகே வெகுஜன மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

     இதிலும் ஆரம்பகால ஜி.பி.எஸ்கள் அளவில் பெரயதாகவே இருந்தன. இதனால் கப்பல்கள் மற்றும் பெரிய டிரக்குகளின் இருப்பிடம் மற்றும் நகர்வினை அறிய மட்டுமே ஜி.பி.எஸ் பயன்படுத்தப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளுக்கு பின்னரே கார்களில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ் டிவைஸ்கள் வடிவமைக்கப்பட்டன. இவையும் ஏறத்தாழ முந்தைய தலைமுறை வி.சி.ஆர் ப்ளேயர்களின் அளவிற்கு பெரியதாக இருந்தன. தற்கால கார் ஜி.பி.எஸ்கள் மிகவும் கையடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ ஒரு ஸ்மார்ட் போனின் அளவே இவை இருக்கும்.

     கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையில் பயன்படுத்தப்படும் ஜி.பி.எஸ் டிராக்கர்கள் தீப்பெட்டியின் அளவிற்கு சிறியவை. இந்த நிமிடம் அவை எங்கு உள்ளன என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்டுபிடிக்கலாம்.

     நவீன செல்போன்களின் வரவு இந்த ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை தினசிரி வாழக்கையின் ஒரு அங்மாக மாற்றியுள்ளது. கையடக்கத் திரை, நேரடியாக செயற்கைக்கோள்களை தொடர்பு கொள்ளும் திறன், எடை குறைந்த பேட்டரி மற்றும் சாமானியர்களும் வாங்கக் கூடிய விலை போன்றவை ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை இன்று அனைவருக்கும் சாத்தியமாக்கியுள்ளது.

9.1.1.ஜி.பி.எஸ்ஸின் பயன்கள்
                பயணங்களின் போது நாம் இருக்கும் இடத்தை அறியவும், செல்ல வேண்டிய இலக்கிற்கான திசை, கடந்த தொலைவு, கடக்க வேண்டிய தொலைவு மற்றும் மாற்று வழித்தடங்கள், டிராபிக் நெரிசல், டைவர்ஷன்கள் மற்றும் சாலை விபத்துகளை அறியவும் இவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

        நவீன ஜி.பி.எஸ் டிவைஸ்கள் உங்களின் இருப்பிடத்தை உடனுக்குடன் அப்டேட் செய்யும். எனவே உங்கள் வாகனம் சிறிய திருப்பத்தில் திரும்புவதையும், உங்கள் வாகனத்தின் வேகம் மற்றும் கடல்மட்டத்தில் இருந்து நீங்கள் இருக்கும் பகுதியின் உயரத்தையும் கூட நொடிக்கு நொடி அளவிட முடியும். சென்னை போன்ற மாநகரங்களில் செல்ல வேண்டிய இடங்கள் மற்றும் மாற்று வழிகளை அறிய இவை சிறப்பாக உதவும்.

           கால் டாக்ஸி, கார்கோ எனப்படும் சரக்கு வாகனங்கள் மற்றும் சொகுசு பஸ்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு, அவற்றின் இருப்பிடம் மற்றும் வேகம் போன்றவை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.

            விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் குழந்தைகளின் இருப்பிடத்தை அறியவும் இவை பொருத்தப்படுகின்றன. வாகனம் திருடப்பட்டாலும் இவை தொடர்ந்து வாகனத்தின் இருப்பிடத்தை உரிமையாளருக்கு தெரிவிக்கும்.

             வேகம் காட்டும் கருவியாகவும், மலை ஏறுபவர்களுக்கு உயரம் காட்டும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

                ரியல் எஸ்டேட் மற்றும் நிலஅளைவைத் துறையிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு இடத்தின் லேடிடியுட் மற்றும் லாங்கிடியுட் (அட்சக்கோடு மற்றும் தீா்க்கக் கோடு) மதிப்புகைளை இவற்றைக் கொண்டு கண்டறியலாம். எனவே பாலைவனம், காடு மற்றும் கடல் போன்ற அடையாளம் காணுமி பகுதிகள் (லாண்டுமார்க்) இல்லாத இடங்களில், ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய இவை மிகவும் அவசியமாகும்.

         நேரடி செயற்கைக்கோள் தொடர்பு பெற்றவை ஆகையால் செல்போன் சிக்னல் சிறிதும் இல்லாத இடங்களான காடுகள் மற்றும் கடல்பகுதிகளிலும் வழிகாட்டியாக இவை பயன்படுத்தப்படுகின்றன. (அப்பகுதியின் ஆப்லைன் மேப்பானது முன்னரே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்).
 
               சிம்கார்டு சிக்னலினைப் போன்று இவற்றின் சிக்னல்கள் அருகாமை டவர்களால் பெருக்கப்படுவது (ஆம்ப்ளிபை செய்யப்படுவது) இல்லை. எனவே பெரிய மற்றும் பலமாடிக் கட்டிடங்கள் ஜி.பி.எஸ் சிக்னலின் வலிமையினைக் குறைக்கும். எனவே கட்டடங்கள் அற்ற, வானம் பார்த்த திறந்த வெளியே சிறப்பான ஜி.பி.எஸ் செயல்பாட்டை உறுதிசெய்யும்.

9.2.எ-ஜி.பி.எஸ்
 
              அஸிஸ்டட் ஜி.பி.எஸ் எனப்படும் இவை, ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்களின் பணியை குறைக்க உருவாக்கப்பட்டவை. இம்முறையில் உங்கள் போனில் செயல்படும் சிம்கார்டு மற்றும் அதன் டவரானது அந்த போன் இருக்கும் இடத்தை எளிதில் அறிய உதவும். இம்முறையில் செல்போன் டவர்களில் இருந்து முதல் தகவல் பெறப்பட்டு, அதன் அருகாமை பகுதி ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்களில் இருந்து எளிதில் கூடுதல் தகவல் பெறப்படும்.  இதன் பயனாய் விரைவாகவும் உடனுக்குடனும் போனின் இருப்பிடத்தை அறியலாம். ஜி.பி.எஸ்களைவிட இவற்றின் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செலவு குறைவாகும்.

     பல செல்போன் டவர்களை அருகருகே கொண்ட பெருநகரங்களில் இம்முறை சிறப்பாக செயல்பட்டாலும், டவர்களின் எண்ணிக்கை குறைந்த கிராமப்புறங்களில் இவற்றின் துல்லியம் குறையும். செல்போன் சிக்னல் அற்ற கடல் மற்றும் காடுகளில் இவை செயலற்றுப் போகும்.

9.3.க்ளோனாஸ்
             அமெரிக்க ஜி.பி.எஸ் சிஸ்டம்களுக்கு போட்டியாக ரஷ்யர்களால் உருவாக்கப்பட்ட பொஷிசனிங் சிஸ்டமே க்ளோனாஸ் ஆகும். இந்த தொழில்நுட்பமும் இன்று பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவின் ஜி.பி.எஸ் தகவல் பரிமாற்றத்திற்கு சுமார் 30 சிறப்பு செயற்கைக் கோள்களும்,  ரஷ்யாவின் க்ளோனாஸ் நேவிகேஷனிற்கு சுமார் 24 சிறிப்பு செயற்கைக்கோள்களும் நம் புவியை வட்டமடித்துக் கொண்டு தகவல் தருகின்றன. பெரும்பாலான நவீன போன்கள் ஜி.பி.எஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகிய இரண்டு நேவிகேஷன் முறைகளையும் சேர்த்தே தங்கள் போன் நேவிகேஷன் அமைப்பில் பயன்படுத்துகின்றன.

9.4.பெய்டூ
          சீனா தனி செயற்கைக்கோள்களுடன் கூடிய தனக்கான தனித்த நேவிகேஷன் அமைப்பை உருவாக்கியுள்ளன. 2020ல் முழுவதுமாக செயல்பட உள்ள இந்த தொழில்நுட்பமானது ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களை மட்டும் நேவிகேட் செய்ய உதவும். சில ஆசிய சந்தையை குறிவைக்கும் மொபைல்போன் நிறுவனங்கள் பெய்டூ நேவிகேஷன் தொழில்நுட்பத்தையும் தங்கள் போனில் பயன்படுத்துகின்றன.

9.5.கலிலியோ
        ஐரோப்பிய நாடுகளும் தங்களுக்கான தனித்த நேவிகேஷனை உருவாக்கி வருகின்றன. 2019வாக்கில் முழுவதுமாக செயல்பட உள்ள இந்த நேவிகேஷன் தொழில்நுட்பமும் ஐரோப்பிய நாடுகளில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

9.6.ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்
             இந்தியன் ரீஜினல் நேவிகேஷன் சேடிலைட் சிஸ்டம் என்ற இந்திய அரசின் தனித்த நேவிகேஷன் தொழில்நுட்பமும் 2015-2016 செயல்பட தயராகிக் கொண்டு வருகின்றன. போர் காலங்களில் இலவச நேவிகேஷன் செவை அளிக்கும் நிறுவனங்கள் சேவையை நிறுத்தவும் வாய்ப்புள்ளன. எனவே பெரும்பாலான நாடுகள் தங்களுக்கான தனித்த நேவிகேஷன் அமைப்பை உருவாக்க பல பில்லியன் டாலர் பணத்தினை செலவு செய்து வருகின்றன. (கார்கில் போரின் போது அமெரிக்க ஜி.பி.எஸ் சேவை நிறுத்தப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம்)


Author by P.A.Thamizh.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive