நகரமயமாதல், வாழ்க்கை முறை
மாற்றங்களால் இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
என்றார் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்
சுரேஷ்குமார்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய மருத்துவக் கழகத்தின் தஞ்சாவூர் கிளைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
நம் நாட்டில் இளம் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 12 லட்சம் பேர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், இதில் பாதிக்கும்
மேற்பட்டவர்களுக்குப் பரிசோதனையின் போது புற்றுநோய் முற்றியிருப்பதும்
தெரியவந்துள்ளது.
உலகமய நுகர்வுச் சூழல், அதிகமாக பெருகிவரும் தொழில்,
சுற்றுச்சூழல் சார்ந்த மாசுபாடு, அன்றாட உணவுப் பொருட்களில் உள்ள வேதிப்
பொருள்கள், புகையிலை பொருள்கள், மதுபானங்கள், பதப்படுத்தப்பட்ட டின்களில்
அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், மேலும் பழைய பாரம்பரிய பழக்க வழக்கங்களை
கைவிட்டு உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளை மேற்கொண்டு உடல் சார்ந்த
செயல்பாடு இல்லாத பணிகள் போன்றவையே இளம் வயதினர் புற்றுநோயால் அதிகம்
பாதிக்கப்பட காரணம்.
வெளிநாடுகளில் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே
கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில்
புற்றுநோயின் 3-வது மற்றும் 4-வது நிலைகளில்தான் கண்டுபிடித்து சிகிச்சை
மேற்கொள்ளப்படுகிறது. உரிய விழிப்புணர்வு இல்லாததுதான் இதற்குக் காரணம்.
புற்று நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவு,
அதிகமாக பழ வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேதிப்பொருள்கள் கலந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட
டின்களில் அடைத்து வைத்திருக்கும் உணவு வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்க
வேண்டும். மதுபானங்கள், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கைவிட
வேண்டும். உடல் உழைப்பு, நல்ல ஓய்வு, உறக்கம் உள்ளிட்ட பாரம்பரிய வாழ்க்கை
நடைமுறைக்கு மாற வேண்டும். சங்கத் தலைவர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...