Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடர் மதிப்பீட்டு முறை இருக்கும்போது பொதுத் தேர்வு எதற்கு?

தொடர் மதிப்பீட்டு முறை இருக்கும்போது பொதுத் தேர்வு எதற்கு? 
தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் பள்ளித் தேர்வு முறை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வு முறை இன்றியே இனி தொடரலாமா? 
மற்ற திறன்களையும் உள்ளடக்கி மதிப்பெண் அளிக்கிற தொடர் மதிப்பீட்டு முறையை பத்தாம் வகுப்புக்கு மட்டுமின்றி பிளஸ் 2 வகுப்பிலும்கூட பின்பற்றலாமா? 
என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து மாற்றுக் கல்வி முறைக்குக் குரல் கொடுத்தபடி வழக்கமான கல்வி முறையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வரும் ஆசிரியர் அன்பர்கள் சிலருடன் உரையாடினோம்.
படிப்பு வராது என்று முடிவுகட்டக் கூடாது! 
 
 கல்வியைக் கொண்டாட்டமாக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியை சாந்த சீலா. "ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர் மதிப்பீட்டு முறையே (Continuous and comprehensive Evaluation) கடந்த எட்டு ஆண்டுகளாக மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
இதில் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்க முப்பருவ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடம் முழுவதும் ஏகப்பட்ட பாடங்களைப் படித்து அதை முழுவதுமாக வருட கடைசியில் எழுதும் கொடுமை நீங்கியது. காலாண்டில் எழுதும் பாடப்பகுதி அதனுடன் முடிந்துவிடும். அடுத்த பருவத்தில் புதிய பாடங்கள். அதை மட்டுமே அரையாண்டில் எழுதுவார்கள். இதைபோன்றே இறுதி தேர்வும் நடத்தப்பட்டு அடுத்த வகுப்புக்கு உயர்த்திவிடப்படுகிறார்கள். 
 ஆசிரியை சாந்த சீலா 
இந்த முறையில் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே. இதர 40 மதிப்பெண்கள் மாணவரின் படைப்பாற்றல், தனித்திறன் ஆகியவற்றைச் செயல்வழி மூலமாக ஆண்டு முழுவதும் சோதித்து வழங்கப்படுகிறது. ஓவியம் வரைதல், கதை எழுதுதல், நாடகமாக நடித்தல் என பாடப்பகுதியை அவரவர் கற்பனை வளத்துக்கு ஏற்ப கற்றுக் கொண்டு வெளிப்படுத்தும் வழிமுறை இது. 
மாணவர்களின் தனித்திறனையும் புத்திக்கூர்மையையும் ஒருசேர வளர்த்தெடுப்பதற்கான வழிமுறை. ஆனால், இதை எவ்வளவு தூரம் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி அமல்படுத்தப்படுகிறது என்பது அந்தத்தந்த பள்ளியைப் பொறுத்ததே. 
அதை விடவும் அந்தந்த ஆசிரியை பொறுத்ததே எனலாம். எல்லா மாணவர்களுக்கும் எல்லாம் வந்துவிடாது. மொழிப் புலமை, கணிதம் ஆகிய இரண்டை மட்டுமே மையமாக வைத்து குழந்தைகளை அணுகக்கூடாது. சில குழந்தைகளுக்கு விளையாட்டில் ஈடுபாடு இருக்கும். அத்தகைய குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார வைத்துப் படிப்பு சொல்லித் தந்தால் சோர்ந்து போய்விடுவார்கள். 
விளையாட்டின் வழியாகவே அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதைவிடவும் முக்கியம் எந்த குழந்தைக்கும் படிப்பு வராது என்று முடிவுகட்டக் கூடாது. குறிப்பாக, அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலோர் பின் தங்கிய சமூகச் சூழலில் இருந்து வருபவர்கள் என்பதால் பல்வேறு சிக்கல்கள் இருக்கக்கூடும்.
 
அவற்றை உணர்ந்தே ஆசிரியர்கள் அவர்களை அணுக வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு என்னுடைய வகுப்பில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் படித்து வருகிறார். தாய்மொழி தெலுங்கு. முதல் தலைமுறை மாணவர். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை அவருக்கு படிப்பில் நாட்டம் ஏற்படவில்லை. 
எட்டாம் வகுப்பில் சிறப்பாகப் படிக்க ஆரம்பித்துவிட்டார். இத்தகைய குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்காமல் இருந்தாலே போதும். அவர்களே ஒரு கட்டத்தில் படிப்பில் ஊன்றிவிடுவார்கள். எட்டாம் வகுப்பு வரை இப்படி கற்பிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு திடீரென பொதுத் தேர்வு என்று பயமுறுத்தி கல்வியை அந்நியமாக்கிவிடக் கூடாது" என்கிறார் பூவலை அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை சாந்த சீலா.
ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தில் மாற்றம் அவசியம் 
"கடந்தாண்டு வரைக்கும் ஒன்பதாம் வகுப்பு வரை தொடர் மதிப்பீட்டு முறையே பின்பற்றப்பட்டது. ஆனால், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பதால் திடீரென மாணவர்கள் அதற்குப் பழக தடுமாறுவதால் ஒன்பதாம் வகுப்பிலேயே இந்த முறை கைவிடப்பட்டது. 
 சொல்லப்போனால் பத்தாம் வகுப்பிலும் இதே தொடர் மதிப்பீட்டு முறையைத் தாராளமாகப் பின்பற்றலாம். ஆனால், வகுப்புக்கு 50 மாணவர்கள் இருக்கும் சூழலில் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு குழந்தை மீதும் தனி கவனம் செலுத்தி அவர்களுடைய தனித்தன்மையை அடையாளம் காண ஆசியர்களுக்கு போதுமான அவகாசம் தேவை. 
 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்குமானால் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருக்கும் சிறப்பான பாடப் புத்தகங்களின் சாராம்சத்தை மாணவர்களை உள்வாங்கச் செய்ய முடியும். ஆனால் நெகிழ்வான சூழல் இல்லாததால் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டிய நேரமும் சம்பிரதாயமாகி விடுகிறது. 
 மாணவர்கள் சுயமாக சோதித்து, ரசித்து செய்ய வேண்டிய 'புராஜெக்ட்' என்பது எழுதுபொருள் கடையில் விற்கும் ஸ்டிக்கர்களை வாங்கி அப்படியே நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி ஆசிரியரிடம் சமர்ப்பிக்கும் சம்பிரதாயமாக நீர்த்துப்போய் கிடப்பது அவலம்" என்றார், புதுச்சேரியில் உள்ள நோனாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தொடக்கப்பள்ளி ஆசிரியை சுபாஷினி ஜகநாதன். 
  பொதுத் தேர்வு தேவை இல்லை! 
 "எட்டாம் வகுப்பு வரை இருப்பது போலவே ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என பள்ளிப் படிப்பை முழுவதுமாக தொடர் மதிப்பீட்டு முறையிலேயே கொண்டு செல்வது நல்லது. கடந்த ஆண்டு பொது விவாதத்துக்கு வந்த புதிய கல்விக் கொள்கையின்படி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு போலவே கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் திட்டம் உள்ளது. அப்படி இருக்க எதற்காக அரசு பொதுத் தேர்வுக்காக இவ்வளவு செல்ல செய்ய வேண்டும்? 

மாணவர்கள் எதற்காக இவ்வளவு தேர்வு அழுத்தத்தைச் சுமக்க வேண்டும்? அரசுப் பணிகளுக்குத் தேவை பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் மட்டுமே. இதற்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. முப்பருவத் தேர்வின் தொகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யலாம். அப்படியானால் ஒவ்வொரு பாடத்தையும் 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வில் எழுதி 18 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுவிடலாம். இதன் மூலம் தேர்ச்சி பெறுவது என்பது சுலபமாகும் மாணவர்கள் படிப்பைக் கொண்டாட்டமாகக் கருத முடியும். 
  கலகல வகுப்பறை' ரெ.சிவா 
 ஆனால், இதில் விவாதிக்க வேண்டிய வேறு சில சிக்கல்கள் உள்ளன. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100-ல் 10 அக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆனால், ஏனோ ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பில் இந்த மதிப்பெண்கள் இல்லை. இது முதலில் விவாதிக்கப்பட வேண்டி இருக்கிறது. அடுத்து மற்ற வகுப்பு புத்தகங்களைப் போலவே மேல்நிலை வகுப்புக்கான பாடப்புத்தகங்களும் செயல்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகத்தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 
ஆனால், அதிகப்படியான பாடப் பகுதிகள் புகுத்தப்பட்டு இருபதால் அவசர அவசரமாக அள்ளித் தெளித்த மாதிரி அத்தனை அலகுகளையும் கற்பித்து முடிக்க ஆசிரியர்கள் திணறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் பொதுத் தேர்வு என்பதால் அரையாண்டுத் தேர்வின் போதே மொத்த பாடத்திட்டத்தையும் கற்பித்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமே இல்லாமல் போகிறது. 
உயர்கல்வியைப் பொருத்தவரை ஒரு பாடத்தை வகுப்பறையில் கற்பிக்க எத்தனை மணிநேரம் செலவழிக்க வேண்டும் என்கிற வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி பாடத்திட்டத்துக்கு இதுவரை நேர வரையறை நிர்ணயிக்கப்படவில்லை. அவ்வாறு ஒரு சட்டகத்தை வடிவமைத்தால் எவ்வளவு மிதமிஞ்சிய பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு திணிக்கப்பட்டு இருக்கிறது என்பது புலப்படும். வரும் கல்வியாண்டில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் சுருக்கப்படும், 
கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநிலப் பாடத்திட்டத்தையும் கட்டாயம் சிறப்பு கமிட்டி அமைத்துக் குறைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக முடுக்கி விட வேண்டும். அதேநேரத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களை மையப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சுவாரசியமான அம்சங்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒவ்வொரு இயலின் முடிவிலும் கூடுதல் வாசிப்புக்கு நாட வேண்டிய புத்தகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அற்புதமான புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் அறிவியல், மொழி, வரலாற்று ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. 
 ஆனால், இவற்றையெல்லாம் தேடி படிக்க மாணவர்களுக்கு அவகாசம் வேண்டும் இல்லையா! அதற்குப் பாடத்திட்டம் குறைக்கப்பட வேண்டும். இதுபோக அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் பள்ளி நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். 
 இன்றைய நிலையில் மாணவர்கள் மீது கூடுதல் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் சொந்த முயற்சியில் இத்தகைய புத்தகங்களைத் தானாக முன்வந்து வாங்கி படித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை முறைப்படுத்தப் வேண்டும்" என்கிறார் பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான 'கலகல வகுப்பறை' ரெ.சிவா.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive