விடுமுறை
நாட்களுக்கு ஊதியம் பெற சான்றிதழ் அளிப்பதற்கு ரூ.1500 லஞ்சம் கேட்டதாக
வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த
விபரம் வருமாறு;திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பணி மாறுதலில் பள்ளி ஆசிரியை விமலா வேறு ஒரு பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் பணி மாறுதலாகி சென்று விட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியைக்கு தான் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் நான்கு நாட்கள் பணி புரிந்தமைக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது.
மேற்படி பள்ளி ஆசிரியை விமலா அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெரும் பொருட்டு நாலு நாட்கள் ஊதியம் கொடுபடாததற்கு சான்று கேட்டு வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்துள்ளார்.
மேற்படி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதாபேபி, கொடுபடா சான்று வழங்க ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியை விமலா இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் ஆளிநர்கள் மேற்கொண்ட பொறி வைப்பு நடவடிக்கையின்போது வட்டார கல்வி அலுவலகத்தில், அலுவலர் லதா பேபி, பள்ளி ஆசிரியை விமலா என்பவரிடம் இருந்து லஞ்சமாக ரூ.1500-யை கேட்டு பெற்று கையில் வைத்திருந்த போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் பிடிப்பட்டார். இது தொடர்பாக திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம், திருச்சி மாவட்ட கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...