Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முக்கியத்துவம் பெற்று வரும் பொருளாதாரப் படிப்புகள்

ஒரு நாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைத்திருக்க வேண்டும் என்றால், அந்த நாட்டின் பொருளாதார நிலை சீராக இருக்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பொருளாதார வளர்ச்சியையொட்டியே நாட்டின் வளம் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் நமது பொருளாதார வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவையும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் எகனாமிக்ஸ் என்கிற பொருளாதாரப் படிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

பிளஸ் டூ முடித்த மாணவர்களில் கலைக் கல்லூரிகளில் சேரும் பல மாணவர்களின் முதல் சாய்ஸ் பி.காம். படிப்பாக இருந்தாலும்கூட, பொருளாதாரப் படிப்பைச் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக முதுநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. பெரும்பாலான கலைக் கல்லூரிகளில் பி.ஏ. எகனாமிக்ஸ் பாடப்பிரிவு இருக்கிறது.

அக்ரிகல்ச்சுரல் எகனாமிக்ஸ், ஃபைனான்சியல் எகனாமிக்ஸ், லேபர் எகனாமிக்ஸ், இன்டஸ்ட்ரியல் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ், டெவலப்மெண்ட் எகனாமிக்ஸ், எகனாமிக்ஸ் ஆஃப் ஹியூமன் ரிசோர்சஸ் டெவலப்மெண்ட், ஹெல்த் எகனாமிக்ஸ், ரூரல் எகனாமிக்ஸ் அண்ட் டெவலப்மெண்ட், பிஸினஸ் எகனாமிக்ஸ், பேங்கிங் எகனாமிக்ஸ், என்விரான்மெண்டல் எகனாமிக்ஸ்… இப்படிக் காலத்துக்கு ஏற்ற வகையில் பல்வேறு பொருளாதார சிறப்புப் பாடப்பிரிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

பொருளாதாரப் பாடத்தைக் கற்றுத்தர சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன. ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது பேராசிரியர் வி.கே.ராவ். முயற்சியால் 1949ஆம் ஆண்டு தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

நாட்டில் பொருளாதாரப் பாடத்தைக் கற்றுத் தரும் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான இந்தக் கல்வி நிறுவனத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் அந்தக் கல்வி நிறுவனத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

புணேயில் உள்ள கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்வி நிலையத்தில் பிஎஸ்சி எகனாமிக்ஸ் படிக்கலாம். புணே பல்கலைக்கழகத்தில் 1930இல் தொடங்கப்பட்ட இந்த இன்ஸ்டிட்யூட், 1993லிருந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு பல்வேறு பொருளாதாரப் பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் உள்ளன.

தில்லி, ரூர்க்கி ஐ.ஐ.டி.களில் எம்.எஸ்சி. எகனாமிக்ஸ் படிப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டப் படிப்புப் படித்த மாணவர்கள் ஜாம் (JAM – Joint Admission Test for Masters) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். பிலானியில் உள்ள பிட்ஸ் கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி எகனாமிக்ஸ் படிப்பைப் படிக்கலாம்.

1987ஆம் ஆண்டில் இந்தியன் ரிசர்வ் வங்கி மும்பையில் உள்ள இந்திராகாந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெலவப்மெண்ட் ரிசர்ச் கல்வி நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம். இது. 1995லிருந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வருகிறது.

இதேபோல சர்வதேச அளவில் பொருளாதாரம், பொருளாதாரத் துறை சம்பந்தமான படிப்புகளுக்குத் தலைசிறந்த நிறுவனமாகக் கருதப்படுவது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ். இங்குப் படித்தவர்கள் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துவருகிறார்கள்.

தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பட்டப்படிப்பை படிப்பதற்கு நுழைவுத் தேர்வை (CUET-Central University Entrance Test) எழுத வேண்டியது இருக்கும்.

பொருளியல் பாடத்தைக் கற்பிக்கும் நிறுவனங்களில் முக்கியமானது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனம் 1990ஆம் ஆண்டில் பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா முயற்சியால் தொடங்கப்பட்டது. 2021 முதல் இந்தக் கல்வி நிறுவனம் Institution of Special Importance என்கிற சிறப்பு அந்தஸ்தைப் பெற்று, பட்டங்களை வழங்கும் தகுதி பெற்றுள்ளது.

இங்கு ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. எகனாமிக்ஸ் படிப்பைப் படிக்கலாம். முதல் மூன்று ஆண்டுகள் படிப்புடன் முடிக்க விரும்பினால் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் வழங்கப்படும். நான்கு ஆண்டு படித்ததும் பி.ஏ. (Honours with Research) படிக்கலாம். ஐந்து ஆண்டுகள் படித்ததும் எம்.ஏ. எகனாமிக்ஸ் பட்டம் பெறலாம்.

பிளஸ் டூ தேர்வில் முதல் முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை (Standard/Applied/Business) ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் 65 சதவீதமும் ஓபிசி (Non-creamy Layer) மாணவர்கள் 60 சதவீதமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 22 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 35 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த இரண்டு மணி நேர நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 50 கேள்விகளும் ஆங்கிலத்தில் 25 கேள்விகளும் ஆப்டிட்யூட் தேர்வில் 25 கேள்விகளும் (மொத்தம் 100 கேள்விகள்) கேட்கப்படும். மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியானதை கிளிக் செய்ய வேண்டும். ஆன்லைன் தேர்வு என்பதால் மொத்தம் 3 மணி நேரம் கொடுக்கப்படும்.

இங்கு, ஜெனரல் எகனாமிக்ஸ், ஃபைனான்சியல் எகனாமிக்ஸ், அப்ளைடு குவான்டிட்டேட்டிவ் ஃபைனான்ஸ், ஆக்சுவரியல் எகனாமிக்ஸ், என்விரான்மெண்டல் எகனாமிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு எம்.ஏ. படிக்கலாம்.

எம்.எஸ்சி. டேட்டா சயின்ஸ் இரண்டு ஆண்டு படிப்பு உள்ளது. பிக் டேட்டா, ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ், மெஷின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி போன்ற பாடப்பிரிவுகளில் தியரியுடன் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும். அத்துடன் முதல் ஆண்டில் கோடை விடுமுறை காலத்தில் இன்டர்ன்ஷிப் இருக்கும்.

47 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக 16 இடங்கள் உள்ளன. சமூக அறிவியலில் (வணிகவியல் - மேனேஜ்மெண்ட் உள்ளிட்டவை), அறிவியல், பொறியியல், கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் கணிதத்தை அல்லது அதற்கு நிகரான பாடத்தைப் படித்திருக்க வேண்டும். அல்லது இளநிலைப் பட்ட நிலையில் மேத்தமேட்டிக்கல் எகனாமிக்ஸ் படிப்பைப் படித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் இளநிலைப் பட்ட நிலையில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஓபிசி (Non-creamy Layer) மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 45 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ், கணிதம், புள்ளியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் கேட் (GATE) தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத இடங்கள் கேட் தேர்வு எழுதியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

மத்திய அரசுப் பணிகளில் அதிகாரி நிலைகளில் சேர விரும்பும் பொருளாதாரம் படித்த மாணவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் எகனாமிக்ஸ் சர்வீஸ் (Indian Economic Service -IES) தேர்வை எழுத வேண்டும். எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ் பாடப்பிரிவுகளில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

நிதி சேவைகள், வங்கித் துறை, இன்சூரன்ஸ், முதலீட்டுத் துறை போன்ற பல்வேறு துறைகளிலும் பொருளாதாரம் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. உள்நாட்டில் தனியார் நிறுவனங்களில் மட்டுமல்லாமல், பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. எனவே, தைரியமாகப் பொருளாதாரப் படிப்பை எடுத்துப் படிக்கலாம்.

- கட்டுரை - இந்து தமிழ்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive