Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

"வந்தே மாதரம்" பள்ளிகளில் பாடுவதைக் கட்டாயமாக்க முடியுமா? HINDU தலையங்கம்

         தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.
        அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். 2013-ல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதிய வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவு இது.
வந்தே மாதரம் முதலில் எழுதப்பட்டது எந்த மொழியில் என்ற கேள்விக்கு வங்காளம், உருது, மராத்தி, சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு விடைகளில் வங்காள மொழியைத் தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் சம்ஸ்கிருதம்தான் சரியான விடை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியதாகவும், அந்தக் கேள்விக்கு ஒரு மதிப்பெண் அளித்தால், தான் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் ஆகிவிட வாய்ப்புள்ளதாகவும் தனது மனுவில் வீரமணி குறிப்பிட்டிருந்தார்.
தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. ஆனால், இந்த வழக்கில் துளியும் சம்பந்தம் இல்லாமல் மக்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக பாட வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பதுதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் தேசிய கீதம் தொடர்பாக 1986-ல் நடைபெற்ற ஒரு வழக்கைப் பார்ப்போம். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பிஜு இமானுவேல் என்ற 15 வயது மாணவனும், அவனது சகோதரிகளான பினோ மோள், பிந்து இமானுவேலும் பள்ளியில் தேசிய கீதம் பாடப்படுகையில் எழுந்து நிற்பார்கள். ஆனால், பாட மாட்டார்கள். ஜெகோவா விட்னஸ் என்ற கிறித்துவ மதப் பிரிவைச் சேர்ந்த அவர்கள், தங்கள் மத விதிகளின்படி, ஜேகோவாவைத் தவிர வேறு யாரையும் வாழ்த்தி எந்தப் பாடலையும் பாடக் கூடாது. அவர்கள் தேசிய கீதத்தைப் பாடாததன் பின்னணி இதுதான்.
இது ஒரு பத்திரிகையில் செய்தியாக வந்ததையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.சி.கபீர் இதுகுறித்து சட்ட மன்றத்தில் பிரச்சினை எழுப்பினார். இதை விசாரிக்க ஒரு நபர் குழுவை அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கருணாகரன் அமைத்தார். ‘தேசிய கீதம் பாடப்படுகையில், இந்தப் பிள்ளைகள் அமைதியாக எழுந்து நிற்கின்றன, தேசிய கீதத்துக்கு எவ்விதமான அவமரியாதையும் செய்யவில்லை’ என்று அறிக்கை அளித்தது குழு.
ஆனால், தேசிய கீதம் பாடுவோம் என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்றது மாவட்ட நிர்வாகம். மூவரும் மறுத்தனர். இதையடுத்து, பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தேசிய கீதத்தில் கடவுளைப் புகழும் வாக்கியங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்த உயர் நீதிமன்றம், மாணவர்கள் தேசிய கீதம் பாடாதது தவறு என்று தீர்ப்பளித்தது. அவர்களின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்னப்ப ரெட்டி மற்றும் எம்எம்.தத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒருவர் தேசிய கீதம் பாடியே ஆக வேண்டும் கட்டாயப்படுத்தும் எந்தச் சட்டமும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 51-ஏ வின்படி ஒரு குடிமகன், அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. தேசிய கீதம் இசைக்கப்படுகையில் எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர். எனவே, ஒன்று சேர்ந்து பாடாத காரணத்தால், அவமரியாதை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது.
இந்த வழக்கில் மாணவர்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை மற்றும் மதத்தைப் பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் தந்த உரிமை ஆகியவை மீறப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம்" என்று கூறி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. “நமது பாரம்பரியம் நமக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுத் தந்துள்ளது. நமது தத்துவங்கள் சகிப்புத்தன்மையை வலியுறுத்துகின்றன. நமது அரசியலமைப்புச் சட்டம், சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கிறது. நாம் அதை நீர்த்துப்போகச் செய்ய வேண்டாம்" என்றும் குறிப்பிட்டது.
நடவடிக்கை அவசியம் இல்லை
குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதைப் போல, பிரிவு 51 (ஏ)-ல் அடிப்படைக் கடமைகள் உள்ளன என்கிறது அரசியலமைப்புச் சட்டம். அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, இந்தப் பிரிவு கிடையாது. 1976-ல் அமைக்கப்பட்ட ஸ்வரண் சிங் கமிட்டியின் பரிந்துரைகளின்படி இந்த அடிப்படைக் கடமைகள் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டன.
அதேசமயம், அந்தக் கடமைகளைச் செய்யத் தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. தேசியக் கொடி, தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பது இந்தக் கடமைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் ‘தேசியப் பாடல்’ என்ற ஒன்று குறிப்பிடப்படவில்லை என்பது முக்கியமான அம்சம்.
இன்னொரு தீர்ப்பைக் குறிப்பிடலாம். தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் தேசியப் பாடலைப் பரப்புவதற்காக ஒரு கொள்கை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் வழக்கு தொடர்ந்தார்.
‘அரசியல் சாசனப் பிரிவு 51 (ஏ) தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடி குறித்து மட்டுமே குறிப்பிடுகிறது, தேசியப் பாடல் என்பது குறித்து அது குறிப்பிடாத காரணத்தால், தேசியப் பாடல் குறித்து உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது’ என்று அவர் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். மேலும், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்ட மன்றம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் கட்டாயம் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் தள்ளுபடி செய்தது.
அரசியலமைப்புச் சட்டம்தான் அனைத்துச் சட்டங்களுக்குமான மூலம். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 141-ன் படி, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும், இந்தியா முழுமைக்கான சட்டம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்துக்கு இணையான அதிகாரம் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உள்ளது. ஆனால், அதற்கு இணையான அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை. உயர் நீதிமன்றத்துக்கான அதிகாரங்கள் குறித்து பிரிவு-226-ல் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு உயர் நீதிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எந்த உத்தரவை வேண்டுமானாலும், எவருக்கு வேண்டுமானாலும் பிறப்பிக்க முடியும். ஆனால், அதற்கு முன் எவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறோதோ அவர்களைத் தரப்பினராக சேர்த்து அவர்களின் கருத்தையும் கேட்க வேண்டும். சட்ட மன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட பணியை உயர் நீதிமன்றம் செய்வதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழி இல்லை.
யார் கண்காணிப்பது?
தனியார் அலுவலகங்களில் மாதம் ஒரு முறை கட்டாயம் பாட வேண்டும் என்று வழங்கியுள்ள தீர்ப்பு நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று. எப்படி இதை மேற்பார்வை செய்யமுடியும்? யார் மேற்பார்வை செய்வது? யாரிடம் புகார் செய்வது? என்ன தண்டனை?
ஒரு சட்டம் சட்டசபையால் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருகிறது என்பது அரசிதழ் மூலம் அறிவிக்கப்படுகிறது. அதனால் எல்லா மக்களுக்கும் அந்தச் சட்டம் தெரியபடுத்தியதாக அனுமானம் கொள்ள முடிகிறது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பையும் அதைப் போல் எல்லா மக்களுக்கும் தெரியபடுத்தியதாக அனுமானம் கொள்ள முடியுமா? பொதுவாக நீதிமன்றத் தீர்ப்பு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்குத்தானே தெரியும், அவர்களைத்தானே கட்டுப்படுத்தும்!
70 ஆண்டுகளுக்கு முன், அந்நிய நாட்டின் அடிமையாய் இருந்து சுதந்திர தாகத்துடன் போராடிய போதுகூட, தேசியப் பாடலைக் கட்டாயமாகப் பாடவேண்டுமென யாரையும் யாரும் நிர்ப்பந்தித்தாகத் தெரியவில்லை. அரங்குகளிலும் அலுவலகங்களிலும் மக்களைக் கட்டாயப்படுத்தி தேசியப் பாடலைப் பாட வைப்பதன் மூலம் தேச பக்தி வராது. தேசியப் பாடலைப் பாடினால்தான் தேச பக்தி உள்ளது என்று எடுத்துக்கொள்ளவும் முடியாது!
என்.ரமேஷ், வழக்கறிஞர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading