NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகளைக் காப்பாற்ற உயிரிழந்த சுகந்தி டீச்சரின் குடும்பம் எப்படி இருக்கிறது?

மறதி என்பது பெருநோயாக நம்மைப் பீடித்திருந்தாலும் ஆசிரியை சுகந்தியை மறந்துவிட முடியுமா?
> 2009 டிசம்பர் 3...
பனி சூழ்ந்த காலை. சுகமாக உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை, வலுக்கட்டாயமாக எழுப்பினார்கள் தாய்மார்கள். பல் துலக்கி குளிப்பாட்டி, கெஞ்சி உணவூட்டும்போதே, வாசலில் பள்ளி வேன் சத்தம் கேட்டது. வேதாரண்யம் வட்டம், கரியாபட்டினம், 'கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி'க்கு அழைத்துச்செல்லும் வேன் அது. அழுத குழந்தைகளுக்கு மாலையில் சாக்லேட் வாங்கித் தருவதாக உத்தரவாதம் தந்து, முத்தம் தந்து வேனில் ஏற்றிவிட்டார்கள். அவர்களில் பலருக்குத் தெரியாது, தங்கள் குழந்தையின் சிரிப்பை இனி பார்க்க முடியாது என்பது. 
வேனில் 20 குழந்தைகள், பாதுகாப்புக்குச் சுகந்தி டீச்சர், ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை, சுகந்தி. எளிய குடும்பத்தில் பிறந்து, விரும்பி ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தவர். மழை மெல்லிய சாரலாய் தூறிக்கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்தவாறும் பாட்டுப் பாடியவாறும் இருக்கும் குழந்தைகளைச் சுமந்து செல்கிறது வேன்.
பனையடிகுத்தகை சாலை அருகே செல்லும்போது ஓட்டுநரின் மொபைல் சிணுங்குகிறது.. எடுத்துப் பேசியவாறே ஓட்டுகிறார். திடீரென அவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன், அருகிலிருந்த குளத்துக்குள் பாய்ந்தது. குளத்தில் 20 அடிக்கும் மேல் நீர் இருந்ததால், விழுந்த வேகத்தில் வேன் மூழ்கத் தொடங்குகிறது. 
உள்ளிருந்த குழந்தைகளுக்கும் ஆசிரியைச் சுகந்திக்கும் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்து உதவிக் குரல் எழுப்பவும் அவகாசமில்லை. குழந்தைகள் வேனுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து நீரைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். 20 குழந்தைகளுமே எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள்.
சுகந்திஆசிரியை சுகந்தி, வேன் ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். தன் பலம் முழுவதையும் திரட்டி செயலில் இறங்கும் சுகந்தி, ஒவ்வொரு குழந்தையாகப் பிடித்து கரைக்குக் கொண்டு வருகிறார். நீரின் ஆழத்திலிருந்து குழந்தையை மீட்டுவருவது எவ்வளவு சவாலானது. 
ஆனாலும், தன் உயிர் பற்றி துளியும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் குளத்தின் ஆழத்துக்குச் செல்கிறார் சுகந்தி. தன் உயிரின் இறுதி மூச்சுக் காற்று அந்தக் குளத்தின் நீரில் கலக்கும் வரை, குழந்தைகளைக் காப்பாற்றப் போராடினார். இறுதியில், குழந்தைகளை நேசித்து, அன்பு பாராட்டி, கல்வி போதித்த அந்த ஆசிரியை, குளத்தின் நீருக்குத் தன் உயிரை ஒப்படைத்துவிடுகிறார். 
அதற்குள் சத்தம் கேட்டு, அந்தப் பகுதி பொதுமக்கள் கூடிவிட்டார்கள். அவர்களைப் பார்த்த ஓட்டுநர், தப்பித்து ஓடிவிடுகிறார். என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக் குழந்தைகளை மீட்க, இறுதி வரை உதவுகிறார் கிளினர். 20 குழந்தைகளில் 11 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்துபோனார்கள். 
இந்த நிகழ்வு கேட்பவரைக் கண்ணீரில் உறைந்துபோகச் செய்தது. ஊடகங்கள் வழியே கேட்டவர்களும் பார்த்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியை சுகந்தியை மானசீகமாக வாழ்த்தினார்கள். அவரின் இறப்பை, தன் வீட்டில் ஒருவரின் மரணமாக உணர்ந்தார்கள். 
> வேதாரண்யம் வட்டம், நாகக்குடையான் கிராமத்தில் மாரியப்பன், அன்னலெட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் சுகந்தி. அவருக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. எளிமையான குடும்பம். ஆனாலும் படிப்புமீது ஆர்வம்கொண்ட சுகந்தி 10, 12-ம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றார். மேல் படிப்புக்குக் குடும்பச் சூழல் இடம் தராவிட்டாலும், சிரமப்பட்டு ஆசிரியர் பயிற்சியை முடித்தார். 
78 சதவிகிதம் பெற்று, முதல் இடத்தில் தேர்ச்சியடைந்தார். மிகச் சொற்பமான சம்பளம் என்றாலும், தன் லட்சியப் பணியான ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்துகொண்டிருந்தார். மாலை நேரத்தில் தன் வீட்டின் அருகே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷனும் எடுத்துக்கொண்டிருந்தார். 
படிப்பு ஏழ்மையை விரட்டும் என பிள்ளைகளைப் படிக்கவைத்த பெற்றோருக்குச் சுகந்தியின் மரணம் பேரிடியாக விழுந்தது. தூக்கி வளர்த்த பெண்ணை, சடலமாகப் பார்க்க நேரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். வருத்தத்தைப்போலவே வறுமையும் குடும்பத்தைச் சூழ்ந்தது. சுகந்திக்கு அறிஞர் அண்ணா விருதும் 25,000 ரூபாய் பணமும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. சுகந்தி மரணத்தின்போது என்ன நடந்தது, என்னென்ன வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவை என்னவாயிற்று என சுகந்தியின் தம்பி ராஜ்மோகனிடம் பேசினோம். 
“சுகந்தி அக்கா இறந்ததிலிருந்து வீடு வீடாகவே இல்லை. எட்டு வருஷம் ஆயிடுச்சு. ஆனாலும், அந்த வலி இப்பவும் இருக்கு. அப்பா ஊரில் கிடைக்கும் ஏதாச்சும் வேலைகளுக்குப் போவாங்க... அம்மா நிலைமைதான் ரொம்ப கஷ்டம். கல்யாணம், காட்சின்னு போகிற இடங்களில் அக்காவோடு படிச்சவங்க, தங்கள் குழந்தையோடு வந்திருக்கிறதைப் பார்த்துட்டு வந்து அழுவாங்க. 
'நம்ம சுகந்திக்கும் இந்நேரம் குழந்தைகளோடு சந்தோஷமாக இருந்திருப்பாளே'னு சொல்லிட்டே இருப்பாங்க. ரொம்ப சிரமப்பட்டுத்தான் பெரிய அக்கா கல்யாணத்தை முடிச்சோம். அவங்க டெம்பரவரியா ஒரு வேலைக்குப் போயிட்டிருக்காங்க. நான் கோயம்புத்தூரில் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். சுகந்தி அக்கா இறந்தப்போ, கலெக்டர் ஆபீஸிலிருந்து வந்தாங்க...'' என்ற ராஜ்மோகன், பேச்சை நிறுத்தி, கலெக்டர் வந்திருந்தாரா என யோசிக்கிறார். அருகிலிருந்து அம்மாவிடம் கேட்கிறார். வந்ததாக அவர் சொன்னதும் தொடர்கிறார். 
''கவர்மென்ட் தந்த ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். எனக்கு அரசு வேலை வாங்கித் தர்றதா சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, எட்டு வருஷமாக அலையறோம். எதுவும் நடக்கலை. 'டிப்ளமோதான் படிச்சிருக்கே, அரசு வேலை எதுவும் கிடைக்காது'னு சொல்றாங்க. இருந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி பண்ணிட்டிருக்கேன். அந்த வேலை கிடைச்சா குடும்பத்துக்கு உதவியா இருக்கும்" என்றவர், அம்மாவிடம் சுகந்தி பற்றிப் பேசச் சொல்கிறார். ஆனால், ''சுகந்தி...'' என்று பெயரை ஆரம்பித்ததுமே வார்த்தை வராமல் அழத் தொடங்கிவிட்டார் அந்தத் தாய். 
சுகந்தியின் தியாகத்தைப் பற்றி ஆவணமாக்கும் முயற்சியில் 'சுகந்தி டீச்சர்' எனும் சிறுநூலை வெளியிட்டுள்ளார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பாபு எழில்தாசன், "நான் அவங்க வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும் மனசுக்கு கஷ்டமாக இருக்கும். சுகந்தி டீச்சரோட இழப்பு அந்தக் குடும்பத்துக்கு ஈடே செய்ய முடியாதது" என்கிறார். (இப்படங்கள் அந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவை)
தன் உயிரையே கொடுத்து 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தி குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வது ஓர் அரசின் கடமை. நிறைவேற்றுவார்களா?




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive