NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன ?

(கண்டிப்பாக உங்கள்  குழந்தைகளிடம் இந்த  கட்டுரையை பகிருங்கள் )

          இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை.
அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. 
 
            சோற்றுக்கோ சுகத்துக்கோ பஞ்சமில்லை. சோறு சலித்தால் இருக்கவே இருக்கிறது கே.எப்.சி. & பீட்சா ஹட். அம்மா தரும் காபி சலித்தால் இருக்கவே இருக்கிறது காஃபி டே. கேளிக்கைக்கும் பஞ்சமில்லை. தொலைகாட்சி சலித்தால் இருக்கவே இருக்கிறது மல்டிப்ளெக்ஸ்.மொபைல் ஃபோன் வடிவத்தில் ஒரு சினிமா தியேட்டரே நமது கைகளில் தவழ்கிறது.
காமிராவிலிருந்து ஆப்பிள் ஃபோன், ஐபாட் வரை எதற்கும் பஞ்சமில்லை.
மின்சாரமின்றி நம்மால் ஒரு மணிநேரம் கூட இருக்கமுடியவில்லையே… அந்தக் காலத்தில் சாதனையாளர்கள் பள்ளி செல்லும் நாட்களில் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள்?

பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா? ஒரு வாய் சோறு பாரதிக்கும் ராமானுஜத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களை அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே…

ஏ.டி.எம். இயந்திரம் நாம் கார்டை சொருகியவுடன் பணத்தை தருகிறதே… ராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்குகிறது என்பது தெரியுமா?

இராமானுஜன் தன் குறுகிய வாழ்க்கைக் காலத்திலேயே 3900 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர். சிறு வயதிலேயே யாருடைய உதவியும், வழி காட்டுதலும் இன்றி வியப்பூட்டும் வகையில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுபிடித்தவர்.

இராமானுஜன் பிறந்தது முதல். இராமானுஜனின் நிழல் போல், ஒட்டி உறவாடி வாட்டி வதைத்தது வறுமையே ஆகும்.  வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இராமானுஜனின் உண்மை நிலையை உணர்த்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும். இராமானுஜனின் தாயார்
கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்.

ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,

ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.

அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,

1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதி, இராமானுஜன் அவர்கள், இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார். இராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, இராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும்.

நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான்,நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன்.எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார்,

இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.
ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார்.

நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன. -
ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.

இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்,

தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட  Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும். கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.

இதற்கிடையே கணிதமேதை குறித்த வாழ்வாதாரங்களைத்தான் காப்பாற்றவில்லை ……….கணிதத்தையாவது காப்பாற்றினோமா என்றால் நாலும் மூணும் எத்தனை என்பதற்கே கால்குலேட்டரைத் தேடும் ஒரு புதிய தலைமுறை அதிர்ச்சிதரும் நிஜமாய் நம் கண் முன்னே  நடமாடும் கொடுமை. கணிதக் கல்வியகங்கள் எல்லாம் ‘division center”  ஆகிவிட்ட வியாபார யுகத்தில் !!!!




1 Comments:

  1. What a great soul! We teachers and parents should read life history of this great mathematician and make our children read too. In most of the schools Libraries are there for name sake. They should be made functional.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive