Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Wikipedia - Introduction!

விக்கிப்பீடியா (Wikipedia, i/ˌwɪkɪˈpiːdiə/ அல்லது i/ˌwɪkiˈpiːdiə/ WIK-i-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 90,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது. ஏப்ரல் 2017 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் புகழ்பெற்றதாகும். மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளவில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.
விரைவு காரணி: உரலி, மகுட வாசகம் ...
விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-இல் தொடங்கப்பட்டது. சாங்கர் அவர்கள், விக்கிப்பீடியா என்ற சொல்லை, விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.) மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006-இல், டைம் சஞ்சிகை, உலகளவில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் விரைவான வளர்ச்சிக்கு யூடியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு மேலதிகமாக விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது. விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப் படுகிறது. இதற்குக் காரணம், தலைப்புச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.
விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு, பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றுள் கட்டுரைகளின் தரம், தேவையற்ற தொகுப்புக்கள் மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில கட்டுரைகள் உறுதிப்படுத்தப்படாத அல்லது முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தாலும், நேச்சர் இதழ் மூலம் 2005-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இதிலுள்ள அறிவியல் கட்டுரைகள், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை கொண்டன எனக் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டிலும் தலைமையான தவறுகள் ஒரேயளவினதாய் இருந்தன. இதற்குப் பதிலளிக்குமுகமாக, பிரிட்டானிக்கா இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது. எனினும் இதனை மறுத்துரைத்த நேச்சர், தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், பிரிட்டானிக்காவின் தலைமையான மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.
வரலாறு
முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' ஊழியர்களால் நுபீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம், நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை இலவசமாக வெளியிடுவதாகும். நுபீடியாவின் நிறுவுனர் ஜிம்மி வேல்ஸ் ஆவார். லாரி சங்கர் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். நுபீடியாவிட்கு இனைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி வழங்கியது. பின்பு, ‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணையத் தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது.
“அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 12,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 க்கும் மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில், தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.
இயல்புகள்
“ பிரபலமான நகைச்சுவையொன்று கூறுகிறது, "விக்கிப்பீடியாவிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அது பயன்பாட்டு ரீதியில் சிறந்தது. ஆனால், கொள்கை ரீதியில் பயனற்றது." ”
—மீக்கா ரியோக்காசு
தொகுத்தல்
ஏனைய பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாது, விக்கிப்பீடியா வெளித்தொகுப்புக்களை ஏற்கிறது. எனினும், முக்கியமான அல்லது குழப்பம் விளைவிக்கும் ஆபத்துடைய சில கட்டுரைகள் தொகுக்க முடியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுரையை வாசிக்கும் எந்தவொரு வாசகரும் கணக்கொன்று இல்லாமலேயே கட்டுரைகளைத் தொகுக்க முடியும். எனினும், வெவ்வேறு மொழிப்பதிப்புகளில் இக் கொள்கை வித்தியாசமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆங்கிலப் பதிப்பில், பதிவுசெய்த பயனர் மட்டுமே புதிய கட்டுரையொன்றை உருவாக்க முடியும். எந்தவொரு கட்டுரையையும் அதனை உருவாக்கியவரோ, வேறு பயனரோ உரிமை கொண்டாட முடியாது என்பதோடு, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத் தரப்பும் அதனை ஆராய முடியாது. அதற்குப் பதிலாகத் தொகுப்பாளர்கள், தம்மிடையேயான கருத்தொருமிப்பின் அடிப்படையில் கட்டுரைகளின் உள்ளடக்கங்களையும் அமைப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வழமையாக, கட்டுரையொன்றில் மேற்கொள்ளப்படும் தொகுப்பானது உடனடியாக இற்றைப்படுத்தப்படும். எனவே, இக் கட்டுரைகளில் துல்லியமின்மை, கருத்துக் கோடல்கள் அல்லது காப்புரிமைத் தகவல்கள் இடம்பெறலாம். ஒவ்வொரு மொழிப்பதிப்பும் வெவ்வேறு நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், இக்கொள்கைகளிலும் திருத்தங்களைக் கொண்டுவரலாம். உதாரணமாகச், செருமானிய விக்கிப்பீடியாவில் கட்டுரைத் தொகுப்புக்கள் சில மேற்பார்வையிடல்களுக்குப் பின் உறுதிப்படுத்தப்படுகின்றன. பல்வேறு சோதனை ஓட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பின் டிசம்பர் 2012 அன்று "மாற்றங்களுக்கான காத்திருப்பு" முறைமை, ஆங்கில விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைமையின் கீழ்ச், சர்ச்சைக்குரிய அல்லது குழப்பம் விளைவிக்கக்கூடிய ஆபத்துடைய கட்டுரைகளின் மீதான புதிய பயனர்களின் தொகுப்புக்கள், அங்கீகரிக்கப்பட்ட ஒரு விக்கிப்பீடியா பயனரின் மேற்பார்வையின் பின்னரே வெளியிடப்படும்.
விக்கிப்பீடியாவுக்கு உதவும் ‘மென்பொருட்கள்’ பங்களிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படும் "வரலாற்றைக் காட்டவும்" பக்கம், திருத்தங்களைப் (திருத்தங்கள் அவதூறான தகவல்கள், குற்ற அச்சுறுத்தல் அல்லது காப்புரிமை மீறல் போன்றன மீளமைக்கப்படக் கூடியனவாய் இருப்பினும்) பதிவு செய்யும். இப் பக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள், விரும்பத்தகாத தொகுப்புக்களை மீளமைக்கவோ, இழக்கப்பட்ட தகவல்களை மீளப்பெறவோ முடியும். ஒவ்வொரு கட்டுரைக்குமான ‘பேச்சுப்பக்கம்’ பல்வேறு பயனர்களும் தம்முள் ஒருங்கிணைந்து செயற்பட உதவுகிறது. முக்கியமாகத் தொகுப்பாளர்கள், பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்திக் கருத்தொருமிப்புப் பெற முடியும். சிலவேளைகளில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
தொகுப்பாளர்கள் இவ்விணையப் பக்கத்தின் அண்மைய மாற்றங்களையும் காணமுடியும். இது, ‘இறங்கு வரிசை’யில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வழமையான பங்களிப்பாளர்கள், கவனிப்புப் பட்டியல் ஒன்றை உருவாக்கியிருப்பர். இதன்மூலம், தமக்கு விருப்பமான கட்டுரைகளில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிட முடியும். அதிகமான கட்டுரைகளைக் கொண்ட மொழிப் பதிப்புக்களில், தொகுப்பாளர்கள் கவனிப்புப் பட்டியலைப் பேண விரும்புகின்றனர். தொகுப்புக்கள் அதிகரிப்பதன் காரணமாக, ‘அண்மைய மாற்றங்கள்’ பகுதியில், சில தொகுப்புக்கள் இடம்பெற முடியாமல் போவதே இதற்குக் காரணமாகும். புதிய பக்கக் கண்காணிப்பு செயன்முறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் நிகழும் வெளிப்படையான தவறுகள் கண்காணிக்கப்படுகின்றன. அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் கட்டுரைகளுக்கு, அரைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் குறிப்பிட்ட பயனர்கள் மாத்திரமே தொகுக்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பிடத்தக்க, சர்ச்சைக்குரிய கட்டுரைகள் பூட்டப்பட்டு நிர்வாகிகள் மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் காக்கப்படுகின்றன.
தானியங்கிகள் எனப்படும் ‘கணினிச் செய்நிரல்கள்’ மூலமாக எளிமையான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக இவற்றின் மூலம் பொதுவான எழுத்துப்பிழைகளைத் திருத்தல், ஒழுங்கமைவுப் பிரச்சினைகள் அல்லது புவியியல் சார் கட்டுரைகளைத் துவக்கல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில தானியங்கிகள், வேண்டத்தகாத தொகுப்புக்களை மேற்கொள்ளும் பயனர்களை எச்சரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், வேறு இணையத் தளங்களுக்கான இணைப்புக்கள் தடுக்கப்படுவதோடு, சில குறிப்பிட்ட பயனர் கணக்குகள் அல்லது ஐபி முகவரிகளினால் தொகுப்புக்கள் ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியும். விக்கிப்பீடியாவிலுள்ள தானியங்கிகள், இயக்கத்துக்கு முன் நிர்வாகிகளினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
கட்டுரைப் பக்க அமைப்பு
விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகள் அவற்றின் விருத்தி நிலை அடிப்படையிலும், விடய அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். ஒரு புதியகட்டுரை பெரும்பாலும் வரைவிலக்கணம் மற்றும் சில இணைப்புக்கள் மாத்திரமே கொண்ட ஒரு குறுங்கட்டுரையாகவே ஆரம்பிக்கப்படும். அதேபோல் பெரும்பாலான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட பெரிய கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் என வகைப்படுத்தப்படும். சில விக்கிப்பீடியாக்களில், ஒவ்வொரு நாளும் தொகுப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "சிறப்புக் கட்டுரை”யொன்று விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் காட்டப்படும். ‘சியாகோமோ பொதேரி’ எனும் ஆய்வாளரின் கண்டுபிடிப்பின்படி, சில தொகுப்பாளர்கள் ஊக்கத்துடன் குறிப்பிட்ட ஒரு கட்டுரையைத் தொகுப்பதன் மூலமே சிறப்புக்கட்டுரைத் தரம் எட்டப்படுகிறது. 2010-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று சிறப்புக்கட்டுரைகளிடையே அவற்றின் தரங்கள் வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்ததோடு, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பதில் ‘குழுச் செயற்பாடு’ போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கருத்து வெளியிட்டது. 2007-இல், அச்சுவழிப் பதிப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் போது, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பிடும் அளவுத்திட்டத்துக்கு எதிரான புதிய தரக்கணிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.
விக்கிப்பீடியா தொகுப்பாளர்களின் குழுவொன்று, விக்கித்திட்டம் ஒன்றை உருவாக்கிக் குறிப்பிட்ட ஒரு துறையில் தமது பங்களிப்புக்களை வழங்குகின்றது. இத்திட்டத்தின் ‘பேச்சுப் பக்க’த்தின் மூலம், பல்வேறு கட்டுரைகளிலும் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை ஒருங்கிணைப்பர்.
மென்பொருளும் வன்பொருளும்
விக்கிப்பீடியா ஒரு விநாடிக்கு 2000-க்கும் மேலான ‘வேண்டுதல்’களைப் பெறுகிறது. 100-க்கும் மேலான ‘வழங்கி’கள், இதனை நிறைவேற்ற அமைக்கப்பட்டிருக்கின்றன.
விக்கிப்பீடியா கட்டற்ற “விக்கிமீடீயா” மென்பொருளில் இயங்குகிறது. இது “பி.எச்.பி”, “மைசீக்குவல்” ஆகிய ‘இணைய நிரல் மொழிக’ளால் எழுதப்பட்டது. இவற்றோடு “எச்.டி.எம்.எல்”, “சி.எசு.எசு” ஆகியவையும் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
விக்கிப்பீடியா ஒரு தனி ‘வழங்கி’யில் 2004 வரை இயங்கி வந்தது. அதன் பின்னர்ப் “பல்நிலை வழங்கிக் கட்டமைப்பு”க்கு விக்கிப்பீடியா மாற்றப்பட்டது. தற்போது 100-க்கும் மேற்பட்ட வழங்கிகள், உலகின் நான்கு பகுதிகளில் விக்கிப்பீடியாவை வழங்குகின்றன




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive