NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

*பாலினச் சமத்துவக் கல்வி: ஆண் - பெண் தோழமையைக் கற்பிக்கலாமா?* - நன்றி..'தி இந்து', தமிழ் நாளிதழ்

சமூகப் பொறுப்பைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பட்டறை ஒன்றின் தொடக்க விழா அது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேல்நிலை வகுப்பு மாணவர்களைப் பற்றி அப்பள்ளியின் ஆசிரியை முகத்தில் பூரிப்போடும் குரலில் பெருமையோடும் சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது.
“எங்களுடையது ஆணும் பெண்ணும் இணைந்து படிக்கும் பள்ளிதான். ஆனால் கூடவே படிக்கும் மாணவிகள் நேர் எதிரில் நடந்துவந்தால்கூட எங்களுடைய மாணவர்கள் அவர்களைப் பார்க்கவோ, பேசவோ மாட்டார்கள். அத்தனை நல்ல பிள்ளைகள்!”.

இருபாலர் கல்வித் திட்டத்தின் அடிப்படையே ஆணும் பெண்ணும் தோழமையோடு இணைந்து படித்து வளர வேண்டும் என்பதுதான். ஆணையும் பெண்ணையும் தனித் தீவுகளாகப் பிரித்துவைத்துச் சமத்துவத்தை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்? ஆனால் இன்று பெரும்பாலான இருபாலர் பள்ளிகள் மட்டுமல்லாமல் கல்லூரிகளும் இப்படித்தான் மாணவ - மாணவிகளை ‘நல்ல பிள்ளைகள்’ ஆக்கி வெளி உலகத்துக்கு அனுப்புகின்றன. கல்விக்கூடங்களே இப்படி இருக்கும்போது நம்முடைய வீடுகளைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தாய்மை மிக உயர்ந்தது, தாயைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் எனச் சொல்லித்தரும் கலாசாரமும் அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழிமொழியும் நம்முடைய வீடுகளும் பெண்ணை சக மனுஷியாக மதிக்கச் சொல்லித்தரத் தவறிவிடுகின்றன.

*புரியாத புதிர்!*

கூடவே படிக்கும், அருகிலேயே வசிக்கும் பெண் பிள்ளைகளைப் பற்றி எந்தப் புரிதலும் கொடுக்கப்படாத ஆண் குழந்தைகள், இளைஞர்கள் ஆன பிறகு சமூகத்தில் பெண்களை நேருக்கு நேர் சந்திக்கவும் பழகவும் வேண்டிவருகிறது. அப்போது திகைப்பும், தடுமாற்றமும், ஈர்ப்பும் உண்டாகின்றன. ஈர்ப்பை எப்படிக் கண்ணியமாக வெளிப்படுத்துவது என்பதற்கான பயிற்சியோ அனுபவமோ இல்லாததால் இருவருக்கும் சங்கடமான நிலை ஏற்படுகிறது. தங்களது கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதை எதிர்கொள்ளக் கற்றுத்தரப்படாததால் ஈர்ப்பு வெறுப்பாக மாறுகிறது. இது பாலியல் சீண்டல், வன்புணர்வு, அமில வீச்சு, கொலை என்று பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறையாகத் தடம் மாறுகிறது. காதல் விவகாரங்கள் காரணமாக மட்டும் ஆண்டுதோறும் தமிழகத்தில் 150 பெண்கள் கொல்லப்படுவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, ஃபேஸ்புக்கில் ஆபாசமாகப் புகைப்படம் வெளியிடப்பட்ட வினுப்பிரியா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி தேவாலயத்தில் ஆசிரியை பிரான்சினா இப்படிக் காதலின் பெயரால் தமிழகத்தில் சமீபத்தில் கொடூரமாகப் பலியான இளம் பெண்களின் மரணங்கள் எதைக் காட்டுகின்றன?

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் பொருளாதாரம், சாதி, கவுரவம், கலாசாரம் உள்ளிட்ட பல அடுக்குகள் இருந்தாலும் அடிப்படையில் உள்ள சிக்கல் ஆண்-பெண் உறவு நிலையில் புரிதல் இன்மையே. இதில் கவனிக்க வேண்டியது, காதல் மறுக்கப்பட்டதால் கொலை செய்தவர்கள் எல்லாம் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல. சொல்லப்போனால் பலர் அதற்கு முன்பு சிறு வன்முறையில்கூட ஈடுபட்டதில்லை. ஆகவே, ஆண் பெண் உறவு நிலையில் புரிதல் இல்லாததே இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணம்.

வெறும் தண்டனை மூலமாக இந்தப் போக்கை மாற்றி அமைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் இத்தகைய கோரமான சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி, பாலினச் சமத்துவக் கல்விக்கான தேவை உணரப்படுகிறது.ஆனால் நிதர்சனத்தில் நம்முடைய கல்வி நிலையங்களில் இவற்றுக்கான இடம் எங்கே?

*இருபாலருக்கும் நல்லது*

முதலாவதாக, பாலினச் சமத்துவம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணும் பெண்ணும் இச்சமூகத்தில் சமமானவர்கள் என்பதைப் ஏற்றுக்கொள்வதே பாலினச் சமத்துவம். இதைக் கற்றுத்தருவதற்குச் சில பாடங்கள் உள்ளன. ‘ஜெண்டர் ஸ்டடீஸ்’, ‘விமன் ஸ்டடீஸ்’ எனச் சில பெண்கள் கல்லூரிகளில் பாலின விழிப்புணர்வுப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் அவற்றைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்கள் கல்லூரிகளிலோ இந்தப் பாடமே இல்லை. “ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் தாழ்வு இல்லை என்பதைப் பெண்களுக்குக் கற்றுத் தரும்போதே அதை ஆண்களுக்கும் சேர்த்து நிச்சயமாகக் கற்றுத்தர வேண்டும் இல்லையா?” எனக் கேட்கிறார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உளவியல் ஆலோசகர் ஆர்த்தி.

பாலியலுக்கும் (sex) பாலினத்துக்கும் (gender) இடையில் உள்ள வேறுபாட்டைக் கற்றுத்தருவதில் இது தொடங்குகிறது. பாலியல் என்பது உடல் ரீதியானது, இயற்கையானது. ஆனால் பாலினத் தன்மைகள் என்பவை ஆண்மை, பெண்மை எனச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவை. “பெண்ணால் மட்டுமே பிரசவிக்க முடியும், ஆணால் முடியாது என்பது உடல் சார்ந்தது. ஆண்கள் அழக் கூடாது; பெண்கள் மென்மையானவர்கள் என்பவை சமூகத்தால் உருவாக்கப்பட்ட விழுமியங்கள். இவற்றை முதலில் இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும்” என்கிறார் ஆர்த்தி.

அதே நேரத்தில் வழக்கமான பாடங்களைப் போலவே பாலினச் சமத்துவத்தையும் தேர்வுக்கான பாடத் திட்டமாகத் திணித்துவிடக் கூடாது. சொல்லப்போனால் வகுப்பறைக்குள் அவரவர் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு படிக்கும் பாடம் அல்ல இது என்பது பாலினச் சமத்துவப் பயிற்றுனர் இசை பிரகாஷின் கருத்து. “பாலின விழிப்புணர்வை உண்டாக்க முதலில் தங்குதடை இன்றி நினைத்ததை வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

‘மிரரிங்’எனப்படும் ஒருவரைப் போலவே இன்னொருவர் உடல் அசைவுகளால் செய்துகாட்டுவதில் இந்தப் பயிற்சி தொடங்கும். ஆணைப் போலப் பெண்ணும் பெண்ணைப் போல ஆணும் உடல் அசைவுகளால் பிரதிபலிக்கும்போது அங்கு ஆண்மை,பெண்மை என்கிற பிம்பம் தளர்வதற்கான முதல் படியாக உருவாகிறது. அடுத்துத் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆணின் அனுபவத்தைப் பெண்ணும் பெண்ணின் அனுபவத்தை ஆணும் கூடியிருப்பவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோன்ற பயிற்சிகள் ஆண்களைப் பற்றிப் பெண்களும்,பெண்களைப் பற்றி ஆண்களும் புரிந்துகொள்ள உதவுகின்றன” என்கிறார் இசை பிரகாஷ்.

“பாலினச் சமத்துவத்துக்கான பாடப் புத்தகங்கள் மனப்பாடப் பகுதிகளாக இல்லாமல் விவாதப் புள்ளிகளை முன்வைக்க வேண்டும். அதிலிருந்து ஊக்கம் பெற்று மாணவ, மாணவிகள் பாலினம் தொடர்பான பல சிக்கல்களைக் கலந்துரையாட வேண்டும். பாலினப் பாகுபாட்டைத் தகர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள், திரைப்படங்களின் திரையிடலும் கலந்துரையாடலும் வாசக வட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்கிறார் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரும் தத்துவப் பேராசிரியருமான இரா. முரளி.

மொத்தத்தில், என்று நம்முடைய பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ, மாணவிகள் சக தோழர்களாக இணைந்து சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அன்றுதான் பாலினச் சமத்துவச் சமூகத்தை நோக்கி ஒரு படி முன்னேற முடியும். அதற்குக் கல்விக்கூடங்களாலும் கணிசமான பங்காற்ற முடியும் என்பதையே பாலினச் சமத்துவப் பாடங்கள் காட்டுகின்றன.. "சமத்துவ சமுதாய கழகம்" - தலைமை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive