Printfriendly

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

www.Padasalai.Net

சிம்மம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

        தன்மானச் சிங்கங்களே! உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகளெல்லாம் நிறைவேறும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள்.
எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

உங்களுடைய ராசியை சுக்ரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட கால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். மகளின் திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். இடைவிடாமல் உழைத்தும் எதுவும் ஒட்டவில்லையே என வருந்தினீர்களே! இந்த ஆண்டில் பணபலம் கூடும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.

ஜுலை 26-ந் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்னை, அல்சர், இரத்த சோகை வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். முன்கோபத்தை குறையுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் நீர் கட்டி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். யாருமே உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாக நெருக்கடிகள் இருந்ததே, அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களெல்லாம் விலகும். தோற்றப் பொலிவுக் கூடும். சோர்ந்துப் போய் கலையிழந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை மலரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள்.

தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். ஷேர் மூலம் பணம் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் சுப காரியங்களெல்லாம் நடந்தேறும். புது வேலையும் அமையும்.

17.01.2017 முதல் 26.02.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 8-ல் மறைந்து காணப்படுவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சகோதர வகையில் சச்சரவு, இரத்த அழுத்தம், மனஉளைச்சல், வீண் அலைச்சல், காரியத் தடங்கல், வேனல் கட்டி வந்துச் செல்லும். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். அவருடன் மோதல்களும் வந்துப் போகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரக்கூடும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

ஆனால் 02.09.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியங்களை முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். அவர்களிடம் உங்களுடைய பழங்கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். மூச்சுத் திணறல், வயிற்று உப்புசம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை, பசியின்மை வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.

அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். யாரிடம் எப்படிப் பேசுவது, நடந்து கொள்வது என்ற அனுபவ அறிவு கிடைக்கும். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேப் போல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து சீர் செய்வீர்கள்.

14.12.2017 வரை சனி 4-ல் நின்று அர்த்தாஷ்டமத்துச் சனியாக வருவதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அன்பு, பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால் அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது வந்துப் போகும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். சிலர் வீடு, இடம் மாறுவீர்கள்.

பணப்பற்றாக்குறையும் வந்துச் செல்லும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருந்துக் கொண்டேயிருக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உங்களின் அடிப்படை நடத்தை கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண் பழிகளும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். சிறுசிறு அபராதம் செலுத்த வேண்டி வரும்.

15.12.2017 முதல் சனி 5-ம் இடத்தில் நுழைவதால் குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி வரும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீக சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்புக் காட்ட வேண்டாம். அன்பால் அரவணைப்புப் போங்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்துவிடாலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். உங்கள் ரசனைக் கேற்ப கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உணவு, போடிங், லாஜிங், லெதர், மளிகை வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். என்றாலும் எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வார்கள். கவலைபடாதீர்கள், கடமையை செய்யுங்கள். பழைய பிரச்சனைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப்பாருங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வேலைசுமை அதிகரிக்கும். ஜனவரி, ஆகஸ்டு, அக்டோபர் மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். கல்யாணம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடையும்.

மாணவ-மாணவிகளே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வின் போது படித்துக் கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டாதீர்கள். ஆய்வகப் பரிசோதனையின் போது கண்ணிலோ, கையிலோ ஆசிட் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு.

கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள்.
  
இந்தப் புத்தாண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் இறுதியில் உங்களின் கனவுகளை நனவாக்குவதாக அமையும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading