Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் செய்ய வேண்டியது என்ன ??

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் வந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்கான யதார்த்த யோசனைகளையும் திட்டமொன்றையும் வகுத்துத் தருகிறார் சத்குரு. என்னிடம் நதிகள் உங்களுக்கு என்னவாக இருக்கின்றன என்று கேட்டால், அவைதான் இந்திய நாகரிகத்தின் பிறப்பிடம் என்பேன். சிந்து, சத்லஜ், பழம்பெரும் சரஸ்வதி, என்று நதிகள்

ஓடிய இடங்களில் தான் எல்லாம் துவங்கியது. கிருஷ்ணா, காவிரி, மற்றும் கோதாவரி நதிகளைச் சுற்றிலும் தென்னிந்தியாவின் நாகரிகம் வளர்ந்தது. ஆயிரமாயிரம் வருடங்களாக இந்நதிகளும் இந்த பூமியும் நம்மை ஊட்டிவளர்த்துள்ளன. இப்போது இரண்டே தலைமுறைகளில் நாம் இதை ஒரு பாலைவனமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் நீங்கள் வான்வழிப் பயணமாகச் சென்றால், மிகக்குறைவான பசுமையையே காண்பீர்கள் – மற்றெல்லாம் தரிசு நிலங்களே. நம் நதிகள், சில பத்தாண்டுகளிலேயே கணிசமான அளவு வற்றிவிட்டன. சிந்து நதியும் கங்கை நதியும், பூமி முழுவதிலும் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கும் முதல் பத்து நதிகளுக்குள் வருகின்றன. காவிரி நதி, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்ததை விட கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம் குறைந்துவிட்டது என்றே சொல்வேன். சென்றவருடம் உஜ்ஜெயினில் நடந்த கும்பமேளாவின் போது, ஷிப்ரா நதியில் நீரில்லாமல் போனதால், நர்மதா நதியிலிருந்து அங்கு செயற்கையாக தண்ணீர் பம்ப் செய்யப்பட்டது. நதிகளும் ஓடைகளும் உலர்ந்துவிட்டன. கடந்த சில வருடங்களில் நிலத்தடி நீர் அதிர்ச்சிக்குள்ளாகும் அளவு குறைந்துவிட்டது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு வந்துவிட்டது. நம் தேசத்தில் அடிப்படையாக இரண்டு விதமான நதிகள் உள்ளன – பனிக்கட்டியிலிருந்து ஊறும் நதிகள், காடுகளிலிருந்து ஊறும் நதிகள். பனிக்கட்டிகளிலிருந்து தோன்றும் நதிகளின் கதி முழுவதுமாக நம் கைகளில் இல்லை, ஏனென்றால் பூமி வெப்பமடைதல் என்பது உலகளாவிய நிகழ்வு. இந்திய இமயமலைத் தொடரில், வருடம் முழுவதும் பனிமூடிக் கிடந்த மலைச்சிகரங்கள் வெறுமையாக மாறிவிட்டன. கோமுக் எனப்படும் பனிப்பாறை, பாகிரதி மற்றும் கங்கை நதியின் பிறப்பிடமாக விளங்குகிறது. இந்த கோமுக் பனிப்பாறை துவங்குமிடம், கடந்த முப்பது வருடங்களாக பனிப்பாறை கரைந்துவருவதில் ஒரு கிலோமீட்டர் தூரம் மேலே சென்றுவிட்டது. பனிப்பாறைகள் கரைவதும் பனி காணாமல்போவதும் இமயமலையில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நீர்நிலைகள் வற்றுவது என்பது இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருக்கிறது. நம் கற்பனையிலும் கண்டிராத ஒரு பேரிழப்பைத் தவிர்த்திட, தேவையான படிகளை நாம் துவக்கிவைக்க வேண்டும். இதற்கு பலவிதமான அணுகுமுறைகள் உள்ளன. இதுவரை பல மாநிலங்கள் எடுத்துள்ள ஒரு படி, ஆங்காங்கே தடுப்பணைகள் அமைப்பது. இந்த தடுப்பணைகள் நதிகளை பல சிறிய குட்டைகளின் தொகுப்பாக மாற்றிவிடுகின்றன. இன்னொரு படி, நதிகளில் குழிகள் தோண்டி அதில் பாறைகளைப் போட்டு நிரப்புவது. அப்படிச்செய்யும்போது நீர் நிலத்திற்கடியில் உள்ள மண்ணிற்குள் இறங்கி சுற்றியுள்ள கிணறுகள் நிரம்பும் என்பது அவர்கள் கணக்கு – ஆனால் இது நதியின் கல்லறையைத் தோண்டுவதற்கு சமமானது. ஏனென்றால் இப்படிப்பட்ட அணுகுமுறைகள் நதிநீரை எப்படி ஆக்கிரமித்து பயன்படுத்துவது என்றே பார்க்கின்றன, நதிநீரைக் காப்பதற்கு ஏதும் செய்வதில்லை. இயற்கையாக ஓடும் ஒரு நதிக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு செயல்பாடும் சுற்றமும் உண்டு. நிலம் முழுவதும் அடர்ந்த மழைக்காடுகள் படர்ந்திருந்தபோது, மழைநீர் ஓடைகளிலும் நதிகளிலும் சேர்ந்து ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. ஆறுகளுக்கு நீர்வரத்து வேண்டுமென்றால், அதைச்சுற்றியுள்ள மண் ஈரமாக இருக்கவேண்டும். இன்று சுற்றியுள்ள நிலம் முழுவதையும் உழுதிருக்கிறார்கள். போதுமான நிழலும், உலர்ந்து விழும் இலைகளும் சருகுகளும் விலங்குகளின் கழிவுகளும் இல்லாமல், மேற்பரப்பு மண்ணின் சத்துக்கள் அரிக்கப்பட்டு ஈரப்பதம் குறைந்து காலப்போக்கில் மணலாக மாறுகிறது. மரங்கள் மறைந்துவிட்டன, விலங்குகள் வெட்டப்படுவதற்காக இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன, மண்ணிற்கு மீண்டும் ஊட்டச்சத்தளித்திட வழியே இல்லாமல் போய்விட்டது. நாட்டில் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும்போதிலும், நாம் பெருமைப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய சாதனை, நம் விவசாயிகள் பாடுபட்டு 130 கோடி மக்களுக்குத் தேவையான உணவு வழங்குகிறார்கள், அதன்மூலம் ஓரளவாவது மக்கள் பசியாறுகிறார்கள். ஆனால் இது அதிகநாள் நீடிக்காது. மண்ணையும் நீர்நிலைகளையும் நாம் அழித்துவரும் வேகத்தைப் பார்த்தால், இன்னும் பதினைந்து இருபது வருடங்களில், நம் மக்கள் பசியாற உணவும் தாகம் தணிக்க தண்ணீரும் நம்மால் கொடுக்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏதோ அழிவுநாளை ஆருடம் சொல்லும் முயற்சியல்ல. நாம் போகும் போக்கைப் பார்த்தால், நாம் அடையப்போகும் இலக்கை சந்தேகத்திற்கு இடமின்றி சுட்டிக்காட்டும் ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன. நதியை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் நம் கைகளில் இல்லை. எனினும் நதிகளின் நீரோட்டத்தைப் பெருக்கி, அதேசமயம் அதைச் சுற்றியுள்ள பொருளாதார செயல்பாடுகளை இலாபகரமாக நடத்துவதற்கு குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளை நம்மால் எடுக்கமுடியும். சிறந்த பலனளித்து சிறப்பாக வேலை செய்யக்கூடிய ஒரு மிக எளிமையான வழி, நீர்நிலைகளைச் சுற்றியுள்ள மரங்களை அதிகரிப்பது. ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி விவசாய நிலமாக இருக்கிறது, அவற்றை நாம் காடுகளாக மாற்றமுடியாது. அதனால் இதற்கு ஒரே தீர்வு, மண்வளத்தை உறிஞ்சும் பயிர்களிலிருந்து மரப்பயிர்களுக்கு விவசாயமுறையை மாற்றுவது. இது நிகழவேண்டும் என்றால், அதற்குத் தேவையான விழிப்புணர்வை நாம் உருவாக்கி, அதற்குத் தேவையான கொள்கை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம், மக்களுடன் இணைந்து ஒரு இயக்கமாக இதுவரை தமிழகத்தில் மூன்று கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளோம். தனிப்பட்ட முறையில் மரங்கள் நடுவது சூழ்நிலையை மேம்படுத்த உதவத்தான் செய்கின்றன. ஆனால் உண்மையில் ஒரு தீர்வு வேண்டும் என்றால், அரசாங்க அளவில் கொள்கை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். ராஜஸ்தான் அரசு நீர்நிலைகளைச் சுற்றி மரங்கள் நட்டு அற்புதமாக செயல்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது. மத்தியப் பிரதேச அரசாங்கம் சமீபத்தில் நர்மதா நதிக்கரையில் மரப்பயிர்கள் செய்வோருக்கு இரண்டு வருடங்களுக்கு மானியம் ஒதுக்கத் துவங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம், கங்கை நதியை சட்ட உரிமைகள் கொண்ட உயிருள்ள அமைப்பாக அறிவித்து, அதனை சுத்தப்படுத்தும் பணியையும் பராமரிக்கும் பணியையும் மேற்பார்வை செய்ய ஒரு குழுவை நியமனம் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள முதல் படிகள். தேசத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த, தேசத்தின் நதிகள் மற்றும் உபநதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் நாடுதழுவிய ஒரு கொள்கை தேவை. இந்தப் பிரச்சனையின் வேராக இருக்கும் காரணம் என்னவென்றால், 1947 முதல் இன்று வரை நம் ஜனத்தொகை நான்கு மடங்காக அதிகரித்துவிட்டது, 33 கோடியாக இருந்த ஜனத்தொகை எழுபதே ஆண்டுகளில் 130 கோடி ஆகிவிட்டது. கேள்வி என்னவென்றால், இதற்கு நாம் ஏதாவது செய்யப்போகிறோமா? இன்னொரு காரணி, உணவு, நீர் போன்றவற்றின் நுகர்வு, இந்த நுகர்வை நம்மால் கட்டாயம் குறைத்துக்கொள்ள முடியாது. நாம் சற்று புத்திசாலித்தனமாகப் பார்த்தால், ஜனத்தொகையை கட்டுப்படுத்த முடியும், ஆனால் மக்களின் நுகர்வை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மிக எளிமையான தீர்வு, நதிகளைச் சுற்றி மரங்களின் போர்வையை உருவாக்குவதுதான். நான் பரிந்துரைப்பது பிரதான நதிகளின் இருபுறமும் ஒரு கிலோமீட்டருக்கு மரங்கள் இருக்கவேண்டும், உபநதிகளின் இருபுறமும் அரை கிலோமீட்டருக்கு மரங்கள் இருக்கவேண்டும். நாம் இப்படி ஒரு தேசிய கொள்கையைக் கொண்டுவர வேண்டும், நீர்நிலைகள் சுற்றி அரசு நிலங்கள் இருக்கும்பட்சத்தில் அந்நிலங்கள் காடுகளாக மாற்றப்பட வேண்டும்; தனியார் நிலங்கள் இருக்கும்பட்சத்தில் மரப்பயிர்கள் செய்யவேண்டும். வேளாண்காடுவளர்ப்பு மற்றும் தோட்டக்கலைத் துறையில், நாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவு போதுமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமானது என்னவென்றால், மண் வளமாகவும் ஈரமாகவும் இருக்கத் தேவையான நிழல், மண்ணின் இயற்கையான உயிர்ம செயல்பாடுகள், மற்றும் இயற்கைக் கழிவுகள் வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்தால் தான் அதனால் ஓடைகளுக்கும் நதிகளுக்கும் நீரூட்ட முடியும். நதிக்கரைகளில் வாழ்வோருக்கும் இலாபகரமாக இருக்கும்விதத்தில் நாம் ஒரு விரிவான திட்டத்துடன் வரவேண்டும். அந்த ஏழை விவசாயி தன் பிழைப்பிற்கே போராடிக்கொண்டு இருக்கும்போது அவன் பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்குத் தீர்வாக சிலர் பரிந்துரைக்கும் நதிநீர் இணைப்புத் திட்டம், மிதவெப்பமான பகுதிகளில் வேண்டுமானால் வேலைசெய்யலாம். உயர்ந்த வெப்பமும் பருவத்தில் மட்டுமே மழைபெய்யும் இந்த வெப்பமண்டலத்தில் அது வேலைசெய்யாது. அது சொல்லமுடியாத அளவு விலையுயர்ந்ததாகவும், ஆறுகளுக்கும் அதைச் சுற்றி நடக்கும் இயற்கையான உயிர்ம செயல்பாடுகளுக்கு அழிவு விளைவிப்பதாகவும் இருக்கும். இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு நாம் முறையிட வேண்டும். இத்திட்டத்திற்குள் ஏற்கனவே கொஞ்சம் பணம் முதலீடு செய்துவிட்டதால் நாம் அதைத் தொடரவேண்டும் என்று கிடையாது. நம் நதிகளை எப்படியாவது முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து, அவற்றை எப்படி உயிர்ப்பிப்பது என்ற சிந்தனைக்கு நாம் அவசரமாக மாறவேண்டும். ஆறுகளைக் காப்பாற்ற நாம் அவசரமாக செயல்படத் தேவையாக இருக்கிறது என்ற விழிப்புணர்வை நம் நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் கொண்டுவர வேண்டும். இந்த நோக்கத்தில் பதினாறு மாநிலங்கள் வழியாக ஒரு அணிவகுப்பு பேரணி நடத்தவுள்ளோம். தோராயமாக இந்தப் பேரணியின் பாதை கன்னியாகுமரியில் துவங்கி, தமிழ்நாட்டிலிருந்து உத்தரகண்டத்திற்கு சென்று தில்லியில் முடியும். பாதையிலுள்ள பதினாறு மாநிலங்களில், ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்தை அடையும்போதும், நம் நதிகளைக் காப்பதற்குத் தீவிரமான விழிப்புணர்வு உருவாக்கும் விதமான முக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவோம். இதுவரை ஒவ்வொரு மாநிலமும் தனியொரு தீவு போலவே இயங்கிவந்துள்ளது. இந்த விஷயத்தில் எல்லா மாநிலங்களும் ஒன்றுகூடி ஒரு பொதுவான கொள்கையை முடிவுசெய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் சம்பந்தப்பட்ட தகராறுகளுக்கு தீர்வுகாண ஒரே தீர்ப்பாயத்தைக் கொண்டுவர மத்திய அரசு ஒரு மசோதா நிறைவேற்றியுள்ளது இதற்கு உதவியாக இருக்கமுடியும். ஒரு கொள்கை உருவாக்கப்பட்டுவிட்டால், அதனை முழுவதுமாக அமல்படுத்த சற்று காலமெடுக்கும். ஒரு மரத்தை வெட்டுவது ஒரே நாளில் நடக்கிறது. ஆனால் அதை வளர்க்க பல வருடங்கள் எடுக்கிறது. இதற்கான சூத்திரம் எளிமையானது. நதிகளுக்கு இருபுறமும் மரங்கள் இருக்கவேண்டும். மரங்கள் வளர்ந்தால், அது தண்ணீரைப் பிடித்துவைத்துக் கொள்ளும், வற்றாத நதிநீருக்கு அம்மரங்கள் ஆதாரமாக இருக்கும். இந்த விழிப்புணர்வை நாட்டிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொண்டுசென்று, ஒரு பொதுவான கொள்கை உருவாக்கி, அதனை அமல்படுத்த ஆரம்பித்தால், நம் தேசத்தின் எதிர்காலத்திற்கும் வரும் தலைமுறைகளின் நல்வாழ்விற்கும் இது மிகப்பெரியதொரு வெற்றிப்படியாக அமையும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive