தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே அறிவித்தபடி, விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மே 20) நிறைவு பெறுகிறது.
இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.50-ம், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.2-ம்செலுத்தினால் போதும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044–24343106/24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...