Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

என்னதான் நடக்கிறது பள்ளிக்கல்வித்துறையில்? கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார், ஐபெட்டோ அண்ணாமலை.

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

    என்னதான் நடக்கிறது பள்ளிக்கல்வித்துறையில்? அமைச்சருக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? ”ஊன்றிப் படியுங்கள்! உண்மை வெளிச்சத்திற்கு வரும்!” என்ற தலைப்பில் பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து அரங்கேறிவரும், மாணவர்களின் நலன் மற்றும் ஆசிரியர்களின் உரிமை பறிக்கும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு தமது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார், ஐபெட்டோ அண்ணாமலை.

“சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்ப அலையை விட கல்வித்துறையில் அன்றாடம் வெளி வரும் அபாய அறிவிப்புகளினால் ஆசிரியர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்களே! கல்வித்துறையே உணர வேண்டாமா?” என காட்டமான கேள்விகள் பலவற்றை முன்வைத்திருக்கிறார், அவர்.

அவரது அறிக்கையில், “வெப்ப அலை தாக்குதலை விட பணி நிரவல் அரசாணை 243 நாள்:-21.12.2023, பதவி உயர்வு அமல்படுத்தும் அறிவிப்புகளை ஆசிரியர்கள் மத்தியில் பரவவிட்டு ஏழை மாணவர்களின் கல்வி நலனை பாதிக்க வைக்க முன் வருவது ஏன்?

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  டேராடூனில்  கனவாசிரியர்கள் முன்னிலையில்  ஜூன் 2024 முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவை தவிர வேறு பதிவுகளை எமிஸ் இணையதளத்தில் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. என்றும், இதற்காக தனியாக 14,000 பேரை நியமிக்க இருக்கிறோம்.  என்பதை  கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்கள்.  எங்கு சென்றாலும் நம் நினைவாக இருக்கிறார். என்பதை இந்த அறிவிப்பு எடுத்துச் சொல்கிறது. வரவேற்றுப் பாராட்டுகிறோம்!

ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் என்ன நடைபெற்று வருகிறது? என்பதனை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தீர்வு காண முன்வர வேண்டாமா?

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சேர்க்கைப் பேரணி, ஆடல், பாடல் மேளதாளங்களுடன் மாணவர்களை பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். இதுவரை மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளதாக அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. இது பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாக செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்கள்.

மே மாதம் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வெப்பஅலை  வீச்சு நாளுக்கு நாள் அதிகமாகி தாக்கி வருகிறது. இந்த நிலைமையில் தொடக்க கல்வித்துறை வாயிலாக 2236  இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.  என்று இயக்குனர் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை. முந்தைய அரசும் சரி… தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசும் செய்யவுமில்லை, செய்யமுன்வரவுமில்லை.

பின்தங்கிய  எட்டு மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகவே இருந்து வருகிறது.  அந்தப் பகுதி மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவெல்லாம் அரசுக்கு தெரியாதா?

முறைப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்திருந்தால் 12000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  அரசு கணக்குப்படி  5650 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால்   1500 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள்  நிரப்பப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு  அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நாம் கடுமையாக எதிர்த்து வருகிறோம்!.. மாநிலத்தில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி வருகின்ற வேளையில் 2236 ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படுவது என்பது ஏழை, எளிய மாணவர்கள்  தரமான கல்வி பெறுவதற்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.  10 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் அறவே செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் 2236 ஆசிரியர் உபரிப்பணியிடம் இருப்பதாக அரசு கூறுவது எந்த வகையில் என்று தெரியவில்லை?

பணி நியமனம் செய்யப்படவில்லை ! பதவி உயர்வு வழங்கப்படவில்லை! மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது! இந்த நேரத்தில்  பணிநிரவல் அறிவிப்பு அவசியம் தானா?

இடது பக்கத்தில்  இதயம் இருக்கிறது. திராவிட மாடல் அரசு  அந்த இதயத்தினை தொட்டு பார்க்க வேண்டாமா? அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருவதை இதயம் தொட்டு பாராட்ட முன்வராமல் எவராலும் இருக்க முடியாது!.. ஆனால் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் தொடர்ந்து அரசுக்கு எதிரான வெறுப்புணர்வில் ஆசிரியர்கள் உச்சம் தொட்டு செல்வதற்கான வாய்ப்புகளைத் தான் உருவாக்கி வருகிறார்கள்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிடும். இந்திய பெருநாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். என்ற நம்பிக்கை நமக்குள் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடைபெறப்போகும் சட்டமன்ற பொது தேர்தலுக்குக் கூட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியின் மீது தவறியும் கூட வாக்களிக்க முன்வரக்கூடாது என்று திட்டமிட்டு  இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்கள் சிலர் செய்து வருகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் எங்களால் நிரூபிக்க முடியும்.

60 ஆண்டு காலமாக ஒன்றிய அளவில் இருந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலினை மாநில அளவில் கொண்டு சென்று அரசாணை 243 ஐ வெளியிட்டுள்ளார்கள். சுமார் பத்தாயிரம் பேர் நன்மை அடையக்கூடிய ஒரு அரசாமையினை  ஒட்டுமொத்த பெண்ணாசிரியர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகின்ற நிலமையினை உருவாக்கியுள்ளார்கள்.

ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டங்களின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அரசாணை 243 அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனைத்து முன்னுரிமை பட்டியலினையும் தொடக்கக் கல்வி இயக்குனர் வழியாக வெளியிட செய்துள்ளார்கள்!

பதவி உயர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் முடிவு தெரியாத போதே இடைநிலை தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலினை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று போர்முனையில் நின்று சொல்வதைப் போல பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆயத்தப்படுத்தி வருகிறார்.

தனியார் மயம் ஆகக்கூடாது என்று நாம் இந்தியா முழுவதும் போராடி வருகிறோம். முற்றிலும்  அடிப்படை வசதிகள்கூட இல்லாத  முன்மைக் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அரசுப்பள்ளி கட்டிடங்களில் மாணவர்களுக்கு இடையூறாக இயங்கி வருமேயானால் அந்த அலுவலகங்களுக்கு மட்டும் தனியார் கட்டிடங்களில் செல்வதற்கு வாய்ப்பளிக்கலாம்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பொறுப்பேற்றுதற்குப் பிறகு அரசுப் பள்ளி கட்டிடங்களில் இயங்கி வருகின்ற முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உடனடியாக தனியார் கட்டிடங்களுக்கு மாற்றப்பட  வேண்டும் என்றும், அதற்கு ஒரு காலக்கெடுவினையும் கூறி ஆணையிடுகிறார்.

நிதியைப் பற்றி கவலை இல்லை.  அத்தனை கட்டிடங்களுக்கும் நான் பெற்றுத் தருகிறேன் என்று சொல்கிறார்.  நிதியே இல்லை என்று தான் எந்த கோரிக்கைகளையும் செய்ய முன்வராத அரசில்,  அடிப்படை வசதியுடன் பள்ளி கட்டிடங்களில் இயங்கி வருகின்ற கட்டிடங்களையும் தனியார் கட்டிடத்திற்கு மாற்றி அதற்குரிய நிதியை நான் பெற்றுத் தருகிறேன் என்று  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சொல்கிறார் என்றால்,  நிதித்துறையை கூட கலந்தாலோசிக்காமல் இப்படி வெளியிடுவது சரியானதாக இருக்க முடியுமா? இவர் மாற்றத்திற்கு பிறகு யாரிடம் போய் நாங்கள் நிதியினை பெற்று தனியார் கட்டிடங்களுக்கு தருவது என்று பல முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்கிறார்கள்.  இதையெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாமா?

பள்ளிக்கல்வித்துறையில் தணிக்கை துறையினை அமலாக்கத் துறையைப் போல ஏவி வருகிறார். பள்ளிகள் வாரியாக சென்று 20 ஆண்டுகளுக்கு முன்பு முன்அனுமதி வாங்காமல் உயர்கல்வி படித்ததற்காக பெற்ற ஊக்க ஊதிய உயர்வுக்கு தணிக்கைத் தடை செய்து ஓய்வூதியக் கோப்புகள் அனுப்ப முடியாமல் திணறடித்து வருகிறார்கள்.

நிதித்துறை ஊதியக்குழு  அரசாணை 23, நாள்:-05.05.2014, மற்றும் தெளிவுரையின்படியும்,  தொடக்கப்  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வுநிலை தர ஊதியம்  ரூ 5400/- நிர்ணயிக்கப்பட்டு காலம் காலமாக பெற்று வருவதற்கு தணிக்கைத் தடை செய்து ஓய்வூதிய கோப்புகள் அனுப்பப்படாமல் அவர்கள் இதயத்தினை, மனதினை சேதாரப் படுத்தி வருகிறார்கள்.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம்  கட்டுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். என்று ஒரு வரியில் போட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்கள். தெளிவுரை கேட்டால் விளக்கம் ஏதும் இல்லாமல் அப்படியே  பள்ளிக் கல்வித்துறை செயலாளரால் தணிக்கைத் தடையில் குறிப்பிட்ட அதே வார்த்தையே பதிவாகி வருகிறது.

ஹைடெக் லேப் வழியாக  ஒரே இடத்திலிருந்து அத்தனை ஆசிரியர்களையும் கண்காணிக்க முடியும் என்று இணையவழி கூட்டங்களில் பேசி வருகிறார்.

வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமை உருவாகாத வரை, அரசுப் பள்ளிகளில் என்ன தான் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டியும், தவிர்த்தும் வருகிறார்கள். என்பதை அரசு உணர வேண்டும்.

குஜராத்தில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை உள்ள பள்ளியில் ஒரே ஆசிரியர் ஒரே வகுப்பறையில் அத்தனை வகுப்பு மாணவர்களையும் சேர்த்து பாடம்  நடத்தி வருகிறார். என்று அந்த சட்டப்பேரவை கூட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர், ஓராசிரியர் பள்ளிகள்தான் அதிகம் இயங்கி வருகிறது. என்பதை உணர வேண்டும். எழுத்தறிவு இல்லாதவர்களை  புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 20 பேரை மேமாதம் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று வயது வந்தோர் மற்றும் முறை சாரா கல்வி இயக்ககத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. வரும் மூன்றாம் தேதி பள்ளி மேலாண்மைக் கூட்டம் வேறு நடைபெற இருக்கிறது.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  சென்னை திரும்பியவுடன் முதலில் பணிநிரவல் அறிவிப்பினை தடுத்து நிறுத்துங்கள்! அரசாணை 243 ஐ அமல்படுத்துவதை நிறுத்தி வையுங்கள்! டேராடூனில் அறிவித்த எமிஸ் இணையதள அறிவிப்பினை ஜூன்முதல் அமல்படுத்திட விரைவுபடுத்துங்கள்!.. இந்த பணிகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்வு கண்டால் தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், கல்வி நலனும் பெருமைக்குரியதாக அமையும் என்று பெற்றுள்ள அனுபவங்களின் வழியாக தாங்கள் தீர்வு காண வலியுறுத்துகிறோம்!

பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இனமான பேராசிரியர் ஆகியோர் ஆசிரியர்களை கொண்டு தான் கற்பித்தல் பணியினை மாணவர்களுக்கு திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கையினை நிரந்தரமாக கொண்டிருந்தார்கள். பணிநிரவல் வருகிற போதெல்லாம் மாணவர்கள் நலன் கருதி பாதுகாத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் ஆசிரியர்களை ஆர்வப்படுத்தி கற்பித்தல் பணியில் ஈடுபட செய்யுங்கள்!.. அரசின் திட்டங்கள் அனைத்தையும் பெருமைக்குரிய திட்டமாக கொண்டு வந்து நிறுத்துவார்கள்! என்ற நம்பிக்கையை உங்கள் முன் கொண்டு வருகிறோம்! தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உணர்வுடன், ஐபெட்டோ வா.அண்ணாமலை.” என்பதாக தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive