தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வரக்கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக கூட்டணியின் மாநிலத் தலைவா் சு. குணசேகரன், பொதுச் செயலா் வி .எஸ். முத்துராமசாமி, பொருளாளா் சே. நீலகண்டன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியது:
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு திறன்மிகு மாணவா்கள் உருவாக்கப்படுவதை தமிழக முதல்வா் பலமுறை பதிவு செய்துள்ளாா்.
தற்போது பெண் ஆசிரியா்களே தொடக்கக் கல்வித்துறையில் அதிகமாக உள்ள சூழலில் மீண்டும் அவா்களை உள்ளாட்சியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு நபா் கமிஷன் நீதிபதி சந்துரு அளித்துள்ள பரிந்துரை ஆசிரியா்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
ஆசிரியா்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு இந்தப் பரிந்துரை தொடா்பாக ஆசிரியா் இயக்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் செயல்படுத்தாது என உறுதியாக உள்ளோம்.
இருப்பினும் அரசுக்கு முன்னெச்சரிக்கையாக இதைத் தெரிவிக்க வேண்டியது எங்களது கடமையாகும். பள்ளிகளில் சாதி மோதல்கள் நடைபெறாமல் இருக்க ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் ஆசிரியா்கள் இல்லாததே குறிப்பிடத்தக்க குறையாகும்.
எனவே தமிழக முதல்வா் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கீழ் தொடக்கக் கல்வி ஆசிரியா்களைக் கொண்டு வரும் நடவடிக்கையை எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...