இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக (உள்ளுறை மருத்துவர் பயிற்சி) ஓராண்டு பணியாற்றிவிட்டு, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தால் தான்மருத்துவராக பணியாற்ற முடியும்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட விளக்கத்தில், “மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் போது இணையவழி வகுப்புகளில் பங்கேற்றிருந்தால் அதற்கு ஈடாக செயல்முறை வகுப்புகளை நேரடியாக மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழங்களில் அதற்கான சான்றுகளை பெற்று சமர்ப்பித்தால் இந்தியாவில் தகுதித் தேர்வில் பங்கேற்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய தலைவர் மருத்துவர் அருணா வானிக்கர் வெளியிட்ட அறிவிப்பில், “வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் பலர் இணையவழி வகுப்புகளை ஈடு செய்யும் சான்றிதழ்களை தங்களது பல்கலைக்கழகங்களில் பெற்று உள்நோக்கத்துடன் சமர்ப்பித்து வருவது எங்களுடைய கவனத்துக்கு வந்தது. மருத்துவத் துறையானது விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றக்கூடிய ஒன்று ஆகும். இந்திய குடிமக்களின் உயிர்களை முறையாக பயிற்சி பெறாத மருத்துவர்களிடம் பணயம் வைக்க முடியாது.
எனவே, இணையவழி வகுப்புகளுக்கு ஈடாக சான்றுகளை அளிப்பதை இனி வரும் காலங்களில் தேசிய மருத்துவ ஆணையம் ஏற்றுக் கொள்ளாது. இணையவழி வகுப்பில் பங்கேற்றவர்கள், எப்எம்ஜிஇ தேர்வில் பெற்று, குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கட்டாயம் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...