நம் நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் 23.33 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியாகின.
இத்தேர்வில் வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது ஆகிய விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணையில், மறுதேர்வு நடத்த முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. விடைக்குறிப்பில் மாற்றம் செய்து, திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை என்டிஏ கடந்த ஜூலை 26-ம் தேதி வெளியிட்டது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவுகளை மத்திய அரசின் ‘உமங்’ (UMANG) மற்றும் ‘டிஜிலாக்கர்’ (DigiLocker) ஆகிய வலைதளங்களில் என்டிஏ தற்போது பதிவேற்றம் செய்துள்ளது. மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், ஓஎம்ஆர் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு ஆவணங்கள் எளி தாகவும், விரைவாகவும் கிடைக்கும். கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...