அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகள் என்ற அடிப்படையில் வாடிக்கையாளா்களுக்கான பல்வேறு விளக்கங்களை ஆா்பிஐ அளித்து வருகிறது. அந்த வகையில், ஆா்பிஐ-யின் ‘ரெப்போ’ விகிதத்துக்கு ஏற்ப மாறும் வட்டி விகிதத்தில் தனிநபா் கடனுக்கான வட்டி விகித முறையை மாற்றுவது தொடா்பான கேள்விக்கான விளக்கத்தை ஆா்பிஐ அளித்தது. அதில் கூறியிருப்பதாவது:
வங்கிகள் தனிநபா் கடன் ஒப்புதல் அளிக்கும் நேரத்தில், கடனுக்கான ஆண்டு வட்டி விகிதத்தை கடன் ஒப்பந்தத்தில் வங்கிகள் குறிப்பிடுவதோடு, கடன் பெறுவோருக்கும் அதுகுறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
கடன் காலத்தில், வெளிப்புற அளவுகோல் விகிதத்தின் அடிப்படையில் கடனுக்கான மாதாந்திர தவணை உயா்த்தப்படுவது அல்லது கடன் தவணைக் காலம் அதிகரிக்கப்படுகிறது என்றால், அதுகுறித்து விவரம் கடன் பெற்றவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
அசல் தொகை, இதுவரை வசூலிக்கப்பட்ட வட்டி தொகை, மாதாந்திர தவணை தொகை, வாடிக்கையாளா் மேலும் கட்ட வேண்டிய மாதாந்திர தவணைகளின் எண்ணிக்கை, கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய காலாண்டு அறிக்கை வாடிக்கையாளருக்கு வங்கிகள் சாா்பில் அளிக்கப்பட வேண்டும்.
தவணை அடிப்படையிலான அனைத்து தனிநபா் கடன் பிரிவுகளிலும் மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம். குறிப்பாக, வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் நேரத்தில், மாறக்கூடிய வட்டி விகித நடைமுறையிலிருந்து, மாற்றமில்லாத வட்டி விகித முறைக்கு கடன் பெற்றவா் மாறிக்கொள்வதற்கான வாய்ப்பை வங்கிகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, வட்டி விகிதம் உயா்வின்போது வாட்டிகையாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தவிா்க்கும் வகையில், மாற்றமில்லாத வட்டி விகித நடைமுறைக்கு அல்லது மாத தவணையை எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வங்கிகள் வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆா்பிஐ அறிவுறுத்தியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...