தமிழகத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக்கல்வித் துறை அளித்த விளக்கம்: நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டம், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-ன்கீழ் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பங்களிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் மீதே இத்திட்டத்தின் முழு கவனமும் பதிந்துள்ளது. முக்கியமாக எந்த ஒரு அரசு அலுவலரோ, ஆசிரியரோ எந்த நிதியையும் பெற நியமிக்கப்படவில்லை. இந்த தளத்தில் பெறப்படும் பங்களிப்புகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகும்.
இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 885 நிறுவனங்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் சுமார் ரூ.860 கோடியை வழங்கியுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது இதன் நம்பகத்தன்மை மீதான சான்றாகும். அதேபோல், பள்ளிக்கல்வித் துறைக்கான அரசு நிதி ஒதுக்கீடு கடந்த 4 ஆண்டுகளில் 43.5% உயர்ந்துள்ளது. 2025–26-ல் ரூ.46,767 கோடியாக உள்ளது.
இத்திட்டம் அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு மாற்று அல்ல. மாறாக சமூகங்களையும் நிறுவனங்களையும் முன்னாள் மாணவர்களையும் பள்ளியுடன் இணைக்கும் பாலமாகும். எனவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒதுக்கி,உறுதியான தகவல்களைமட்டுமே பொதுமக்கள் நம்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...