NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!!

        கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ‘இஸ்ரோ’ ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாறு படைத்தது. 
         பி.எஸ்.எல்.வி. சி - 37 ரக ராக்கெட் 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தபோது, இந்தியாவின் பாய்ச்சலைப் பார்த்து உலகமே வியந்தது. உலகிலேயே ஒரே ராக்கெட்டின் மூலம் அதிக செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதன்முறை. இந்த 104 செயற்கைக்கோள்களில் அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும். நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி
அடைந்த நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி - 37 சுமந்து சென்றது.

*நன்றி: ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா‛*

இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய வெற்றி. இந்த வெற்றிக்காக இந்தியா சந்தித்த அவமானங்களும் அதிகம். ஒவ்வொருமுறை இந்தியா விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவும் போதும் அண்டை நாடான பாகிஸ்தான் எரிச்சலடையும். பாகிஸ்தான் பத்திரிகைகள் இந்தியாவை ஏளனம் செய்து கார்ட்டூன்கள் வெளியிட்டு மகிழும். பாகிஸ்தான் மட்டுமல்ல, ராக்கெட் தொழில் நுட்பத்தின் முன்னோடியான அமெரிக்காவே, இந்தியாவைப் பார்த்து கைகொட்டி சிரித்திருக்கிறது. கடந்த 2014-ல் இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கல்யான்’ விண்கலனை அனுப்பியது. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டியது. அமெரிக்காவின் செவ்வாய் கிரக 'மேவன் மிஷன் ' திட்டத்தின் செலவு 671 மில்லியன் டாலர்கள் என்றால், இந்தியாவின் 'மங்கல்யான்' திட்டத்துக்கு வெறும் 70 மில்லியன் டாலர்கள்தான் செலவு.

பொதுவாகவே இந்தியா என்றால் உலக நாடுகளுக்கு மாடுகள்தான் நினைவுக்கு வரும். பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியா பற்றி ஏதாவது ‘கார்ட்டூன்’ வெளியிட்டால், அதில் நிச்சயம் மாடு இடம்பெற்றிருக்கும். இந்தியா மங்கல்யானை ஏவிய போதும் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. பொதுவாக ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள்தான் முன்னோடிகள். இந்தியாவுக்கு முதன்முதலில் ராக்கெட் தொழில் நுட்பத்தைத் தந்ததும் ஃபிரான்ஸ்தான்.
சரி... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கார்ட்டூனுக்கு வருவோம்... அதாவது ஒரு அறை இருக்கிறது. அறைக்குள் ராக்கெட் தொழில் நுட்பத்தில் வளர்ச்சிபெற்ற நாடுகள் இருக்கின்றன. அந்த அறையில் ‘Elite Space Club’ என எழுதப்பட்டிருக்கிறது. கையில் மாடு ஒன்றை பிடித்துக்கும் நபர், அந்த அறையின் கதவைத் தட்டுவார். அவர் மீது ‘இந்தியா' என எழுதப்பட்டிருக்கும். அதாவது ‘மாடு ஓட்டுபவர்கள் எல்லாம் ராக்கெட் ஏவ வந்து விட்டனர்’ என்பதே அந்த கார்ட்டூனின் அர்த்தம். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ‛நியூயார்க் டைம்ஸ்’ மன்னிப்பு கேட்டது.

சரியாக இரண்டே ஆண்டுகளில் அந்த கார்ட்டுனுக்கு ‘இஸ்ரோ’ பதிலடி கொடுத்துள்ளது. அதுவும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களே, தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்த இஸ்ரோவை நாடி வரத் தொடங்கியுள்ளன. பி.எஸ்.எல்.வி. - சி ரக ராக்கெட்டுகள் வழியாக இன்னும் 80 அமெரிக்க செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளன.

இப்போது இந்தியாவின் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ், 'நியூயார்க் டைம்ஸ்’-ன் கார்ட்டூனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. டைம்ஸ்-ன் கார்ட்டூன் சொல்வது இதுதான்... ஓர் அறை இருக்கிறது. ‘எலைட் கிளப்’ என எழுதப்படிருக்கிறது. உள்ளே விவசாயி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அருகில் மாடு இருக்கிறது. ஏற்கனவே ‘எலைட் கிளப்’ உறுப்பினர்களாக இருந்தவர்கள் கையில் ராக்கெட்டுடன் வந்து ‘எலைட் கிளப்’ வாயிலைத் தட்டுகிறார்கள். ‘எலைட் கிளப்‘ உறுப்பினர்களை இந்தியா வெளியேற்றி விட்டது என்கிறது இந்தக் கார்ட்டூன்.

சந்தீப் அத்வர்யூ-வின் இந்தக் கார்ட்டூன் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. உலகம் முழுக்கவுள்ள இந்தியர்கள் இந்த கார்ட்டூனை பரப்பி அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர். பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாங்கள்தான் முதலிடம் என மார் தட்டும் அமெரிக்காவுக்கு, மூன்று இந்தியப் பெண்கள்தான் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டை ஏவி பதிலடி கொடுத்துள்ளனர். அதில் சீதா சோமசுந்தரம் என்ற தமிழரும் இருக்கிறார். அந்த வகையில் நாமும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மற்ற இருவர் மினால் ரோகித், நந்தினி ஹரிவாத். இதில் நந்தினி ஹரிவாத் மங்கல்யானுக்கும் திட்ட மேலாளராக இருந்தவர்.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் உலகத்துக்கே இந்தியாதான் முன்னோடி. முதன் முதலாக ராக்கெட் குண்டை ஏவியதும் ஒரு இந்தியர்தான். 1780-ல் திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் குண்டூர் அருகே பொல்லிலூர் என்ற இடத்தில் கடும் போர். அப்போது மூங்கிலினால் உருவாக்கிய ராக்கெட் குண்டுகளை திப்பு படையினர் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் ராக்கெட்டுகளால் நிலை குலைந்த ஆங்கிலேயப் படை புறமுதுகிட்டு ஓடியது. போர் முடிந்ததும் அந்த இடத்துக்கு வந்த, பிரிட்டன் படையினர் சிதறிக் கிடந்த, மூங்கில் ராக்கெட்டுகளின் பாகங்களைப் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று ஆராய்ந்தது தனிக் கதை. லண்டன் அருகே உல்ரிச் என்ற இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில், அந்த மூங்கில் ராக்கெட்டுகளின் பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் விர்ஜினியாவில் உள்ள நாசாவின் ராக்கெட் எரிபொருள் தயாரிப்பு மையத்தில், திப்பு சுல்தானின் படைகள் ஆங்கிலேயருடன் போரிடுவது போன்ற ஓவியம் இடம்பெற்றதும் இதன் காரணமாகவே. உலகத்துக்கே ராக்கெட் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்திய இந்தியர்களைத்தான் ‘நியூயார்க் டைம்ஸ்’ கிண்டல் செய்தது.

விண்வெளியில் வெற்றிபெற இரு விஷயங்கள் முக்கியம். ஒன்று செயற்கை கோள். மற்றொன்று அதனை ஏவும் Launch Vehicle - என அழைக்கப்படும் ராக்கெட்டுகள். கடந்த 1970-ம் ஆண்டு இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் கால் வைத்தது. PSLV ராக்கெட்டுகளுக்கு தேவையான ‘விகிங் இன்ஜின்’ தொழில்நுட்பத்தை ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு அளித்தது. அதனை இந்திய விஞ்ஞானிகள் மேம்படுத்தி உள்நாட்டிலேயே ராக்கெட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினர். எஸ்.எல்.வி-3 (Satellite Launch Vehicle3-) அடுத்து ஏ. எஸ்.எல்.வி. (ASLV- Augmented Satellite Launch Vehicle) பி. எஸ்.எல்.வி. (PSLV -Polar Satellite Launch Vehicle) ரக ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இதில் PSLV ராக்கெட்டுடன் அதிக சக்திகொண்ட பூஸ்டர்களையும், பெரிய பெரிய மோட்டார்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட PSLV-XL உதவியுடன்தான் ‘சந்திரயான் -1’ சந்திரனுக்குச் சென்றது.

தற்போது அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ‘கிரயோஜினிக்’ தொழில்நுட்பத்தில் ஜி. எஸ்.எல்.வி. (GSLV- Geosynchronous Satellite Launch Vehicle). அடுத்து ஜி. எஸ்.எல்.வி மார்க் -3 (Geosyronous Satellite Launch Vehicle Mark III) தயாரிக்கப்படுகின்றன. இந்த ராக்கெட்டுகள் வழியாக நான்கு டன் எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணுக்கு கொண்டு செல்ல முடியும். இந்த வகை ராக்கெட்டுகளில் இறுதிக் கட்டத்தில் பயன்படும் வகையில், 25 டன் எடை ‘கிரையோஜெனிக்’ எரிபொருள் இருக்கும்.

இந்தியாவில் இருந்து தங்கள் ராக்கெட்டுகளை ஏவுவதற்கு பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன. செலவும் குறைவு, தொடர்ச்சியாக கண்ட வெற்றிகள் ‘இஸ்ரோ’ மீது நம்பிக்கையையும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் கேலிக் கூத்தாக பார்க்கப்பட்ட ஒரு நாடு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் *விண்வெளியும் ஒரு வட்டம்தான்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive