NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

"பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.

நேற்று முன்தினம், திருப்பூர் கதிரவன் மெட்ரிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசிவராமை, ஆறாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை செய்தான். இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டம், குமார் நகர் "இன்பேன்ட் ஜீசஸ்' பள்ளியில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்; மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.


கலெக்டர் ஜெயந்தி பேசுகையில், ""குழந்தைகளிடம் அன்பும், ஆதரவும் காட்ட வேண்டும்; ஆசிரியர்களை முழுமையாக நம்பி, குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். குழந்தைகளை, ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும். மாணவர்களிடம் அன்பாக பழகும் ஆசிரியரை தலைவராக கொண்டு, பள்ளிதோறும் ஆசிரியர்களை கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்க வேண்டும். அக்கமிட்டி மூலம் மாணவர்களுக்கு வாரந்தோறும் "கவுன்சிலிங்' தர வேண்டும். பள்ளியில், மறைவிடம் இருக்கக்கூடாது. திறந்தவெளி கிணறு இருந்தால் உடனடியாக மூட வேண்டும். குறும்பு செய்யும் மாணவர்களை கண்டறிந்து, தனியாக "கவுன்சிலிங்' தர வேண்டும்,'' என்றார்.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் பேசுகையில், ""குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர்களை ஒருமுகப் படுத்துதல் முக்கியம். "படி படி' என, துன்புறுத்தாமல், படிக்க வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். நகைச்சுவையாக கல்வி கற்பிக்க வேண்டும்,'' என்றார்.


நீதிபோதனை வகுப்பு தேவை
உளவியல் நிபுணர் அருள்வடிவு பேசுகையில், ""குழந்தைகளின் குடும்ப பின்னணி, பெற்றோர், உறவினர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது, குழந்தையை பற்றி அறிந்து கொள்ள உதவும். இன்றைய குழந்தைகள், பாடப்புத்தகங்களை தவிர, மற்ற புத்தகங்களை படிப்பதில்லை. நீதி போதனை வகுப்பு நடத்தி, பிரச்னை ஏற்படும்போது, அதற்கான தீர்வு என்ன என்பதை விளக்க வேண்டும். நற்பண்புகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளின் முன், பெற்றோர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்; தகாத வார்த்தை பேசினால், அவர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும்,'' என்றார். கூட்டத்தில், தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


"விளையாட அனுமதியுங்க' மனநல மருத்துவர் ரமேஷ் பரமானந்தம் கூறியதாவது: இதுபோன்ற சம்பவத்துக்கு பெரிதும் காரணம், "டிவி' மற்றும் சினிமா போன்றவற்றில் வெளிப்படும் வன்முறைகளே. குழந்தைகளை வெளியே விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை. கீழே விழுந்து காயமேற்படும் என கூறி, வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், "டிவி', மொபைல்போனுக்கு, குழந்தைகள் அடிமையாகி, நேரத்தை செலவிடுகின்றனர். தற்போது, கார்ட்டூன் சேனல்களில் கூட வன்முறை, சண்டை காட்சிகள் வந்து விட்டன. மொபைல் போன்களிலும் சண்டைகள், துப்பாக்கி சுடுதல் என, வன்முறை விளையாட்டுகள் அதிகமுள்ளன. இது, குழந்தைகளின் மனதில் வன்முறை குணத்தை ஏற்படுத்தும்.


குழு விளையாட்டுகளில் ஈடுபடும்போது, வெற்றி, தோல்வியை சகஜமாக எடுக்கும் மனநிலை; விட்டுத்தரும் மனப்பாங்கு வரும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற குணம், வெறியாகும் மாறும் போதே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. எதையும் அன்பாக கற்றுத்தர வேண்டும்; ஆக்ரோஷம் என்பது ஆரோக்கியம் அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.


தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளி நேரம் முடிந்ததும், ஆள் நடமாற்ற பகுதியில், "ஒன் டு ஒன்' என, மாணவர்கள் தங்களுக்குள் மோதும் போக்கு உள்ளது. இதற்குமுன், பள்ளிகளில் நன்னெறி கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன; தற்போது கிடையாது.


பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை, ஆசிரியர்களின் கவனமின்மை ஆகியன, மாணவர்களை தடம் மாற வைக்கிறது. ஒழுக்க கல்வி, விளையாட்டு நேரங்களிலும், மாணவர்கள் படிக்க வைக்கின்றனர். அதனால், மாணவர் மனதில் விட்டுக் கொடுக்கும் தன்மை, ஒழுக்க முறைகள் மறைந்து வருகின்றன. கல்வித்துறை, மறுகோணத்தில் சிந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive