NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்

        மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 23.55 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும்.

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6-ஆவது ஊதியக் குழு 20 சதவீத ஊதிய உயர்வு அளிக்க கடந்த முறை பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அதை 2 மடங்கு அதிகரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்கு நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-ஆவது ஊதியக் குழுவை கடந்த 2014-ஆம் ஆண்டு அமைத்தது.
இந்தக் குழு, 900 பக்கங்களைக் கொண்ட தனது பரிந்துரைகளை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அளித்தது. அதில், இளநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை 14.27 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், ஒட்டுமொத்த ஊதியம் மற்றும் இதர படிகள், ஓய்வூதியத்தை 23.55 சதவீதம் உயர்த்தவும் பரிந்துரைத்திருந்தது. கடந்த 70 ஆண்டுகளில், இது மிகவும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு பரிந்துரையாகும்.
இதையடுத்து, 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கு மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே. சின்ஹா தலைமையில் செயலர்கள் குழுவை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அமைத்தது. இக்குழு பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து தனது இறுதி அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் அண்மையில் அளித்தது. அதில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.23,500-ஆகவும், அதிகபட்ச ஊதியத்தை ரூ.3.25 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.7,000-லிருந்து ரூ.18,000-ஆகவும், மாதாந்திர அதிகபட்ச ஊதியத்தை ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்ற 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது சுட்டுரை பக்கத்தில் பின்னர் வெளியிட்ட பதிவுகளில், "7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், படிகள் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது' என்றார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, புதிதாக ஐஏஎஸ் பணியில் சேரும் அதிகாரியின் ஊதியம் ரூ.56,000-ஆக அதிகரிக்கிறது. இதற்கு முன்பு, அப்பதவிக்கு ரூ.23,000 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல், ராணுவ வீரரின் ஊதியமும் ரூ.8,460-லிருந்து ரூ.21,700-ஆக அதிகரிக்கிறது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு கூறியபோது, பல்வேறு அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைக்கால நிதியில் இருந்து 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.
முக்கிய அம்சங்கள்...
* அமலாகும் தேதி: 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி
* ஒட்டுமொத்த ஊதியம், இதர படிகள், ஓய்வூதியங்கள் 23.55% உயர்வு
* குறைந்தபட்ச ஊதியம்: மாதந்தோறும் ரூ.18,000
* அதிகபட்ச ஊதியம்: உயர்நிலை அதிகாரிகளுக்கு ரூ.2.25 லட்சம்; மத்திய அமைச்சரவை செயலருக்கு ரூ.2.50 லட்சம்
* நிதிச் சுமைகள்: 2016-17ஆம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.1,02,100 கோடி செலவு (ஊதியத்துக்கு ரூ.39,100 கோடி. இதர படிகளுக்கு ரூ.29,300 கோடி. ஓய்வூதியத்துக்கு ரூ.33,700 கோடி)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive