NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?

       நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று இருக்கிறீர்களா...?  ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான் விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்.

 ஆம். நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்கள் பெற்றிருந்தாலும்,  நீங்கள் உயர் கல்வியில் சேர இன்னொரு தகுதிதேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான், நீங்கள் விரும்பிய படிப்பைபடிக்க முடியும்.என்ன... கலை படிப்பில் சேர தகுதி தேர்வா? மருத்துவத்திற்கே தகுதி தேர்வு கூடாது என போராடி வரும் சூழலில், கலை படிப்பிற்கு ஏன் தகுதி தேர்வு? உளறாதீர்கள் என்கிறீர்களா. இல்லை நான் உளறவில்லை. புதிய கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக வழங்கப்படுள்ள சுப்பிரமணியன் குழு அறிக்கையில் அவ்வாறு தான் உள்ளது.அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டால், நிச்சயம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின், நீங்கள் என்ன படிப்பு படிக்க விரும்பினாலும், அதற்கான தனி தகுதி தேர்வு எழுத வேண்டி நிலை வரும்.

புதிய கல்விக் கொள்கை...:

அண்மையில் பீகார் கல்வி அமைச்சர், இந்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் சமூக ஊடகத்தில்  ‘டியர், புதிய கல்விக் கொள்கையை எப்போது வெளியிடப்போகிறீர்கள்..?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.ஆனால், துரதிருஷ்டமாக புதிய கல்விக் கொள்கை என்ற சொற்றொடர் கவனம் பெறாமல், டியர் என்ற சொல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாதமாக மாறியது. சரி, நாமாவது புதிய கல்விக் கொள்கை மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.

இந்தியாவின் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை நிர்ணயக்க போவது இந்த புதிய கல்விக் கொள்கை தான். இந்தியாவின் கல்வி துறை எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதை வழிக்காட்ட போவதும் இந்த புதிய கல்விக் கொள்கை தான்.இதற்காக மத்திய அரசு  முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது.இந்த குழுவின் பணி, நாடு முழுவதும் பயணித்து மக்களை, ஆசிரியர்களை, கல்வியலாளர்களை சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டு அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும்.அதன் அடிப்படையில் மத்திய அரசு  புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும். சுப்பிரமணியன் குழு அறிக்கையை சமர்பித்துபல மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசு அதை வெளியிடாமல் இருக்கிறது. ஆனால், அந்த 230 பக்க அறிக்கையை பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பு எப்படியோ கைப்பற்றி, தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

என்ன இருக்கிறது அந்த அறிக்கையில்...?

அந்த அறிக்கை குறித்து பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசிய போது, “அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும், கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதாகவே இருக்கிறது.அதாவது, இந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், மத்திய அரசு தான் கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும். அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் தான் மாநில அரசிற்கு இருக்கும்.அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகாரம் நகைப்பிற்குரியதாகவும் மாறும். மாநில அரசால் வைக்கப்படும் தேர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போகும்.பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கு எந்த மதிப்பும் இருக்காது. எந்த படிப்பில் சேர வேண்டுமென்றாலும், அதற்கான தனி தகுதி தேர்வு இருக்கும். அதில் வெற்றிபெற்றால் தான், மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான படிப்பில் சேர முடியும்” என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்,

சரி.. இந்த அறிக்கை எப்படி தயார் செய்யப்பட்டது?

இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வட்ட அளவில்  கூட்டங்கள்நடத்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியலாளார்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, இந்த அறிக்கையை தயார் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் யாரையும் சந்தித்து கருத்து கேட்டதாக தெரியவில்லை.கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில்ஏறத்தாழ 20,000 பேரை சந்தித்து, இந்த புதிய கல்வி கொள்கை குறித்து உரையாடினோம்.அவர்களிடம் புதிய கல்வி கொள்கை குறித்து உங்களிடம் ஏதேனும் கருத்து கேட்கப்பட்டதாஎன்று கேட்டோம். ஆனால், அவர்கள் யாருக்கும் புதிய கல்வி கொள்கையை இந்தியா வடிமைக்கிறது என்பதே தெரியவில்லை. அதாவது யாரிடமும் கருத்துக் கேட்கப் படவில்லை.

யாரிடமும் கருத்துக் கேட்கபடவில்லையா ?

மத்திய அரசிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் வேண்டுமானால் கருத்து கேட்கப்பட்டிருக்கலாம். அந்த குழு, மக்களின் கருத்தை கேட்க தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மக்களைசந்தித்து கருத்து கேட்கவில்லை. மக்களின் கருத்தை பெறாமல் ஒரு புதிய கொள்கையை வடிவமைப்பது ஜனநாயக படுகொலை.

இந்த அறிக்கையில் வேறு என்ன பரிந்துரைகள் இருக்கிறது ?

அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும்பட்சத்தில், இந்த அறிக்கை அதிகாரம் முழுவதையும் மத்திய அரசின் கைகளில் திணிக்கிறது. மத்திய அரசின் விருப்பமும் அதுவாக தான் இருக்கிறது.

கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா...?

இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, புதியகல்விக் கொள்கை வடிவமைக்கப்படும்பட்சத்தில்,  மத்திய அரசு  உருவாக்கும் பாடத்திட்டத்தை, மாநில அரசுபின்பற்றும் நிலை ஏற்படும். இந்தியா பல இனங்கள், பல கலாச்சாரங்களை கொண்ட நாடு. வடகிழக்கில் உள்ள கலாச்சாரம் வேறு, தமிழ் நாட்டின் கலாச்சாரம் வேறு.இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு உருவாக்கும் பாடத்திட்டத்தை மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென்று கட்டாயப்படுத்தினால், விளைவுகள் படுமோசமானதாக இருக்கும். இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரானது.கல்வி நிர்வாகப் பணிக்கு ‘இந்திய கல்வி பணித் தேர்வு (IES)’ என்ற பரிந்துரையையும்வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இனி கல்வி துறையை நிர்வகிப்பதில் கல்வியாளர்களின் பங்களிப்பு என்பது குறைந்து, நிர்வாகிகளின் பங்களிப்பு அதிகமாகும்.புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் குழுவே முழுக்க நிர்வாகிகளை கொண்ட குழுவாக தான் இருக்கிறது. அதில் உள்ள ராஜ்புட் ஒருவரை தவிர மற்ற யாரும் கல்வியாளர்கள் இல்லை.கல்வியாளர்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு குழு கல்வி குறித்த ஒரு கொள்கையை வடிவமைத்தால் இப்படி தான் இருக்கும்.

நம் கோரிக்கைகள் என்ன...?

மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும். உடனடியாக இந்த குழுவின் அறிக்கையை வெளியிட்டு, கல்வியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,  பெற்றோர்கள் ஆகியோருடன்  விவாதம் நடத்தி, அவர்களின் கருத்தினை இப்போதாவது பெற வேண்டும் என்பது தான் நமது பிரதான கோரிக்கை. அது மட்டுமல்ல, கல்வித் துறையில் மாநிலத்தின் அதிகாரங்கள் முழுவதுமாக பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் மாநில அரசும் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி-விகடன்
- மு. நியாஸ் அகமது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive