இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘நிர்பயா’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது!!!

     இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘நிர்பயா’ ஏவுகணையின் 4-வது சோதனை தோல்வியில் முடிந்தது.  
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் நடந்த ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும் ‘நிர்பயா’ ஏவுகணை சோதனையானது தோல்வியில் முடிந்தது என பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளன. இன்று ஏவப்பட்ட ஏவுகணையானது நிர்ணயக்கப்பட்ட பாதையில் பயணிக்கவில்லை என கூறப்படுகிறது. நிர்பயாவின் முதல் நிலையில் பூஸ்டர் எஞ்ஜின் செயல்பட தொடங்கியது. ஏவுதளத்தில் இருந்து ஏவுகணையானது புறப்பட்டது. ஆனால் பயணிக்க தொடங்கிய சுமார் 2 நிமிடங்களுக்குள் ஏவுகணையானது திசைமாறி ஒரு பகுதியாக செல்ல தொடங்கியது, என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் அழிக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.‘நிர்பயா’ ஏவுகணையை வான், நிலம், கடல் ஆகிய 3 இடங்களில் இருந்தும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) நமது ஆயுதங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து அதனை மேம்படுத்தி வருகிறது. பெங்களூரில் உள்ள இதன் துணை நிறுவனமான ஏரோநாடிக்கல் மேம்பாட்டு அமைப்பு, பைலட் இல்லாமல் எதிரியின் தளங்களை தாக்கக் கூடிய ‘நிர்பயா’ என்ற ஏவுகணையை உருவாக்கியது. இதை ஐதராபாத்தில் உள்ள ‘இமாரத்’ ஆய்வு மையம் மேலும் மேம்படுத்தி மெருகூட்டியது. போர் விமானம் போலவே இருக்கும் ‘நிர்பயா’ ஏவுகணை குண்டுகளை வீசும் திறன் உடையது. ரிமோட் மூலம் இயக்கலாம். தாக்குதல் நடத்தாமல், புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் கொண்டு வர வைக்கவும் முடியும். குண்டுகள் வீச்சு மற்றும் இருப்பிடம் திரும்பும் சோதனையின்றி இலக்கை தாக்கி அழிக்கும் சோதனை மட்டுமே நடத்தப்படுகிறது. எரிபொருளாக ‘ஏவியேஷன் கெரசின்’ பயன்படுத்தப்படுகிறது. முதலில் பூஸ்டர் இன்ஜினாலும் பிறகு டர்போ ஜெட் இன்ஜினாலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.  ‘நிர்பயா’ ஏவுகணை 1000 கி.மீ. வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் சக்தி படைத்தது. இது அமெரிக்காவின் ‘டொமஹாக்’ ஏவுகணைக்கு சமமானது. 700 கி.மீ. தூரம் செல்லத்தக்க ‘பாபர்’ என்ற ஏவுகணை பாகிஸ்தானிடம் உள்ளது. அக்னி ஏவுகணை வரிசையில் 3-வது ஏவுகணையாக ‘நிர்பயா’ உருவாக்கப்பட்டுள்ளது. அக்னி மற்றும் நீருக்கு அடியில் செல்லக்கூடிய கே-15/பி05 ஆகியவை ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  முந்தைய சோதனைகள் முதல்முறையாக  2013ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஏவப்பட்ட போது அடிப்படை இலக்குகளை வெற்றிகரமாக எட்டிய ஏவுகணை 20 நிமிட பயணப்பாதையைத் தாண்டிய நிலையில் அதன் ஏவு பாதையில் இருந்து விலகியது. அதனால் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏவுகனையில் முதல் நிலை மற்றும் இறக்கை விரிப்பு ஆகிய அடிப்படை நூட்பங்களில் வெற்றிகரமாக செயல்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெற்ற சோதனையானது மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. நிர்ணயம் செய்யப்பட்ட 800 கி.மீ. என்ற தொலைவைவிடவும் அதிகமாக 1,010 கிலோ மீட்டர் வரையில் சென்றது. இந்திய விமானப்படை விமானம் பின் தொடர்ந்து சென்று வீடியோ எடுத்தது. மூன்றாவது முறையாக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி நடைபெற்றது அப்போது பாதுகாப்பு எல்லைக்குள் விமானம் போன்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.

Share this